சதுரகிரி திருவிழாவில் உரிமமின்றி உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்கு
விருதுநகர், ஜூலை 27- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி உரிமம் இன்றி உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்தனர். இந்நிலையில், தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக உணவகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நடமாடும் பகுப்பாய்வு கூட உதவியுடன் ஆய்வு செய்தனர். இதில் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி, அன்னதானம் வழங்கிய 3 பேர், தண்ணீர் பகுப்பாய்வறிக்கை இல்லாமல் அன்னதானம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 6 தற்காலிக உணவக வியாபாரிகளும் உரிமம் இன்றி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மேலும், பிளாஸ்டிக், அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கியதும் கண்டறியப்பட்டது. எனவே, 9 பேருக்கும் விசாரணை அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.