articles

img

போர் மற்றும் நெருக்கடியின் உலகில் எதிர்ப்பும் மாற்று வழிகளும் - ஆர்.கருமலையான்

பெல்ஜியம் தொழிலாளர் கட்சியின் சார்பில் செப்டம்பர் 12 அன்று அந்நாட்டின் மேற்கு கடற்கரை நகரான அஸ்தெந்து (OSTEND) நகரில் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. போர்களிலும், நெருக்கடிகளிலுமான உலகம்; எதிர்ப்புகளும், எதிர்ப்பலைகளும் மாற்றுகளுக்குமான உலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியா, கியூபா, பிரேசில், போர்ச்சுக்கல், வியட்நாம், லெபனான், சைப்ரஸ், கொலம்பியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் தமிழ் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவிலும் பாலஸ்தீனத்திலும் உயிரிழந்த அப்பாவி குழந்தைகள், பெண்கள், மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக  நின்று, பல்வேறு தடைகளை மீறி போராடும் மக்களை வாழ்த்துகிறோம். போர் ஒருபோதும் தீர்வல்ல, அது எப்போதும் ஒரு பிரச்சனைதான். உண்மையான சமத்துவம் இருக்கும்போதுதான் உண்மையான அமைதி சாத்தியம். முதலாளித்துவத்திற்கு உண்மை யான அமைதியும் சமத்துவமும் விரோதமானவை. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு,  சர்வதேச வர்க்க சக்திகளின் சமநிலை ஏகாதிபத்தி யத்திற்கு சாதகமாக மாறியது. தற்போதைய கால கட்டத்தின் நிர்ணயிக்கும் காரணியாக ஏகாதிபத்திய மேலாதிக்கமே விளங்குகிறது. இன்று அதற்கு சில சவால்கள் எழுந்தாலும், அடிப்படை நிலைமை அப்படியே உள்ளது. இந்த கால கட்டத்தில் ஏகாதிபத்திய தாக்குதல் அனைத்து துறைகளிலும் கடுமையாக தீவிர மடைந்துள்ளது. சோவியத்துக்கு பிந்தைய மாற்றங் கள் உலக அளவில் ஆழமான அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை கொண்டு வந்தன. மார்க்சிய மும் சோசலிசமும் இறந்துவிட்டன என்ற ஏகாதிபத்திய கருத்தியல் தாக்குதலும் இதனுடன் சேர்ந்தது. முதலா ளித்துவம் ‘நிரந்தரமானது’ என அறிவிக்கப்பட்டு, அதுவே மனித சமூக பரிணாம வளர்ச்சியின் முடிவு என்று கூறப்பட்டது.  

உலகமயமாதலின் தன்மை

இந்தப் பின்னணியில் நடப்பு முதலாளித்துவ வளர்ச்சியின் கட்டமான உலகமயமாதலை அதன் முழுமையில் புரிந்து கொள்ள வேண்டும். உபரியை உருவாக்கி அதனை கையகப்படுத்துவதுதான் முதலா ளித்துவத்தின் உள்ளார்ந்த தன்மை. இதனால் அது தனது ஒடுக்குமுறையையும் சுரண்டல் தன்மையையும் வெட்கம் இன்றி வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் உள் விதிகள் மூலதனத் தின் பெரிய அளவிலான குவிப்பு மற்றும் மையப்ப டுத்தலுக்கு வழிவகுக்கின்றன. இவ்வாறு திரட்டப்பட்ட மூலதனத்திற்கு தேசிய எல்லைகளைக் கடந்து தடையற்ற லாபம் ஈட்ட பரந்த இடம் தேவைப்படுகிறது. அது ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த செயல்முறை இறுதியில் மூல தனத்தின் மிகப்பெரும் குவிப்புக்கு வழிவகுத்தது. 1990களிலிருந்து அதிவேகப் பாய்ச்சலில் வளர்ந்த நிதி மூலதனத்தின் சர்வதேசமயமாதலையும் நாம் கண்டோம்.

சர்வதேச நிதி மூலதனம்

1990களில் இருந்து நிதி மூலதனத்தின் சர்வதேச மயமாதல் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டது. இந்த  உலகளாவிய அளவில் நகரும் நிதி மூலதனம், இதற்கு முன்னோடியில்லாத பல பரிமாணங்களை அடைந்தது. இந்த சர்வதேச நிதி மூலதனத்திற்கு அதன் லாபக் குவிப்புக்குபுதிய உலக ஒழுங்கு தேவைப்பட்டது. அதன்படி உலகப் பொருளாதார ஒழுங்கு மீண்டும் அமைக்கப்பட்டது. ஏகாதிபத்திய உலகமயமாதல் அனைத்து நாடுகளையும் இந்த கொடிய வட்டத்தில் கொண்டு வந்து, லாபத்தைக் குவிக்கும் நோக்கத்தில் மூலதனத்தின் ஓட்டத்திற்கான அனைத்து தடைக ளையும் அகற்ற அழுத்தம் கொடுக்கிறது.

