தரங்கம்பாடி, மார்ச் 2- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள பொறையார் காவல் நிலையம் அருகில் தரங்கம்பாடி வட்டாட்சியர் தங்கி பணி செய்ய சுமார் 45 லட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்பு கடந்த ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. குடியிருப்பு திறக்கப்பட்டது முதல் 3 வட்டாட்சியர்கள் பணியாற்றியுள்ளனர். இதில், எவரும் அந்த குடியிருப்பில் தங்குவதில்லை. தரங்கம்பாடி வட்டம் முழுவதும் விவசாய கிராமபுறங்களையும், கடலோர கிராமங்களையும் உள்ளடக்கியது. பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும் நிலையில் மக்கள் பணி செய்ய அரசு பல லட்ச ரூபாய்களில் கட்டிய குடியிருப்பு, கேட்பாரற்று பூட்டியே கிடப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றியக்குழு தெரிவித்துள்ளது. மேலும், புதிய மாவட்ட ஆட்சியராவது உரிய நடவடிக்கை எடுத்து, வட்டாட்சியர் குடியிருப்பை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.