districts

சென்னை முக்கிய செய்திகள்

செஞ்சி அருகே வீட்டில் பதுக்கிய 6 மான் கொம்புகள், நாட்டு துப்பாக்கி பறிமுதல்

விழுப்புரம், நவ.22- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு மான் கொம்புகள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் சோதனையில் சிக்கிய பொருட்கள் செஞ்சி, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டப் புலனாய்வு நுண்ணறிவுப் பிரிவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம் தலைமையில் காவல்துறையினர் அந்தக் குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 2வது தெருவைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 25) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வீட்டினுள் சட்டவிரோதமாக ஒரு நாட்டுத் துப்பாக்கி, அதன் பேரல் மற்றும் 6 மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், சோதனை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், காவல்துறையினர் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்து, செஞ்சி காவல் நிலையம் மூலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் விசாரணை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்ட வனத்துறையினர், அரவிந்தன் மீது வன உயிரினப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை வலைவீசித் தேடி வரு கின்றனர். மேலும், அரவிந்தனுக்கு இந்த மான் கொம்புகள் எப்படி கிடைத்தன? அவர் மான்களை வேட்டையாடிக் கொன்று கொம்புகளைப் பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது வேறு எங்கிருந்தாவது கடத்தி வந்தாரா? என்பது குறித்து வனத்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வன விலங்கு பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர், நவ.22- சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (34) என்பவர், வீட்டில் தனியாக இருந்த 14 வயதுச் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்துச் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருண்ராஜைக் கைது செய்தனர். இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமாரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அருண்ராஜை ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார். அருண்ராஜ் மீது ஏற்கனவே ஒரத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போலி சி.எஸ்.ஆர் வழங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புவனகிரி, நவ.22- கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த லட்சுமி என்பவர், சென்னை, திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு, கடலூரில் அவர்களின் சொத்துப் பத்திரம் காணாமல் போனதாகக் கூறி, போலியான சி.எஸ்.ஆர் ரசீதை வழங்கியதாகக் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் வந்தது. இது குறித்துச் செய்யப்பட்ட ரகசிய விசாரணையில், அவர் உள்நோக்கத்துடன் போலி சி.எஸ்.ஆர் வழங்கியது உறுதியானது. இதையடுத்து, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமாரின் பரிந்துரையின் பேரில், புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சமீப காலமாக, கடலூர் மாவட்டத்தில் குட்கா, போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதற்காக டிஎஸ்பி, ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், போலி சி.எஸ்.ஆர் வழங்கியதற்காக ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுகள்: உழவர் கரை  நகராட்சி எச்சரிக்கை 

புதுச்சேரி, நவ.22- கழிவுகளை குப்பைத்தொட்டிகளிலே போட வேண்டும் மீறும்பட்சத்தில் அபாராதம் விதிக்கப்படும் என்று உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து  நகராட்சியின் ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர உணவகங்கள், இறைச்சி கடைகள் தங்களிடம் உருவாகும் உணவு ,இறைச்சி கழிவுகள், மற்றும் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டுவதால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தெரு நாய்கள் உணவுக்காக அவ்விடங்களுக்கு அதிகமாக வருவதால் பொதுமக்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.  எனவே தங்களிடம் உருவாகும் உணவு, இறைச்சிக்கழிவுகளை முறையாக சேகரித்து அருகில் உள்ள நகராட்சியின் குப்பைதொட்டிகளில் போடுமாறு பொதுமக்களின் நலன் கருதி அறிவுருத்தப்படுகிறது. தவறும்பட்சதில் அபராதம் விதிப்பதுடன் கடைகளை சீல் வைக்கவும்,அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம், நவ. 22: விழுப்புரம் மாவட்டம், சகாதேவன்பேட்டை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. கடந்த ஓராண்டாக செஞ்சி, திண்டிவனம் பகுதிகளில் மர்ம விலங்குகள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளைக் கொன்ற நிலையில், நவம்பர் 4ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி ஒரு ஆண் சிறுத்தை உயிரிழந்தது. அது கால்நடைகளைக் கொன்ற சிறுத்தையாக இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 21ஆம் தேதி சகாதேவன்பேட்டையில் காலை வேளையில் சிறுத்தை நடமாடியதாக ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் சிவராஜ் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார். 250 முதல் 300 கிலோ எடையுள்ள சாம்பல் நிறச் சிறுத்தை ஒன்று அருகிலுள்ள ஏரிப் பகுதிக்குள் புகுந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதி சாளையாம்பாளையத்தில் சிறுத்தை கால்தடம் பதிந்துள்ளது. இந்தத் தகவலால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சியதால், வீதிகள் வெறிச்சோடின. தகவல் பரவியதும் வனத்துறையினர் அங்கு முகாமிட்டுச் சிறுத்தையைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை நகரில்  கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

சிதம்பரம்,நவ,22- சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்துக் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலை மையிலான குழுவினர் சிவபுரி சாலையில் உள்ள சுடுகாடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கௌதம் (25), ஜெயக்குமார் (30), நவீன் (25) ஆகிய மூன்று பேரை விசாரித்ததில், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவைக் கைப்பற்றிய காவல்துறையினர், மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.