துக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கவிஞர் ரமா ராமநாதனுக்கு தமிழ் செம்மல் விருது கிடைத்துள்ளது. கவிஞர் ரமா ராமநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார். கவியரங்கம், பட்டிமன்றம், தனிப்பேச்சு உள்ளிட்ட மேடை நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். இவர் எழுதிய குயிலின் நிறம் என்ற கவிதை நூல் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசைப் பெற்றுள்ளது. இந்தப் புத்தகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, வட்டார சுகாதார மேற்பார்வையாளராக அரசுப் பணியில் இருந்து வரும் இவருக்கு, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது கிடைத்துள்ளது. விருதினை செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சென்னையில் நடைபெற்ற விழாவில், கடந்த மார்ச் 1 அன்று வழங்கினார். விருது பெற்ற கவிஞர் ரமா ராமநாதனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.