இவர்கள் விவசாயிகள் நலன் காப்பவர்களாம்!
பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, ஊடகங்களில் கடந்த மூன்று நாட்களாக ஒன்றிய அரசு சார்பில் விவசாயிகள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 27 அன்றைய விளம்பரத்தில், “தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் காக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என்றும், “பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் (PM-KISAN) கீழ் 47 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 12,700 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.
இடிக்கும் கணக்கும்... புரியாத புதிரும்! இந்தக் கணக்கு எப்படிப் பெருக்கி, வகுத்துப் பார்த்தாலும் இடிக்கிறது. 47 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என்றா? அல்லது 47 லட்சம் விவசாயிகளுக்கு 7 ஆண்டுகளில் தலா ரூ. 6 ஆயிரம் என்றா? இந்தக் கணக்கை எப்படிப் புரிந்துகொள்வது? 47 லட்சம் என்பது 7 ஆண்டுகால தமிழக விவசாயப் பயனாளிகளின் எண்ணிக்கையா? விவசாயிகளுக்கு இந்த நிதி வழங்கத் தொடங்கியது 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று.
ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஒரு விவசாயிக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதல் தவணை வழங்கியபோது தமிழ்நாட்டு விவசாயிகள் 21.61 லட்சம் பேர் பயனாளிகளாக இருந்தனர். அது 2022இல் 12ஆவது தவணை வழங்கியபோது 20.06 லட்சமாகக் குறைந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை 2025 நவம்பர் 19 அன்று கோவையில் 21ஆவது தவணை வழங்கப்பட்டபோது, பயனாளிகளின் எண்ணிக்கை வெறும் 3.19 லட்சம் பேர்தான்.
இது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’ தான். நாடு முழுவதுமே 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடிதான் வழங்கப்பட்டது. இந்தத் தகவல் ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்டதுதான். ஆனால், அதற்கு முந்தைய 20ஆவது தவணை 11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. அப்போதைய தொகை ரூ. 3.70 லட்சம் கோடி. கழித்துக்கட்டும் வேலைகளில் பாஜக அரசு பொதுவாகவே, விவசாயிகளை ஆதார் இணைப்பு, நில ஆவணங்கள் இணைப்பு எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, ‘கழித்துக்கட்டும்’ வேலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருகிறது ஒன்றிய அரசு. விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கேட்டும், விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஓராண்டுக்கும் மேலாக நடந்த போராட்டத்தை விலக்கிக்கொள்வதற்காகக் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படவில்லை. அந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காகவே, இந்த நிதி வழங்கல் எனும் கண்துடைப்புத் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு தொடங்கியது.
அதையும் படிப்படியாகப் பல காரணங்களைக் கூறி, பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்துள்ளது. விளம்பர மோசடியும் பொய்ப் புள்ளிவிவரங்களும் இந்த ஏமாற்று வேலையை மறைக்கவும், மோசடியை மூடி மறைக்கவும் இத்தகைய பொய்யான புள்ளிவிவரங்களை விளம்பரங்கள் என்ற பெயரில் தருகிறது விவசாய விரோத பாஜக அரசு. இவர்கள் தான் விவசாயிகளின் நலன் காக்க உறுதி பூண்டுள்ளார்களாம்! இதை விவசாயிகளும் தமிழ்நாட்டு மக்களும் நம்ப வேண்டுமாம்! தமிழ்நாட்டில் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. 2025 நவம்பரில் கோயம்புத்தூரில் 21ஆவது தவணை வெளியிடப்பட்டபோது, மாநிலத்தில் உள்ள இந்த கணிசமான எண்ணிக்கையிலான பயனாளிகள் நிதி உதவியைப் பெற்றனர் என்று அகில இந்திய வானொலி (AIR) செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது இந்த விளம்பரத்தில் ‘47 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள்’ என்றால் இது எந்தக் கணக்கு? என்ன கணக்கு? எது உண்மைக் கணக்கு? ஈரப்பத விவகாரமும் ஆட்சியாளர்களின் அலட்சியமும் தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தக் கோரி விவசாயிகளும் மாநில முதல்வரும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஒன்றிய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பியதே அன்றி, ஈரப்பத அளவை அதிகரிக்கவே இல்லை. சரி, அந்த ஆண்டுதான் முடிந்தது, அடுத்த ஆண்டாவது செய்தார்களா? அதுவும் இல்லை. இவர்கள் தான் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் காக்க உறுதிபூண்டுள்ளார்களாம். “இன்னுமாடா நம்மள நம்புது இந்த ஜனங்க?” என்று ஒரு திரைப்படத்தில் வடிவேலு கேட்பதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ப.முருகன்
