districts

சென்னை முக்கிய செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி, பிப்.1 – கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக் கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகின்றன. அது போலவே இந்த ஆண்டும் பிப். 1 முதல் 14 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடை பெறுகிறது.  எனவே, கோழிகள் வளர்க்கும் அனைவரும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வும். இதன் மூலம், கோழிகள் வெள்ளைக் கழிச்சல் நோயின் காரணமாக இறப்பதை தவிர்த்து கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம்.

சிறை நிர்வாகப் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை, பிப்.1-  சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை நிர்வாகப் பணிகளில் ஈடுப்படுத்தும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கோதண்டன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “எனக்கு 30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் எனக் கூறி எனது விண்ணப்பத்தை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எனவே எனக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்க்ஷயா, “மனுதாரர் சிறையில் நன்னடத்தையுடன் செயல்பட்டு வருகிறார். சிறைத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பல்வேறு அலுவலக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே அவருக்கு விடுப்பு வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும்,” என்றார். அப்போது நீதிபதிகள், “சிறையில் பொதுவாக தண்டனை கைதிகளுக்கு பணி வழங்குவது வழக்கமான நடைமுறைதான். தண்டனைக் கைதிகள் சமையல், தோட்டப் பராமரிப்பு உள்ளிட்ட இதர வேலை களில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நிர்வாக ரீதியிலான அலுவலக பணிகளில் தண்டனைக் கைதிகளை ஈடுபடுத்தக் கூடாது. மாதம்தோறும் ஊதியம் பெறும் சிறைத்துறையினர் அவர்கள் பார்க்க வேண்டிய வேலையை சிறைக் கைதிகள் மீது சுமத்துவது எப்படி சரியாகும்?. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தண்டனைக் கைதிகள் மூலமாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோல புகார் வந்தால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்,” என எச்சரித்தனர். பின்னர் மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பிப்.12 புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி,பிப்.1- புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்  செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- புதுச்சேரி  சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி 12  ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் அரசின் கூடுதல் செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதன்பின் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். புதுச்சேரி சட்டப்பேரவை காகிதம் இல்லாத சட்டப்பேரவையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு கட்டமைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உறுப்பினர்களுக்கு அருகில் தொடுதிரை கணினி அமைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா சட்டசபை யாக புதுச்சேரி சட்டமன்றம் செயல்படும். அதிகாரிகளுக்கும் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.