மாணவர்கள் கல்வி கற்பதை தடுக்கும் சங்கிசாமியாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார் என திமுக உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி கோவையில் நடத்த கூட்டத்தில் கோவில் நிதிகளை எடுத்து கல்லூரிகள் கட்டுவது சதிச் செயல் என்று பேசினார். இவரது தவறான பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கு உதாரணமாக பல ஆயிரம் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாகவும் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திய உடுமலை அரசு கலைக்கல்லூரியும் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான நிதி உதவியுடன் துவக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரி உடுமலையில் 1970 இல் துவங்க திட்டமிட்டபோது பழனி கோவில் சார்பில் முதல் நிதியாக ரூ. 1 லட்சம் நன்கொடையாக தரப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுபடி இந்த ‘‘சதி செயலால் ’’ பல ஆயிரம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு அரசு துறைகளில் இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் பதவியில் உள்ளார்கள். இன்னும் குறிப்பிடத்தக்க அம்சம் என்ற வென்றால் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனும் இந்த கல்லூரியில் தான் படித்தார்.
இது குறித்து திமுக உடுமலை நகர செயலாளர் சி. வேலுச்சாமி கூறுகையில் ‘‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ’’ இப்படி தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் தந்து வந்து உள்ளார்கள்.
இதை உணராமல் கிராமப் புற மாணவ மாணவியர் கல்வி கற்பதை விரும்பாத ஆதிக்க மனப்பான்மையுடன் பழனிசாமி பேசியது கடும் கண்டத்திற்கு உரியது. இதன் மூலம் அவர் எந்த பதவிக்கும் தகுதியற்றவர் என்பது உறுதியாகிறது.
இதற்கு உதாரணமாக உடுமலையில் பழனி முருகன் கோவில் நிதியில் இருந்து 1970 இல் துவங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரியில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருந்து கிராம்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகிறார்கள். பழனிசாமி இந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் பேசியது அவரின் சுய ரூபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகள் நல்லாட்சி நடத்திவரும் முதல்வரின் திட்டங்களை குறை சொல்ல முடியாமல் ‘‘கூடா நட்பு கேடில் முடியும் ’’ என்பதை போல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் எதை பேசுவது என்று தெரியாமல் மாணவர்கள் கல்வி கற்பதை தடுக்கும் சங்கிசாமியாக மாறியுள்ளார் முன்னாள் முதல்வர் பழனிசாமி என்று கூறினார்.