டிச.6 - பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் ரயில் பெட்டிகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
டிச.6 - பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வழிபாட்டுத் தளங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகக் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பெட்டிகள், நடைமேடைகள், வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் நுழைவு வாயிலிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் முழுமையான சோதனைப் பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகப்படும் நபர்களையும் காவல்துறையினர் தனியாக அழைத்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் சாதாரண உடையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதே போலக் கோவை மாநகரிலும் காவல்துறையினர் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்