court

img

உப்பள நில வாடகை உயர்வு: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை, டிச. 22- உப்பள நிலங்களுக்கான வாடகையை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்கள், உப்பு உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. இந்த நிலங்களுக்கான ஒதுக்கீட்டு கட்டணத்தை ஏக்கருக்கு 100 ரூபாயாகவும், வாடகையை ஏக்கருக்கு 120 ரூபாயாகவும் உயர்த்தி கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வாடகை மற்றும் நிலம் ஒதுக்கீட்டுக்கான கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்குகளை தள்ளு படி செய்து உத்தரவிட்டார். மேலும், 20 ஆண்டு குத்தகை காலம் முடிந்து விட்டதாகவும், அது தன்னிச்சையாக புதுப்பிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, உரிமம் எடுத்தவர்கள் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும், மீண்டும் குத்தகைக்கு டெண்டர் விடும்போது அதில் மனுதாரர்கள் பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.

;