court

img

கரூர் விசாரணை சிபிஐக்கு மாற்றம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ராகார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.
இதை எதிர்த்து, விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி தவெக தரப்பு உட்பட மூன்று மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களான செல்வராஜ், ஷர்மிளா தரப்பு தாங்கள் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என காணொலி வழியாக விளக்கம் அளித்தனர்.
இது ஒரு பெரிய மோசடி எனவும், இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்ததுடன், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், சிபிஐ மாதந்தோறும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் விசாரணை முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.