புதுதில்லி:
இந்தியக் கடற்படைக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்குவது தொடர்பான ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட், டாடா, அதானி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.பொதுத்துறை நிறுவனம் உட்பட மொத்தம் 8 நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் இணைவதற்கு முன்வந்தாலும், டாடா, அதானி, மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் உள்ளிட்ட நான்கு இந்திய நிறுவனங்களை மட்டுமே இந்திய கடற்படை தேர்வு செய்துள்ளது.
இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியாக மொத்தம் 111 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறியுள்ள கடற்படை, இவற்றை, அமெரிக்காவின் சிகோர்ஷ்கி - லாங்ஹீட் மார்ட்டின் மற்றும் ரஷ்யாவின் ரோஸோபோராநெக்ஸ்பர்ட் ஆகிய நிறுவனங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து, இந்திய பெருநிறுவனங்கள் தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.முதற்கட்டமாக 16 ஹெலிகாப்டர்கள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறப்படும்; பின்னர் அந்த தொழில்நுட்பத்தை வைத்து, மீதமுள்ள 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.