சென்னை, பிப். 28 - பதவி உயர்வை பறிக்கின்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சென்னை மாநகராட்சி பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (பிப்.28) பட்டி னப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள நகராட்சி இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் பணிபுரி கின்ற பணியாளர்களின் பதவி உதவி உயர்வை பறிக்கின்ற தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 (யூஎல்பி) ரத்து செய்ய வேண்டும், 2024 - 2025 ஆண்டிற்கான அனைத்து நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதி குழு தலைவர் சி.ருக்மாங்கதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வி.சிவ குமார், மாவட்ட இணை செயலாளர் பி.சீனிவாசன், பகுதி குழு செயலாளர் எஸ்.ரவி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். பின்னர் போராட்டக்குழு தலைவர்கள் நகர்ப்புற நிர்வாக இயக்குநர் எஸ்.சிவ ராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.