நவதாராளவாதக் கொள்கைகள்

அதன் விளைவான பொருளாதார சீர்திருத்த தொகுப்பில் நிதித் தாராளமயமாக்கல், வர்த்தக தாராள மயமாக்கல் மூலம் சுதந்திர நாடுகளின் சந்தைகளை திறக்க வற்புறுத்துதல், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களின் தனியார்மயம், பொது பயன்பாட்டு சேவைகளான மின்சாரம், நீர், சுகாதாரம், உள்ளாட்சி வசதிகள் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை தனியார் கார்ப்பரேட் லாபம் பெறும் பகுதிகளாக மாற்றுதல் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த நடைமுறைகளை வரையறுக்கும் கருத்தியல் மற்றும் தத்துவார்த்த அமைப்புதான் நவதாராள வாதம். எனவே முதலாளித்துவ வளர்ச்சியின் விதிகளே தற்போதைய உலகமயமாதல் கட்டத்திற்கான புற நிலை நிலைமைகளை உருவாக்கின. இதன் அத்தியா வசிய நோக்கம், மூலதனத்தின் நகர்வுக்கான அனை த்து தடைகளையும் உடைத்து வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை பன்னாட்டு மூலதனத்தின் அதி லாபம் ஈட்டும் உந்துதலுடன் இணைப்பதாகும்.

முதலாளித்துவ நெருக்கடியும் எதிர்வினையும்

சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் இந்த மிகப்பெரும் லாபக் குவிப்பு செயல்முறை ஆழ்ந்த நெருக்கடியை உருவாக்கி உலக மக்கள் தொகை யின் பெரும்பான்மையினர் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை சுமத்துகிறது. முதலாளித்துவத்தின் ஒரு நெருக்கடியை தீர்க்கும் முயற்சிகளில் மிகவும் தீவிரமான அடுத்த நெருக்கடி யின் விதைகள் விதைக்கப்படுகின்றன. முதலாளித்துவம் தற்போதைய நெருக்கடியில் இருந்து பரந்த அளவில் நான்கு வழிகளில் வெளிவர முயற்சிக்கிறது: அந்த குறிப்பிட்ட கட்டத்தில் மிகவும் லாபகரமான புதிய தொழிற்துறை மற்றும் பொரு ளாதார கிளையை உருவாக்குவதன் மூலம்; தற்காலிக காலத்திற்கு போட்டி உற்பத்தித்திறனை தீவிரமாக மேம்படுத்துவதன் மூலம்; அதன்மூலம் நெருக்கடி யின் சுமையை சிறிய நிறுவனங்கள் மீதும் அவர்களின் தொழிலாளர்கள் மீதும் தள்ளுவதன் மூலம்; அதீதமான அளவு வேலையின்மையை உருவாக்கி கூலியை குறைத்து அதன்மூலம் சுமையை பொதுவாக தொழிலாளர் வர்க்கத்தின் மீது மாற்றுவதன் மூலம்; மற்றும் போரைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் - என தனது நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முதலாளித்துவம் முயற்சிக்கிறது. உலகின் பல்வேறு பிராந்தியங்களில் நாம் இதனை தற்போது கண்டு கொண்டிருக்கிறோம். நெருக்கடி யின் காலங்களில் போர் பொருளாதாரம் முதலாளித்து வத்தின் மிகவும் நம்பகமான நண்பனாக வரலாற்று ரீதியாக இருந்து வருகிறது.

இந்திய அனுபவம்

1991ல் தாராளமயக் கொள்கைகள் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய ஆளும் வர்க்கங்கள், குறிப்பாக பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், 1980களில் இருந்து முந்தைய அரசு கட்டுப்பாட்டு கொள்கைகளி லிருந்து படிப்படியாக விலகி நவதாராளவாத கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகி தத்துடன் அதிகரித்த சமத்துவமின்மையும், தொழிலா ளர் வர்க்கத்தின் மீதான தீவிர சுரண்டலும் ஒன்று சேர்ந்துள்ளன. விவசாயிகளின் மீது நெருக்கடியும் பெரிய அளவிலான விவசாய துன்பமும் ஏற்பட்டுள் ளன. இந்திய அரசு இயற்கை வளங்களையும் பொதுச் சொத்துக்களையும் பெரிய கார்ப்பரேட்டுகளும் வெளிநாட்டு மூலதனமும் கொள்ளையடிப்பதற்கு உத வியும் வசதியும் செய்து கொடுக்கிறது. இருப்பினும், இந்த நவதாராளவாதக் கொள்கை கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. தொழிற் சங்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக, அரசாங்கம் இதுவரை நிதித் துறையை முழுமையாக தாராளமயமாக்குவதில் வெற்றி பெற வில்லை. 2007-08 நிதி நெருக்கடியின் மோசமான விளைவுகளில் இருந்து இந்தியா தப்பித்ததற்கு இதுதான் காரணம். இதேபோல் இந்திய அர சாங்கத்தால் கார்ப்பரேட் சார்பு தொழிலாளர் சீர்திருத் தங்களை - நான்கு தொழிலாளர் சட்டங்களாக சட்டரீதியில் வடிவமைக்கப்பட்டவை - முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இடதுசாரி சக்திகளின்  போராட்டமும் வெற்றிகளும்

