articles

img

டிரம்ப் வரிகள் : அமெரிக்க வீழ்ச்சியின் துவக்கம் - பல்லடம் ரவி

டிரம்ப் வரிகள் : அமெரிக்க வீழ்ச்சியின் துவக்கம்

உலக வர்த்தக அமைப்பின் கட்டுப் பாடற்ற வர்த்தகக் கொள்கை அமலுக்கு வந்து 25 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளோம். 1760ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி துவங்கி 1900ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நிலைக்கு வந்தது. ஆரம்பகால ஐரோப்பிய தொழிற்புரட்சியாளர்கள் உலக நாடுகளை வலுக்கட்டாயமாக தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி சந்தைகளைக் கைப்பற்றினர். இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அப்படி கோலோச்சி யது. இரண்டாம் உலகப்போரில் அழிந்த ஜப்பான் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுந்து மின்னணு சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து உலகை வியக்க வைத்தது. சோனி நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிடா தனது ‘மேட்  இன் ஜப்பான்’ நூலில் அமெரிக்க சந்தை யில் எப்படி காலூன்றினார் என்பதை நுணுக்கமாக எழுதியிருப்பார் - இன்றைக்கும் தொழில் முனைவோர் அனை வரும் படிக்க வேண்டிய புத்தகம் அது. சீனாவின் உலகப் பொருளாதார நுழைவு 1972ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் திடீரென சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு நட்புறவு பாராட்டினார். 1978இல் அன்றைய சீன ஜனாதிபதி டெங் சியோ பிங் தடையற்ற உலகச் சந்தைக்கு இசைவான புதிய பொரு ளாதாரக் கொள்கையை வடிவமைத்தார். சீனா தனது பொருளாதாரக் கொள்கைகளை உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏற்ப மாற்ற ஆறு ஆண்டுகள் பிடித்தது. 2001 டிசம்பர் 11 அன்று உலகின் 143ஆவது நாடாக உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடாக சீனா ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீனாவின் இணைவுக்குப் பிறகு உலகப் பொருளுற்பத்தித் துறையில் அதுவரை எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. இந்தியா, வியட்நாம், தைவான், தென் கொரியா போன்ற நாடுகளும் முன்னேறின. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழில் தேக்கம் துவங்கியது. அமெரிக்கா மெல்ல மெல்ல ஒரு நுகர்வு நாடாக மாறத் துவங்கியது. இந்தப் பயணம் இப்போது அடுத்த கட்டத்தில் நுழைந்துள்ளது. 2024 தேர்தலின் வரி வியூகம் 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் மையப்புள்ளி சீன-அமெரிக்க வர்த்தக வரிகள்! அமெரிக்காவின் அரசுச் செலவீனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான நுழைவு வரி நிலையான வரி வருவாயாக மாறிவிட்டது. 2017-2021 காலத்தில் டொனால்டு டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் நுழைவு வரியை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வகையில் நிலைநிறுத்த ஏற்பாடுகளைச் செய்தார். 2021-2025 காலத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனும் அதே வழிமுறையைப் பின்பற்றினார். 2024 செப்டம்பர் 27 முதல் சீனப் பொருட்களின் மீது புதிய வரிகள் நடை முறைக்கு வந்தன: மின்சார வாகனங் களுக்கு 100%, சூரிய மின்கலங்களுக்கு 50%, பேட்டரிகள், தாதுக்கள், எஃகு, அலுமினியம் மீது 25% வரி. தேர்தல் பிரச்சாரத்தில் வரி விவாதம் 2024 தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அனைத்து இறக்குமதிகள் மீதும் 20% புதிய வரிகள் விதிக்க வேண்டும் என்றார். சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 60% கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும், அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நாடுகள் மீது 100% வரி விதிக்கப் போவதாகவும் கூறினார். கமலா ஹாரிஸ் இதை “டிரம்ப் விற்பனை வரி” என்று அழைத்து, நடுத்தர வருமானக் குடும்பத்திற்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று விமர்சித்தார். ஆய்வுகள், டிரம்ப்பின் வரிகளின் கிட்டத்தட்ட முழுச் செலவையும் அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டதாகக் கண்டறிந்துள்ளன. ஏனென்றால், அமெரிக்கா மிகப்பெரிய நுகர்வு நாடாக மாறியிருப்பதும், உற்பத்தித் தொழில்கள் அங்கு வீழ்ந்து கொண்டிருப்ப தும் தான். இந்தியாவின் நிலைமையும் எதிர்காலமும் இந்தியப் பொருட்கள் மீது 50% தண்டனை வரிக்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதி என்ற அரசியல் காரணம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு சூழல் இல்லாமல் இருந்தாலும் வேறு சாக்குப்போக்கு சொல்லி நுழைவு வரி விதித்தே இருப்பார்கள். இனி வரும் ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதிப் பொருட்களைச் சார்ந்த நாடாக மாறக்கூடும். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் நுழைவு வரி அதிகரிக்கக் கூடும். இது அமெரிக்கர்களுக்கு புதுவகையான கட்டாய விற்பனை வரியாக நிலைபெற்றுவிடும். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாக மாறத் துவங்கும்; அந்தக் காலக்கட்டம் வரும். எனவே இந்தியா போன்ற நாடு களின் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் அமெரிக்கா வின் புதிய உத்தியைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்களுக்கான சந்தையை உலகின் பல நாடுகளிலும் அமைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அர சியல் பொருளாதாரத்தை அன்றாடம் கண்காணிக்கும் பிரிவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உயரப் போகிற அமெரிக்க நுழைவு வரி உயர்வை எதிர்கொள்ளும் திறனோடும் இருக்க வேண்டும்.