court

img

நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் இந்தியா அழைத்து வர அனுமதி

வங்க தேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது 8 வயது குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர மனிதாபிமான அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி காதுன், இவரது குழந்தை, கணவர் உள்ளிட்ட 6 பேர், கடந்த ஜூன் மாதம் தில்லியில் கைது செய்யப்பட்டு, முறையான விசாரணையின்றி வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். இதை எதிர்த்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சோனாலி காதுனின் தந்தை போது ஷேக் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை முடிவில், நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், ஒரு மாதத்திற்குள் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பக்சி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது 8 வயது குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து பரிசீலிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, இதற்கு ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது 8 வயது குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.