தஞ்சாவூர், ஆக. 8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, கடலில் மீனவர் வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலில் பத்திரமாக விட்ட மீனவர்களுக்கு, வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். அரியவகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட கடற் பகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த கடற்பசுவை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், மனோரா பகுதியில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுத்தெரு அண்ணாநகர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பிரமணியன், கல்யாணி, சித்திரைவேல் ஆகிய மூவரும் வியாழக்கிழமை அதிகாலை கடலில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களது வலையில் 2 வயதுடைய 30 கிலோ எடை கொண்ட அரிய வகை கடற்பசு சிக்கியது. மீனவர்கள் தங்கள் வலையை அறுத்து, அந்த கடற்பசுவை பத்திரமாக மீட்டு, வனத்துறையின் ஆலோசனையின்படி மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து, வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்த நிலையில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் நேரில் சென்று, கடற்பசுவை பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மீனவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.