கடும் பாதிப்புக்குள்ளான தொழில்களை மீட்க மாற்றுவழிகளை ஒன்றிய அரசு கண்டறிய வேண்டும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, செப். 20 - அமெரிக்க வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய தொழில்களை மீட்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிபிஎம் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்தார். கோவில்பட்டியின் முக்கிய தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தொடர் போராட்டம் நடத்துவோம் என்று சண்முகம் தெரிவித்தார். “பாஜக ஆட்சிக்கு பிறகு ஜிஎஸ்டி வரியால் 22 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் உயர்ந்துள்ளது. கடுமையான வரி விதிப்பால் மக்களின் முதுகெலும்பு உடைந்துள்ளது” என்று விமர்சித்தார். அமெரிக்க வரி உயர்வின் பாதிப்பு “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு வரி உயர்த்தியதால் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்; திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் வேலை நாட்களை வாரத்தில் மூன்று நாட்களாக குறைத்துள்ளனர். ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசு ஏழை மக்களை கவனிக்காமல் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. கல்விக்கான நிதி மறுக்கப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார். திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு திமுக “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” முழக்கத்துடன் ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்திய பிரச்சாரத்தை வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று பாராட்டினார். அதே வேளை, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த 32 நாட்களாக போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
