கோவை மாநகரில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கோவை மாநகரில் இயங்கும் 149 தனியார் டவுன் பேருந்துகளில்,129 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.மேலும், வெளியூர் செல்லும் 107 தனியார் பேருந்துகளில் 50 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
ஒவ்வொரு பேருந்திலும் ஐந்து முதல் ஏழு வரையிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத தனியார் பேருந்துகளிலும் இன்னும் மூன்று தினங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இந்த திடீர் ஆய்வின் மூலம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பேருந்துகளில் ஏற்படும் சம்பவங்களைக் கண்காணிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், இந்த நடவடிக்கை பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு உணர்வை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.