districts

img

மேட்டுப்பாளையம் குட்டையில் பிடிபட்ட முதலையை பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விடுவிப்பு!

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டைக்குள் பதுங்கியிருந்த 12 அடி முதலையைப் பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பாக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விடுவித்தனர்..

பட்டக்காரனூர் கிராமத்தின் தடுப்பணை வழியாக செல்லும் மழை நீர் பவானி ஆற்றினை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள  குட்டையில் அண்மையில் பெய்த கன மழையின் போது அடித்து வரப்பட்ட முதலையொன்று இக்குட்டையில் தங்கிவிட்டது.. இந்நிலையில் குட்டையிலிருந்து  அவ்வப்போது முதலை வெளியில் வருவதும் மீண்டும் குட்டைக்குள் சென்று மறைவதுமாக இருப்பதைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனர்.  இது குறித்து நறுமுகை வனச்சரக அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர்  குட்டைக்குள் பதுங்கி இருந்த முதலையைப் பிடிக்கும் பணியை நேற்று முன்தினம் துவங்கினர்.. முதலை உள்ள குட்டையைச் சுற்றி நைலான் வலையைக் கட்டிய வனத்துறையினர்,  இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குட்டையில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். இதனையடுத்து முதலையின் கழுத்து மற்றும் வாய் பகுதியைக் கயிற்றால் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுப் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முதலையைச் சுற்றி வளைத்துப் பிடித்து அதன் கண்களை மூடி சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.

கால்நடை மருத்துவரின் ஆய்விற்குப் பின்னர் பிடிபட்ட 12 அடி நீள பெண் முதலையை பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்..கண் மற்றும் கால் கட்டுப்பாடுகள் அவிழ்க்கப்பட்டவுடன் முதலை தண்ணீர் தேக்கத்தை நோக்கிப் பாய்ந்தோடிச் சென்றது..