மாற்றுத்திறனாளிகள் 110 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலான 110 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினர். தொடர்ந்து, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் 303 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் பல்வேறு வகையான ஊன்றுகோல்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றாட வாழ்வியலுக்கான உபகரணங்கள், பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செல்போன், பிரெய்லி கிட், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள், காதுக்குப்பின் அணியும் காதொலி கருவி, காலிபர், செயற்கை அவயங்கள் (கை, கால்) என பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஓரிட சேவை மையத்திற்கு வர இயலாத சிறப்பு குழந்தைகளுக்கு, இல்லம் தேடி பேச்சு பயிற்சி, தசைப்பயிற்சி, கண் மற்றும் செவிதிறன் பரிசோதனை உள்ளிட்ட சேவைகளை வழங்கிடும் வகையில் தமிழக முதல்வர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வழங்கிய வாகனத்தினை, அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அதனை பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.