குன்னத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் பட்டியல் இன மாணவனை, குப்பைக்கு தீ வைக்கும் குழியில் சக மாணவர்கள் தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சாதிய வன்கொடுமை சம்பவத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவர் மீது சக மாணவர்களே தீயில் தூக்கி வீசிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சாதிய வன்மம் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சாகப் பாய்ச்சப்பட்டிருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.
பள்ளிக்கூடங்கள் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய இடங்கள். ஆனால், அங்கே ஒரு மாணவனைச் சாதியைக் காரணம் காட்டி சக மாணவர்களே நெருப்பில் தூக்கி வீச முயன்றிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகிறார்.
மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எஸ்் சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பள்ளி நிர்வாகம் மீது விசாரணை: பள்ளியில் மாணவர்களுக்குள் சாதியப் பாகுபாடு நிலவுவதை முன்கூட்டியே கவனிக்கத் தவறிய பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மருத்துவ உதவி: பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு உயர்தர சிகிச்சை அளிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சமத்துவக் கல்வி: பள்ளிகளில் சாதிய நச்சு பரவுவதைத் தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்ட செயலாளர் ச.மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.