சென்னை, பிப். 28- சென்னை மாநகராட்சியின் மண் அள்ளும் லாரியிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் எண்ணூர் விரைவு சாலையில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். திருவொற்றியூர் - எண்ணூர் நெடுஞ்சாலை எல்லையம்மன் கோயில் சந்திப்பில் இருந்து திருவொற்றியூர் சுடுகாடு வரை மாநகராட்சி மண் அள்ளும் இயந்திரம் லாரி மண் அகற்றும் போது லாரியில் உள்ள ஹைட்ராலிக் டியூப் அறுந்து விழுந்துள்ளது. இதனால் லாரியில் இருந்து எண்ணெய் சுமார் 300 மீட்டர் அளவுக்கு எண்ணூர் விரைவு சாலையில் கொட்டியுள்ளது. இதை அறியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாலையில் மண்ணை கொட்டி சீரமைத்தனர்.