பெரம்பலூரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், பிப்.24- “தேசிய கல்விக் கொள்கை” என்ற பெயரால் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, மா.கம்யூ, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தி.க. மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழரசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மார்ச் 1-இல் போராட்டம் நடத்த விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு
பொன்னமராவதி, பிப்.24- பொன்னமராவதியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழு கூட்டம் அழகிய நாச்சியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கட்டையாண்டிபட்டி பழனியப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. சலோமி, ஒன்றியச் செயலாளர் ராமசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் 2025 ஆம் வருடத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு செய்து 20 கிளைகள் உருவாக்குவது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 1 ஆம் தேதி பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னத்துரை கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து பகுதி விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தின் கோரிக்கைகளை வெற்றி பெற திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜகபர்அலி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்
புதுக்கோட்டை, பிப்.24- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, சமூக ஆர்வலர் ஜகபர்அலி, லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர்அலி. சமூக ஆர்வலரான இவர், இந்தப் பகுதியிலுள்ள சட்டவிரோத குவாரிகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜன.17 ஆம் தேதி இவர், லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆர்ஆர் கிரஷர்ஸ் உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசு மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராசு, ராமையா மற்றும் முருகானந்தம் ஆகிய 3 பேரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு சிபிசிஐடி போலீஸார் பரிந்துரை செய்தனர். இந்தப் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஞாயி்ற்றுக்கிழமை உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரும், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.