சிதம்பரம், ஜன.11- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர்த்திருவிழா ஜனவரி 12ஆம் தேதியும், தரிசன விழா 13-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை காரணம் காட்டி கோவில் தீட்சிதர்கள் கனகசபையில் வழிபட பக்தர்களை அனுமதிக்க சிரமம் ஏற்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இதற்கு தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா என்பவர் கனக சபையில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்த தடையும் இன்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் திருவிழாவை காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல எனவே தமிழக அரசு அரசாணையில் இதுகுறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். தீட்சிதர்கள் அனுமதி மறுத்தால் அனுமதியை மீறி கனக சபையில் ஏறுவோம் என அவரும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் ஜனவரி 11-ஆம் தேதி காலை முதல் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்ட பொதுமக்கள் பக்தர்கள் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.