tamilnadu

img

நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள் - சி.ராமலிங்கம்

நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்

அந்த வெள்ளரை கிராமம் காலத்தால் முற்பட்டது. அந்தத் தொன்மையான கிராமத்தின் நடுவே ஆங்காங்கே சிறிய பாறைகள் பூ பூத்தது போல் காட்சியளிக்கும். அந்தப் பாறைகளின் மேல் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த பாத்திமா சிறுமி சொன்னாள் “ஏய் பசங்களா நிலா பாட்டியை கதை சொல்ல கேட்டிருக்கிறேன். வாங்க நாம அந்தபாட்டி வீட்டுக்கு போகலாம்” என்று கூப்பிட்டாள். எல்லோரும் அவர்கள் வீட்டுக்கு குதூகலத்துடன் ஓடினார்கள். வீட்டுக்கு வந்த குழந்தைகள் கூட்டத்தை பார்த்த பாட்டி சந்தோசம் அடைந்தாள். ஒன்று இரண்டு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாட்டி எல்லோரையும் அவர்கள் வீட்டுக்கு முன்பிருந்த அந்த பாறையின் மேல் அமரச் சொன்னாள். அதில் ஒரு பெண் “பாட்டி எங்களுக்கு இப்ப கதை வேணும்” என்று கத்தினாள். “சத்தம் போடாமல் இருங்க. நான் கதை சொல்றேன்” என்று கதையை ஆரம்பித்தாள். எல்லோரும் அமைதியானார்கள். “நீங்க எல்லோரும் வானத்தைப் பாருங்க” என்றாள் பாட்டி.. அன்றைக்கு பௌர்ணமி. முழு நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த நிலாவில் ஒரு பாட்டி வடை சுடுகிறாள் அது தெரியுதா? என்று கேட்டாள். எல்லோரும் தெரியுது என்று கத்தினார்கள். “அந்த நிலா இப்போது தூரத்துக்கு போயிடுச்சு. ரொம்ப காலத்துக்கு முன்னால அது நம்ம கையால தொடர மாதிரி இருந்துச்சாம். நம்ம ஊர்ல பொம்பளைங்க கம்பு இடிக்கிறப்ப அந்த உலக்கை அடிக்கடி நிலாவுல படுமாம். அது அவர்களுக்கு கம்பு இடிக்க சிரமமாக இருந்துச்சாம். அதனால அந்த ஊர் சாமி கிட்ட போய் இந்த நிலாவ உசரத்துக்கு போக வைக்கணும்னு வேண்டிக்கிட்டாங்களாம். சாமியும் நேரே வந்து எவ்வளவு தூரம் போகணும்னு கேட்டுதாம்” . “அப்போ ஒரு பாட்டி சொன்னாளாம் . எட்டு வண்டி நூலு போட்டாலும் எட்டாத தூரத்துக்கு போகணும். பத்து வண்டி நூல் போட்டாலும் பத்தாத தூரத்துக்கு போகணும்னு கேட்டாளாம்” “அப்படீன்னா அது எவ்வளவு தூரம் பாட்டி?ஒரு சிறுமி கேட்டாள்.  “அதாவது ஒரு நூல் கண்ட பிரிச்சு நீட்டினால் எவ்வளவு தூரம் இருக்கும் தெரியுமா?” “அது ரொம்ப தூரமா இருக்கும் பாட்டி”. “அப்படீன்னா ஒரு வண்டில எவ்வளவு நூல் கண்டு ஏத்தலாம். அந்த நூல் கண்டு எல்லாம் ஒன்னோடு ஒன்னா இணைச்சு நீட்னா எவ்வளவு தூரம் இருக்கும். அது மாதிரி எட்டு வண்டி பத்து வண்டி நூல ஒண்ணா கட்டி இழுத்தா எவ்வளவு தூரம் போகும். அவ்வளவு தூரத்துக்கு போகணும்னு சாமிகிட்ட கேட்டாங்க. சாமியும் நிலாவை அவ்வளவு தூரத்துக்கு தள்ளி வச்சாராம்  சாமி அந்த பாட்டியையும் நிலாவோட போய் இருக்க சொன்னாராம். அந்தப் பாட்டி தான் இப்ப நிலாவுல வடை சுட்டு கிட்டு இருக்காங்க.அதைத்தான் நாம இப்ப பார்க்கிறோம்” என்றாள் பாட்டி.  அமுதா கல்லூரியில் படிக்கும் ஒரு பெண். எழுந்து ஒரு கேள்வியை கேட்டார். பாட்டி இதை எதிர்பார்க்கல. “நீ எப்ப இந்த சின்ன பசங்களோட வந்த அமுதா?’ என்று பாட்டி கேட்க நான் நீங்க கதை ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன். பாட்டீன்னு சொன்னா அமுதா. “பாட்டி நீங்க சொன்னது கதை தான். உண்மையா அப்படி நடக்கல. இருந்தாலும் அதுல ஒரு உண்மை இருக்கு” என்று அமுதா சொன்னாள்.  “சரிடீயம்மா.அதை நீயே சொல்லு “என்று சொல்ல, அமுதா உண்மை கதையை பசங்களுக்கு சொல்ல ஆரம்பித்தாள். . “அதாவது பல கோடி வருஷங்களுக்கு முன்னால நிலா பூமிக்கு பக்கத்துல தான் இருந்திருக்கு. அப்போ பூமி வேகமாக சுத்திகிட்டு இருந்தது. அதனால ஒரு நாள் என்பது அன்றைக்கு 17 மணி நேரம் தான். இப்ப நிலா கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இன்னைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு போயிருச்சுன்னு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்க.நிலா இப்படி பக்கத்துல இருந்ததால் அதனுடைய ஈர்ப்பு பூமியின் வேகத்தை குறைச்சு 24 மணியாக்கிடுச்சு”  “அப்புறம் பாட்டி நிலாவுல வடை சுடுறது என்பது கற்பனை கதை. நிலவுல பெரிய பள்ளம், மலைகளெல்லாம் எல்லாம் நிறைய இருக்கு. அதெல்லாம் நாம இங்கே இருந்து பாக்குறதுக்கு பாட்டி வடை சுடுற மாதிரி இருக்கு. இதுதான் உண்மை.” பாட்டி வடை சுடுற கதையை சொல்லலேன்னா நான் இந்த உண்மையை உங்களுக்கு சொல்லி இருக்க முடியாது. அதனால பாட்டிக்கு ஒரு ஓ போடுங்க!