districts

திருச்சி முக்கிய செய்திகள்

முள்ளியாற்றின் குறுக்கே உள்ள  கம்பி பாலத்தை சரி செய்ய வேண்டும் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.26 - முள்ளியாற்றின் குறுக்கே உள்ள கம்பி பாலத்தை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள்,  சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.  கோரிக்கைகள் குறித்து பேசுகையில், “கொசு மருந்து அடிக்க வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு செல்லும் முள்ளியாற்றின் குறுக்கே உள்ள கம்பி பாலத்தை சரி செய்ய வேண்டும். பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனே மாற்ற வேண்டும்.  நாகை-வேதை சாலையில் இசிஆர் ரவுண்டானா அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர வேண்டும். நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைப்பட்டியல் பெயர் பலகை வைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.  இதற்கு பதிலளித்து பேசிய நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், “நகராட்சிப் பகுதியில் மழைக்கால முன்னேற்பாடுகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். இந்தாண்டு இறுதிக்குள், திருத்துறைப்பூண்டியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும்” என்றார்.  முன்னதாக, கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஒரத்தநாடு அருகே இரு கோவில்களுக்கு சொந்தமான  ரூ.13.79 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

தஞ்சாவூர், அக்.27 -  ஒரத்தநாடு அருகே, இரு கோவில்களுக்கு சொந்தமான ரூ.13.79 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு தாலுகா மண்டலக்கோட்டை நவநீத கிருஷ்ணசாமி (பஜனை மடம்) கோவிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை வருவாய் கிராமத்தில் மொத்தம் 2.55 ஏக்கர் பரப்பளவுள்ள புன்செய் நிலங்கள் உள்ளன.  மேலும் கலிதீர்த்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமாக மண்டலக்கோட்டை கிராமத்தில் மொத்தம் 3.58 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இரு கோவில்களுக்கு சொந்தமாக மொத்தம் 6.13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் வழி காட்டுதலின்படி தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியர் பார்த்தசாரதி முன்னிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஒரத்தநாடு சரக ஆய்வாளர் மற்றும் கோவில் செயல் அலுவலர் பொம்மு துரை, கோவில்களின் பணியாளர்கள் மூலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு (மீட்கப்பட்டு), நிரந்தர அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.  இந்த நிலங்களின் மொத்த வழிகாட்டி மதிப்பின்படி ரூ.13.79 லட்சம் ஆகும். நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது என அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிராமச் சாலைகளை மேம்படுத்த ரூ.84 கோடி ஒதுக்கீடு

புதுக்கோட்டை, அக்.27 புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேம்படுத்துவதற்கு ரூ.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.  இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கிராமப்புற சாலைகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், பிரதான சாலைகளோடு இணைக்கக் கூடிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு கிராமச் சாலைகள் பிரிவு மூலம் சாலை மேம்படுத்தப்படுகிறது.  அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் சுமார் 77 கிலோ மீட்டர் நீளத்துக்கு, 31 சாலைகளை மேற்கொள்வதற்கு ரூ.84.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச நிதியைக் கொண்டு மட்டுமே கிராமச் சாலைகளை ஊரக வளர்ச்சித் துறை பராமரித்து வருகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிப்பதால், குறிப்பிட்ட சில கிராமச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. பெரும்பாலும் அவை பிரதான சாலைகளை இணைக்கக் கூடிய சாலைகளாக இருக்கின்றன. கனரக வாகனங்களும் செல்வதால் சாலை அடிக்கடி சேதம் அடைகிறது. இதற்கு ஏற்ற வகையில் ஊரக வளர்ச்சித் துறையால் கூடுதல் நிதி ஒதுக்கி சாலையை மேம்படுத்த இயலாது. ஆகையால், நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு கிராமச் சாலை பிரவு மூலம் சாலையை அகலப்படுத்துதல், பாலம் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டி தரமான சாலை அமைக்கப்படுகிறது. இதுபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் வடுகப்பட்டியில் 2 கிலோ மீட்டர், மெய்க்குடிப்பட்டியில் சுமார் 2.6 கி.மீட்டர், கார்கமலத்தில் 3.6 கி.மீட்டர், வடக்கு அம்மாபட்டினத்தில் 2.5 கி.மீட்டர், குளத்துக்குடியிருப்பில் 4 கி.மீட்டர் சாலை உட்பட மாவட்டத்தில் 31 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுமார் 77 கி.மீட்டருக்கு சாலை அமைக்க ரூ.84.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணி தொடங்கும் என்றனர்.

