திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொன்ற கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் மகேந்திரனுக்கு செந்தமான தோட்டம் உள்ளது.
இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் அருகேயுள்ள நாயக்கனூரைச் சேர்ந்த மூர்த்தி(65), தனது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மதுபோதையில் தந்தை மூர்த்தியை மகன்கள் இருவரும் சேர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சண்முகவேல், வாகன ஓட்டுநர் அழகுராஜாவுடன் சம்பவ இட த்துக்குச் சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளார். பின்னர் காயமடைந்த மூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது, அரிவாளுடன் வந்த மணிகண்டன் சண்முகவேலை வெட்டியதில் அவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல் வாகன ஓட்டுநர் அழகுராஜாவையும் வெட்ட முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பிச்சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த விவரத்தைக் கூறியுள்ளார்.
போலீசார் சம்பவ இட த்துக்கு வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து சண்முகவேலில் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை சரண் அடைந்தனர். தப்பியோடிய மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே உப்பாறு ஓடை பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, இறந்த மணிகண்டனின் உடலை போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்