districts

சென்னை முக்கிய செய்திகள்

அதீத கனமழை எச்சரிக்கை  தயார் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை, நவ. 27 – ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் நவம்பர் 29, 30 தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து நவ.26ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கனமழை காரணமாக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள், சாலைகள் மற்றும் போக்குவரத்து தடைகளை உடனுக்குடன் கண்டறிந்து காலதாமதமின்றி சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பான்மையான ஏரி குளங்கள் நிரம்பியுள்ளதால் வெள்ள அபாயம் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு எந்த அவசரச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை,யில்  இணையத் தமிழ்ப் பயிலரங்கம்

சென்னை,நவ.27- தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை, மற்றும் தமிழ் விக்கிமூலம் ஆகியவை இணைந்து நடத்திய இணையத் தமிழ்ப் பயிலரங்கத்தின் நிறைவு விழா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் உள்ள தமிழ் மொழித்துறைக் கருத்தரங்கக் கூடத்தில் 21 ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் தமிழ் வளர்ச்சிக் கழக தலைவருமான ம. இராசேந்திரன் தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் சான்றிதழ்களை வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ரெ. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றிய இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை பேராசிரியர் ய. மணிகண்டன் வரவேற்று பேசினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந. அருள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக, நீச்சல்காரன் (தமிழ் விக்கிமீடியா) நன்றி கூறினார்.

4 சட்டத்தொகுப்புகளை திரும்பபெற சென்னை ஆட்சியரிடம் மனு

சென்னை, நவ. 27 - ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கள் சார்பில் வியாழனன்று (நவ.27) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தலைவர்கள் கோரினர். இந்நிகழ்வில் எஸ்.சுந்தரமூர்த்தி (எல்பிஎப்), எஸ் கே.முருகேஷ் (சிஐடியு), மு.சம்பத்(ஏஐடியுசி), சடையாண்டி (ஏஐயுடியுசி), பழனி (யுடியுசி), ஆர்.சம்பத் (டபுள்யுபிடியுசி), சுகுமாரன் (ஐஎன்டியுசி), முனுசாமி (ஏஐசிசிடியு)உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடன் தொல்லை: ரயில் முன்பு  பாய்ந்து வாலிபர் தற்கொலை

சென்னை, நவ. 27- சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6ஆவது தெருவில் வசித்து வந்தவர் கோகுல் பிரசாத் (31). இவரது தந்தை போட்டோ மணி, கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து போனார். முன்னதாக தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கோகுல் பிரசாத் கடன் வாங்கியுள்ளார். தற்போது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு கடன் அதிகமாக வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல் பிரசாத், தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டே எர்ணாவூர் கேட் அருகே சென்றார். பின்னர் தனது நண்பரிடம் ரயில் வருகிறது. நான் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என நண்பருடன் பேசிக்கொண்டே ரயில் முன் பாய்ந்தார். இதில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கோகுல் பிரசாத் உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமத்ரா நிலநடுக்கம் காரணமாக கடற்கரையில் அதிக அலைகள் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடலூர், நவ.27- இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சுமத்ரா தீவுப் பகுதியில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 6.5 ஆக பதிவானது. இதனால், தமிழ்நாட்டின் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் அதிக அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, வெள்ளிக்கிழமை (நவ. 28) இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரையிலான காலகட்டத்தில், நாகூர் முதல் பட்டினச்சேரி வரையிலான பகுதிகளில், 2.7 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை அலைகள் உயரமாக எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள், வலைகள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்ட மீன்பிடிச் சாதனங்களைச் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை குறித்த தகவல், மீனவ கிராமங்களில் உள்ள படகு உரிமையாளர்களுக்குத் தெளிவாகச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு, கடலூர் மாவட்ட மீனவர் துறை உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களைக் கேட்டுக் கொண்டார்.

எஸ்ஐஆர் படிவங்களை டிச. 4-க்குள்  வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, நவ. 27 – தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்ட மன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டி யல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளும் பணி நவ. 4 முதல் நடை பெற்று வருகிறது. இதற்காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்ப வழங்க வேண்டிய கடைசி நாள் டிச.4 ஆகும். வாக்காளர்கள் இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல், தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெறும் என்பதால், வாக்காளர்கள் இதனை உறுதி செய்திட வேண்டும்.மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்டகணக்கீட்டுப் படி வங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் முக்கியத்து வம் வாய்ந்த இந்தப் பணியை சென்னை மாவட்டத்தில் நிறைவேற்றுவ தற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு  மாவட்ட தேர்தல் அலு வலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

நல்லாவூர் ஊராட்சித் தலைவர் மீது ரூ. 9.41 லட்சம் ஊழல் புகார் சிபிஎம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம், நவ.27 –  வானூர் ஊராட்சி ஒன்றியம், நல்லா வூர் ஊராட்சி மன்றத் தலைவர் இ. சாவித்திரி, 11-வது நிதிக் கணக்கில் ரூ.9.41லட்சம் நிதி மோசடி செய்து ஊராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புதனன்று (நவ. 26) மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து அளிக்கப்பட்ட இந்த மனுவில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர் இ.சாவித்திரி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு உடந்தை யாகச் செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊராட்சி மன்றத் தலைவர் கிராம மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு, தரமற்ற முறையில் பணிகளைச் செய்து வருவதாகவும் அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஓ  அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புச் சோதனை:  ரூ. 1.75 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி, நவ.27 –  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செவ்வாயன்று (நவ. 25) நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் போன்ற பணிகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

93 வயதில் கால் துண்டிப்பு தவிர்ப்பு:  வெற்றிகரமாக சிகிச்சையளிப்பு

சென்னை, நவ. 27- சென்னை காவேரி மருத்துவமனையில், காலில் இரத்த ஓட்டம் திடீரெனத் தடைபட்டு (அக்யூட் லிம்ப் இஸ்கெமியா), திசு அழுகல் தொடங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட 93 வயது மூதாட்டிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்தனர். முதிர்ந்த வயதின் காரணமாக அறுவைசிகிச்சையைத் தவிர்த்து, மருத்துவர்கள் ‘கதீட்டர் உதவியுடன் இரத்த உறைவைக் கரைக்கும்’ (CDT) நுட்பத்தைப் பயன்படுத்தினர். இந்தக் குறைவான ஊடுருவல் சிகிச்சை மூலம் ரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு வலி உடனடியாகக் குறைந்ததுடன், மூதாட்டி மறுநாளே நடக்கத் தொடங்கினார். எந்த அறுவைசிகிச்சை வெட்டும் இன்றி, மூன்றாம் நாளில் அவர் வீடு திரும்பினார். சிகிச்சை அளித்த டாக்டர் சேகர், உரிய நேரத்தில் நவீன சிகிச்சை அளித்ததால், இந்த அரிதான நிலையில் அவரது காலைத் துண்டிக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.