தேவையற்ற தடுப்புகளை  அகற்ற சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.27 - தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள தேவை யற்ற தடுப்புகளை அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் புதுகை பாண்டியன் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்ப தாவது: தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை நகர்மன்றம், மேல ராஜவீதியில் உள்ள தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல ராஜவீதி, வடக்கு  ராஜ வீதிகளில் பேருந்து போக்குவரத்தும் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. இதனால், நகரத்தின் முக்கியப் பகுதிகளில் வெகு தொலைவில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்து மற்றும் வாகனங்களில் வருவோர் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய சிரமம் உள்ளது. மக்கள் வாங்கிய பொருட்களை தூக்கிச் செல்ல முடியா மல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பந்தம்  இல்லாத இடத்தில் நிறுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. எனவே, மக்களைப் பாதிக்கும் வகையில் உள்ள  தேவையற்ற தடுப்புகளை அகற்றி வாகனப் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமயத்தில் எரிவாயு தகனமேடை  அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு

புதுக்கோட்டை, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  இதுகுறித்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழப்போரின் உடல்களை எரியூட்டுவதற்கு ஒவ்வொரு ஊரிலும், பல்வேறு இடங்களில் மயானங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், புதுக்கோட்டை  மற்றும் அறந்தாங்கி நகராட்சியில் எரிவாயு தகன  மேடைகள் பயன்பாட்டில் உள்ளன. தவிர, பொன்னமரா வதி பேரூராட்சியில் தகனமேடை அமைக்க நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. பிற பேரூராட்சிகளிலும் தகனமேடை  அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வரு கிறது.  தற்போது முதன் முறையாக ஊரகப் பகுதிகளில் திரு மயம் ஊராட்சியில் தகனமேடை அமைக்க ரூ.2 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த  அறிவிக்கையும் விடப்பட்டுள்ளது.  இதில், ஊரக  வளர்ச்சித் துறை மூலம் கட்டுமானப் பணி மேற்கொள்ளப் பட உள்ளது. இதைக் கட்டுவதற்கு காரைக்குடி நெடுஞ் சாலை ஓரம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கடற்கரையில் கிடந்த ரூ.2 கோடி போதைப் பொருள்

தஞ்சாவூர், அக்.27 - தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கடற்கரையில் பெரிய பாலித்தீன் பையில்,  மர்ம பொருள் கிடப்பதாக, கடலோர காவல் குழுமத் திற்கு வெள்ளிக்கிழமை மாலை மீனவர்கள் சிலர் தகவல்  அளித்தனர். இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீ சார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்  சென்று, பாலித்தீன் பையில் இருந்த அந்த மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் பாலித்தீன்  பையில் 900 கிராம் எடையிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதன்  மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட போதை பொருளை, கடலோர காவல் குழுமத்தினர், தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள்  சனிக்கிழமை இதனை ஆய்வகத்திற்கு அனுப்பி விசா ரித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு  அலுவலர் கூறுகையில், “கடல்வழியாக மிதந்து வந்தாக மீனவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கடல் வழியாக மெத்தம்பேட்டமைன் கடத்தல் அதிகளவில் நடந்து வரும் நிலையில், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேது பாவாசத்திரம் போன்ற 32 மீனவக் கிராமங்களில் இது வரை இதுபோன்ற போதை பொருள் தொடர்பாக புகார்  எழுந்தது இல்லை. கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடற்கரை யில் புதைத்து வைப்பது சில நேரங்களில் நடக்கும். இருப்பினும், கடல்வழி போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம். கடலோர காவல் குழுமத்தினரும் விசாரித்து வருகின்றனர்” என தெரி வித்தனர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், அக்.28 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்  துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  ஏலத்தில் பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதி களான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 41 விவசாயிகள் 3 மெட்ரிக் டன்  பருத்தியை விற்ப னைக்கு எடுத்து வந்திருந்தனர். கும்பகோணம் பகுதியைச்  சேர்ந்த 2 வணிகர்கள், அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு  ரூ.6,439, குறைந்தபட்சம் ரூ.5,401, சராசரி ரூ.6,159 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.1.75 லட்சம். ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சா யிணி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சிவானந்த்  முன்னிலை வகித்தார். மேலும் எள், உளுந்து, பச்சைப் பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும்  ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை  செய்துத் தரப்படுகிறது.

கூறைநாடு கூட்டுறவு பட்டாசு கடையில்  கணினி ரசீது வழங்குவதில்லை ஆட்சியர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.27 - கூறைநாட்டில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்கீழ் இயங்கும் பட்டாசுக் கடையில் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக பட்டாசுகளை விற்பனை  செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் (நம்பர்-02 சாலை) உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின்கீழ் உள்ள பட்டாசுக் கடையில் மயிலாடு துறை நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் இக்கடையில் விற்பனை செய்யப்படுகிற பட்டாசுகளுக்கு உரிய கணினி ரசீதை அளிப்பதில்லை என்றும், விலைப்  பட்டியல் நோட்டீசை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல்  ஏமாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் அய்யன் பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் பட்டாசுகளை விற்பனை செய்கின்றனரா? என்பது குறித்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப் பட்ட வெடிகள் வெடிக்கவில்லையென பொதுமக்கள் புகார்  கூறிய நிலையில், தற்போது உரிய ரசீது தராமல் ஏமாற்றுவ தாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இக்கடையில் ஆய்வு மேற்கொள்வதோடு, கடையின் செயல் பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.