பொதுத் துறையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நவதாராளவாத கொள்கைகளையும் அமெரிக்க சார்பு வெளியுறவு கொள்கையையும் எதிர்ப்பதில் இந்திய இடதுசாரி சக்திகள் முன்னணியில் உள்ளன. நவதாராளவாத கொள்கைகளின் முழுமையான நடைமுறையையும் அமெரிக்க ராணுவ சூழ்ச்சித் திட்டங்களுக்கு முழு மையாக அடிமையாவதையும் எதிர்க்கும் போராட்டத்தில் இடதுசாரி சக்திகளும் மற்ற ஜனநாயக சக்திகளும் முன்னணியில் உள்ளன. நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஆளும் வர்க்கங்களின் வளர்ந்து வரும் ஒத்து ழைப்பை எதிர்க்காமல் முன்னெடுக்க முடியாது என்பது இந்தியாவில் எமது அனுபவம். இந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திகள் வகித்த பங்கு, எங்களது வலுவான தளமான மேற்கு வங்கத்தில் குறிப்பாக இடதுசாரி சக்திகளின் மீது கூட்டு தாக்குதலுக்கு வழிவகுத்தது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசாங்கம் மே 2011ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்தது. ஆனால் இப்போது கடந்த இரண்டு தொடர் சட்டசபை தேர்தல்களில் வென்று கடந்த பத்தாண்டு களாக தொடர்ந்து கேரள மாநிலத்தை ஆள்கிறோம். 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறை யாக மக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். சமூக நல நடவடிக்கைகளை அமல்படுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்களை புத்துயிர் பெறச் செய்வதிலும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை நடத்து வதிலும் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங் கத்தின் சாதனை மக்களிடம் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.

எதிர்காலப் பாதை

இன்றைக்கு உலகம் சந்தித்துள்ள நெருக்கடி கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்க ளை ஈவிரக்கமின்றி மேற்கொள்ள உலகளாவிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியம் வழிநடத்துகிறது; எனவே உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஏகாதி பத்தியத்தின் தேடல்தான் மனித குலத்தின் முழுமை யான எழுச்சி, விடுதலை மற்றும் முன்னேற்றத்தை மறுத்துக் கொண்டிருக்கும் ஊற்றுக்கண்ணாக தொடர்கிறது. இந்திய சமூகத்தை மாற்றி சோசலிசத்தின் பக்கம் வழிநடத்த, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் வர்க்க சக்திகளின் கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு சக்தி வாய்ந்த தொழிலாளர்-விவசாயி கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டும்; வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைத்து சக்திகளையும் ஒன்றி ணைக்க வேண்டும். இந்த திசையில் ஒரே வழி வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதுதான். சமீபத்தில் மதுரையில் முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு இந்த பாதை யையே தேர்வு செய்துள்ளது. இடது முன்னணி அரசாங்கங்கள் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவில் இருந்தன; இப்போது கேரளாவில் தொடர்கிறது. மாநில அரசாங்கங்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் மற்றும் வளங்களில் கடுமையான வரம்புகள் இருந்தாலும், நிலச் சீர்திருத்தங்களின் மூலம் பெறப்பட்ட வெற்றிகளை பலப்படுத்தவும், அதி காரப் பரவலாக்கத்தை செயல்படுத்தவும், தொழிலா ளர் வர்க்க மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முயன்றுள்ளன. இந்த அரசாங்கங்களால் முதலா ளித்துவ அரசு அமைப்பை மாற்றுவதில் அடிப்படை மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நாங்கள் எந்த மாயையிலும் இல்லை; ஆனால் இந்த இடதுசாரி  அரசாங்கம் நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் மற்ற மக்கள் இயக்கங்களை அமைப்புரீதியாக திரட்டவும், அவர்களின் உரி மைகளுக்காக போராடவும், தேசிய அளவில் இடது  மற்றும் ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல்ல வும் உதவுகின்றன. பெல்ஜியம் தொழிலாளர் கட்சியின் பொதுச்செய லாளர் தோழர் பீட்டர் மெர்டென்ஸ் மற்றும் தோழர்களு க்கு ‘போர் மற்றும் நெருக்கடியின் உலகில் எதிர்ப்பும்  மாற்று வழிகளும்’ குறித்த இந்த அரசியல் பரிமாற்றத் தின் ஒரு பகுதியாக எங்களை அழைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழுவின்  சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.