தஞ்சாவூர், ஏப்.29-தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோடை காலத்தை யொட்டி பறவைகளுக்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2400 சதுர அடியில் மூன்று அடி ஆழத்தில் குளம் அமைத்துள்ளனர். குளத்திற்கு நீர்த்தேக்க தொட்டி குழாய் வழியாக இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. செம்மண் பகுதி என்பதால், நீர் வீணாகாமல் இருக்க களிமண்ணை கொண்டு குளம் அமைக்கப்பட்டது. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகள் எந்தவித தடையுமின்றி தண்ணீர் பருகி கோடை வெப்பத்தை தணித்து வருகின்றன. இதுகுறித்து துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறிய தாவது; பல்கலைக்கழகத்தில் எப்போ தும் பறவைகளின் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். வளாகத்தில் ஆறு கிணறுகளில், நீர் நிறைந்து வழிந்தோடும். ஆனால் அவை கடந்தபல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகின்றன. இதனால் பறவை உள்ளிட்டஉயிரினங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தன. இதையடுத்து பறவைகளின் தாகம் போக்க ஒரு லட்சம் செலவில், குளம் அமைக்கப்பட்டது. இப்போது இந்த குளத்தில் பறவைகள் தண்ணீர்அருந்துவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. முதற்கட்டமாக இந்த முயற்சியை செய்துள்ளோம். அடுத்ததாக வளாகத்தில் மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு உள்ளேயே குளங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை தலைவர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது; “825 ஏக்கர்பரப்பளவு கொண்ட பல்கலைக்கழ கத்தில், 358 வகையான செடி, கொடி, மரங்கள் உள்ளதால் அடர்ந்த சோலையாக காட்சியளிக்கும். மரங்கள் மட்டும்179 வகை உள்ளது. அத்துடன் 39 வகை வண்ணத்து பூச்சிகளும், 294 பறவை இனங்களும் வசிக்கின்றன. நவம்பர் தொடங்கி மார்ச் வரைபாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்தும் இங்கு பறவைகள் வரும். பரந்து விரிந்த பகுதியில் மூலிகை செடிகள், மரங்கள்,கொடிகளால் சுத்த காற்று வீசுவ தால் இந்த பகுதியை தஞ்சாவூரின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெட்டப்பட்ட குளத்தால் பறவை உள்ளிட்ட உயிரினங்கள் தாகம் தணித்து இனிதே உலா வருகின்றன என்றார்.