தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு அப்பால் கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி உள்ளது ஜவளகிரி மலை. இங்குள்ள அகலக்கோட்டை ஊராட்சிமன்றத்திற்குட்பட்டது கூட்டுவுனிசே கிராமம். இங்குள்ள 55 வீடுகளில் 21 வீடுகள் 1994 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் பட்டியலின மக்களுக்கு கட்டித் தர பட்டதாகும். ஒவ்வொரு வீடும் 436 சதுர அடி நிலத்தில் 356 சதுர அடி அளவில் கட்டப்பட்டதாகும். இந்த குடியிருப்பின் தற்போதைய நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமையில் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மூத்த தலைவர்கள் நாகராஜ் ரெட்டி, டி.எஸ்.பாண்டியன், இளம் தலைவர் புருஷோத்தம ரெட்டி, தளி ஒன்றியச் செயலாளர் நடராஜன்,விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் அனுமப்பா, கிளைச் செயலாளர் சீனிவாச ரெட்டி கிருஷ்ணப்பா,சம்பங்கி ரெட்டி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பல் இளிக்கும் கூரை அப்போது, வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. மேல் கூரை சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தும், கம்பிகள் ஜல்லிகள் பல் இளித்துக் கொண்டிருக்கிறது. பக்கவாட்டு சுவர்கள் பாலம் பாலமாக பிளந்து உள்ளது. இதில் ஒரு நபரது வீடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை காணமுடிந்தது. ஆபத்தான குடிதண்ணீர் தொட்டி மறுபக்கத்தில் தெருவிற்கு அமைப்பு, கழிவுநீர் கால்வாய்,குடிநீர் குழாய் வசதி எதுவும் இல்லை. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் பல இடங்களில் விரிசலடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழும் என்றும் தெரியாது. தண்ணீர் நிரப்பப்படும் தொட்டியும் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. அந்த தண்ணீரை தான் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 30 ஆண்டுகள் கடந்த நிலையில் குருவிக்கூடு போன்ற ஒரே வீட்டுக்குள் பெற்றோர்கள்,வாரிசுகளின் இரண்டு குடும்பங்கள் உட்பட 10 பேர் வரை குடியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதனால் இரவில் தூங்குவதற்கு வீட்டுக்குள் பலகைகள் சாக்குகள் மூலம் மறைப்பு அமைத்துள்ளனர். திருமணமான மகன், மகளை வீட்டுக்குள் தங்க வைத்துவிட்டு வயதான பெற்றோர் வெளியில் படுத்து உறங்கும் அவல நிலை உள்ளது. இரவில் மழை பெய்தால் அனைவரும் வீட்டுக்குள் முக்காடு போட்டுக் கொண்டு உறங்காமல் உட்கார்ந்திருப்பதாக 55 வயதாகும் மகாதேவம்மா வேதனையை வெளிப்படுத்தினார். டிவி இல்லா வீடுகள் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு, வயர்கள் பழுதடைந்துள்ளது பெரும்பாலான நாட்கள் இரவில் இருட்டில் இருக்கும் நிலையே உள்ளது. ஒரு வீட்டில் கூட தொலைக்காட்சி பெட்டி (டிவி) கிடையாது. வாழ்க்கைக்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. காரணம், நிரந்தர கூலி வேலை கூட எதுவும் இல்லை. மூன்றாம் தர பிரஜைகளாக.... குடியிருக்க வீடு, நிலம் இல்லை. இதில், 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெங்களூரு புறநகர் பகுதிகளில் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் மீது தார்ப் பாய்,பாலிதீன்,பேனர் மறைப்புகளால் குடிசை அமைத்து மூன்றாம் தர பிரஜைகள் போல் வாழ்க்கை நடத்தி வருகிறோம் என்றார் 50 வயதாகும் கிருஷ்ணப்பா. இந்த கிராமத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் 15 குடும்பம் கீற்றுகளால் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறது. அந்த கூரைகள் நிரந்தரமானது அல்ல. காற்றடித்தால் எந்த நேரத்திலும் காணாமல் போகும் நிலையில் உள்ளது. மண் சுவரால் கட்டிக் கொள்ளலாம் என்றாலும் பட்டா புதுப்பிக்கப்படவில்லை. கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல, இது போலவே தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பல கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்கிய பட்டாக்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. ஊராட்சிமன்ற கணக்குகளிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், வீடுகள் புதுப்பிக்கவும் முடியவில்லை. இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு முடியாத அவலம் தொடர்கிறது. மலைப் பகுதியில் காடுகள்,யானைகள், காட்டுப்பன்றிகள் நடமாட்டமும் நிறைந்த அங்கிருந்து ஒரு சில மாணவர்கள் ஒற்றையடி பாதையில் ஜவளகிரி உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பிப்.4 சிபிஎம் போராட்டம் அரசு கட்டிக் கொடுத்து தொகுப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளதை முழுமையாக இடித்து விட்டு கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் புதியதாக வீடுகளை உடனடியாக கட்டித்தர வேண்டும். இலவசமாக பட்டா வழங்கி 13 ஆண்டுகளை கடந்த பிறகும் புதுப்பிக்கப்படாத பட்டாக்களை புதுப்பித்தும், கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்து கொடுக்க வலியுறுத்தியும் வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று வட்டங்களில் பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் தலைமையில் பிப்ரவரி 4 ஆம் தேதி தளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தெரிவித்தார். - ஒய்.சந்திரன்