புதுச்சேரி, ஜன.22- பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாகவும், சங்கராபரணி மற்றும் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளுக்கு புயல் நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.22) சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக ஏனாம் பகுதி விவசாயிகள் 199 பேருக்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் ஜனவரி 6 ஆம் தேதி வழங்கப்பட்டது. காரைக்கால் பகுதி விவசாயிகள் 5020 பேருக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி பகுதி விவ சாயிகள் 7736 பேருக்கு ரூ.12 லட்சத்து 22 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை முதல்வர் ரங்கசாமி விவ சாயிகளுக்கு வழங்கினார். புதுச்சேரி முழுவதும் மொத்தம் 12,955 விவ சாயிகளுக்கு பயிர் பாதிப்புக்கு நிவாரண தொகையாக ரூ.24 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வேளாண் துறை இயக்குனர், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.