சென்னை:
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து பால் தினகரனுக்கு சொந்தமாக சென்னை, கோவை உட்பட 28 இடங்களில் உள்ள கட்டடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். புதனன்று தொடங்கிய இந்த சோதனை, 2-வது நாளாக வியாழனன்று தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வெள்ளியன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், அறக்கட்டளையில் ஆவணங் களை சரிபார்க்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அறக்கட்டளைக்கென தனி வரி விலக்கு வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு வழங்கப்பட்ட வரி விலக்கில் விதி மீறல்கள் நடந்திருந்தால் அதுவும் வரி ஏய்ப்பாகவே கருதப்படும். இயேசு அழைக்கிறார் அமைப்பிலும் வரி ஏய்ப்பு புகாரில் தான் சோதனை நடைபெறுகிறது. சோதனையில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் பால்தினகரனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து சோதனை நடக்கவிருக்கிறது. முழுமையான விவரங்கள் சோதனை முடிந்த பின்னர் தான் தெரிய வரும் என்றனர் அவர்கள்.