பெரம்பலூர், மார்ச் 1- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காததைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கமிட்டனர். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை, மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர்கள் சத்தியசீலன், ராஜா, விவசாய தொழிலாளர்கள் சங்க ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் குமார், மாதர் சங்க நிர்வாகி சங்கீதா, சின்னம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காடூர் துணைச்செயலாளர் அஜித், தி.க. மாவட்டத் தலைவர் தங்கராசு, மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விவசாயிகள் பேரவைத் தலைவர். வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.