வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி
செங்கோட்டையில் இருந்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தியாகம் குறித்தும், அதன் நூற்றாண்டைக் கொண்டாடுவது குறித்தும் உரையாற்றும் துணிவு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்லாமல், வேறு யாருக்கு வரும்?” - பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து தினமணி நாளேடு எழுதி யுள்ள தலையங்கத்தின் கடைசி வரிகள் இவை. இவ்வாறு எழுதும் துணிவு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகைக்கு மட்டுமே வரும் என்று கருதக்கூடாது. சங்கின் சங்காகவே மாறிப் போன தினமணி ஏட்டுக்கும் இந்த துணிவு வரும். தலையங்கத்தின் தலைப்பே “ஏழு அம்ச எழுச்சி உரை” என்பதாகும். பிரதமரின் சுதந்திர தின உரையை கேட்டதிலிருந்து, புல்லரித்துப் போன தினமணியின் தலையங்க ஆசிரியர் புல்லை மாடு மேய்ந்துவிடாமல் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு இந்த தலை யங்கத்தை எழுதியிருப்பார் போலிருக்கிறது. நாட்டின் முதல் சுதந்திர தின உரையை முதல் பிரதமர் நேரு செங்கோட்டையிலிருந்து பேசவில்லை. மாறாக, வானொலியின் வழியாகவே பேசியிருக்கிறார். அந்த உரையில், “மகாத்மாஜி இப்பொழுது நம்மிடையே இருப்பது நமக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுவிட்டு, சண்டை போடுவதற்கு இது நேரமல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த சுதந்திர தின உரையில், “மகாத்மா காந்தி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமான கருத்தியலைக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.” “நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அதன் தொண்டர்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தாய்நாட்டின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பயணத்தில் தேசம் பெருமை கொள்கிறது. இந்த நூறு ஆண்டுகால சேவை என்பது ஒரு பெருமைமிக்க பொற்காலம்” என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார். நேரு தன்னுடைய முதல் சுதந்திர தின உரையில், ‘சண்டை செய்வதற்கு இது நேரமல்ல’ என்று சாடியது, விடுதலையின் போது மதக் கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளை நோக்கித்தான். ஆனால், 79 ஆவது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் காலம் நாட்டின் பொற்காலம் என்கிறார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்தும், அவசரநிலைக் காலத்தின் போதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். 1948 இல் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட போது, சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கொலை, கொள்ளை, சட்டவிரோதச் செயல்கள், தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். நாடு இப்போது பெற்றிருக்கும் சுதந்திரத்தை சீர்குலைக்கும் இந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக” குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜகவினரால் இப்போதும் பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் படேல் கூறியதை அவர்கள் மறுக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம். இன்னும் ஒருபடி மேலே போய், ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு வல்லபாய் படேல் எழுதிய கடிதத்தில், “இந்திய அரசு மற்றும் இந்தியா என்கிற நாட்டுக்கு ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பின் செயல்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடி குறிப்பிடும் பொற்காலத்தின் லட்சணம் இதுதான். பாபர் மசூதி இடிப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு என்பது வெளிப்படையான ஒன்று. இத்தகைய ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தன்னலமற்ற, அர்ப்பணிப்புமிக்க சேவைக்குரியவர்கள் என்று மோடி பாராட்டுகிறார். தினமணி உடனே இந்த துணிச்சல் யாருக்கு வரும் என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ‘தூர்தர்ஷன்’ இந்தாண்டு விடுதலை திருநாளை சாவர்க்கரைப் போற்றிப் புகழும் நாளாகவே மாற்றிவிட்டது. ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் சுதந்திர தின வாழ்த்து அட்டையில் மகாத்மா காந்தி படத்துக்கு மேலே சாவர்க்கர் படத்தை வைத்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயன், “விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்க்கு பாத சேவை செய்தவர்களை புனிதர்களாக்க, சுதந்திர தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் அரசியலின் நச்சு வரலாற்றைக் கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு மதவெறி அமைப்பை இந்த அபத்தமான நடவடிக்கைகளால் புனிதப்படுத்த முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு துரோகிகளின் பாத்திரத்தையே வகித்தது” என்று நச்சென்று குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க முதல்வராக இருந்த தோழர் ஜோதிபாசு, பாஜக பரிவாரத்தை ‘காட்டு மிராண்டிகளின் கூட்டம்’ என்று அழைத்ததை மறந்துவிட முடியாது. இதுஒருபுறம் இருக்க, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அறிவிப்புகளை மறுத்து தற்சார்புக்கான அறைகூவலாக இருந்தது என்று தினமணி கூவுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 40 முறை சொன்ன போதும், ஒருமுறை கூட அவரது பெயரைச் சொல்லி கண்டிக்க முன்வரவில்லை பிரதமர் நரேந்திர மோடி. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? என்ற திரைப்பட பாடல் போல இந்த உரையில் டிரம்ப்பை மறைந்திருந்து தாக்கும் தர்மம் என்ன? என்பது போல, மோடி தாக்கிவிட்டார் என தினமணி தனக்குத்தானே கைதட்டி மகிழ்கிறது. இப்பொழுதும்கூட, அமெரிக்காவிடமிருந்து அதிகமான அளவில் ஆயுத தளவாடங்களை வாங்கிக் குவிக்கும் நாடாக இந்தியா உள்ளது. டிரம்ப் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அமெரிக்கா விலிருந்து இறக்குமதி செய்யப்படும், விஸ்கிக்கு வரி குறைப்பு செய்வதுதான் தற்சார்புக்கு வழி வகுக்குமா? 2047இல் ‘வளர்ந்த இந்தியா’ என்கிற இலக்கை எட்ட முடியும் என்கிற நம்பிக்கையை மோடியின் உரை ஏற்படுத்தியதாக தினமணி கூறுகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து 12 ஆண்டுகளாக சுதந்திர தின உரையை ஆற்றிய பிரதமர் மோடி இத்தனை ஆண்டுகளாக அம்பானி-அதானி போன்ற தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளை வளர்த்து விடவே உழைத்துள்ளார் என்பதை ஒத்துக் கொள்கிறதா தினமணி? தீபாவளி வெகுமதியாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பிரதமர் கூறியதையும் தினமணி பாராட்டியுள்ளது. அப்படியென்றால், ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டது யாரு டைய தீபாவளிக்காக என்கிற கேள்வி எழு கிறது அல்லவா? தீபாவளி நாளில் வெடிக்காத புஸ்வாணங்களை குழந்தைகள் கொளுத்துவார்கள். ஆனால், இங்கே ஒருவர் தினம் தினம் புஸ்வாணத்தை கொளுத்திப் போட்டபடியே இருக்கிறார்.