திருச்சிராப்பள்ளி, பிப்.24- திருச்சி ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அருகில், கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட புதிய தடுப்பணையை உடனே சரிசெய்ய வேண்டும். தரம் இல்லாத தடுப்பணையை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஆய்வு செய்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணையால் மீண்டும் உயிர் பலி ஏற்படாமல் இருக்க துரித நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம் ஆகியோர் பேசினர். இதில், நிர்வாகிகள் வீரமுத்து, ரகுபதி, கோவிந்தன், சீனிவாசன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணையை தமிழ்நாடு அரசு கட்டியது. சமீபத்தில் ஆற்றின் நீர்வரத்து அதிகமாக வந்ததால், புதிதாக கட்டிய தரம் இல்லாத தடுப்பணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பணை பகுதியில் பல பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் இருக்க, உடைந்த தடுப்பணையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய மாவட்ட ஆட்சியர் ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், புதிய தடுப்பணையை ஆய்வு செய்த அதிகாரிகள் மீதும் மற்றும் ஒப்பந்ததாரர் மீதும் விசாரணை செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணை உடைந்ததால் ஆற்றின் ஒரே பக்கமாக நீர் செல்வதால் கரையையொட்டி மண் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, உடனடியாக சரி செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.