அகமதாபாத்:
குஜராத் மாநில ஆளும் பாஜக அரசானது, அதானி, டாடா உள்ளிட்ட தனியார் முதலாளிகளிடம், யூனிட் 15 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரம் வாங்கி வருவதும், இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி வருவதும் அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வெயில் அதிகம் என்பதால் பல தனியார் முதலாளிகள் இங்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவி, உற்பத்தியாகும் மின்சாரத்தை மாநில மின் வாரியத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர்.அண்மையில் முடிவடைந்த குஜராத் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. குறிப்பாக சோட்டா உதேபூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மோகன்சின் ரத்வா எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதில் அளித்துள்ளது. அதில்தான், அதானி, டாடா நிறுனங்களிடமிருந்து, ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரத்திற்கு குஜராத் அரசு ரூ.15 வரை விலை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
“கடந்த 2015 முதல் மார்ச் 2020 வரை மொத்தம் 61 நிறுவனங்களிடம் இருந்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 38 தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.15 என்ற விலைக்கும், மீதமுள்ள 23 நிறுவனங்களிடம் 9 ரூபாய் 13 காசுகளில் இருந்து அதிகபட்சம் 13 ரூபாய் 59 காசுகள் வரையிலான விலைக்கும் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 61 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 620 கோடி யூனிட் சூரிய மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதில், அதானி பவர் லிமிடெட் (Adani Power Limited) நிறுவனத்திடமிருந்து மட்டும் 32.8 கோடி யூனிட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.15 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ‘டாடா பவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட்’ (Tata Power Renewable Energy Limited) நிறுவனத்திடமிருந்தும் இதே 15 ரூபாய் விலைக்கு 21 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஜிஎம்ஆர் குஜராத் சோலார் லிமிடெட்’ நிறுவனத்திடம் 20 கோடி யூனிட் மின்சாரம், ‘லோராக்ஸ் பயோ எனர்ஜி லிமிடெட்’ நிறுவனத்திடம் 20.8 கோடி யூனிட் மின்சாரம், ‘ரோஹா டைச்செம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் 20.9 கோடி யூனிட் மின்சாரம், ‘அலெக்ஸ் அஸ்ட்ரல் பவர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் 20.7 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே யூனிட் 15 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டதுதான்.ஒரு யூனிட் மின்சாரத்தை 9 ரூபாய் 13 காசுகளுக்கு வழங்கிய ‘டெக்சாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடமிருந்து 1.4 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.குஜராத்தில் சூரிய மின்சக்தி விலை கணிசமாகக் குறைந்தபோதும்- அதாவது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 1 ரூபாய் 99 காசுகளுக்கு வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் தயாராக இருந்தபோதும், அதானி, டாடா கம்பெனிகளிடம் 15 ரூபாய்க்கு வாங்குவதிலேயே குஜராத் பாஜக அரசு ஆர்வம் காட்டி வந்துள்ளது.
உதாரணமாக, 2020 டிசம்பரில் ஜி.யூ.வி.என்.எல். நடத்திய 500 மெகாவாட் சூரிய திட்டங்களுக்கான ஏலத்தில், ஒரு யூனிட் மின்சாரத்தை 1 ரூபாய் 99 காசுகளுக்கு தருவதாக நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனாலும், 2010-11 ஆம் ஆண்டின் மின் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.15 செலவிடுவதிலேயே குஜராத் அரசு குறியாக இருந்தது என்று ஜி.யூ.வி.என்.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, இதே நிறுவனங்களிடம் இருந்து மேலும் 57.3 கோடி யூனிட் மின்சாரம் 15 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.இவ்வாறு குஜராத் பாஜக அரசானது, மக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடியை, ஏனென்று கேள்வி கேட்பார் இல்லாமல் இஷ்டத்திற்கு எடுத்து, அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகளுக்கு சூறைவிட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது.