சாதி, சமயம், சடங்குகளைக் கடந்ததுதான் கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்க்கை
இந்திய பொதுவுடமை இயக்க வரலாற்றில் எத்தனையோ முன்னுதாரணமான, முற்போக்கான பல நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பல தலைவர்களின் வாழ்க்கை முன்மாதிரியாக இருந்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் என்றால் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டும் தான் போராடுவார்கள்; சோறா - மானமா என்று கேட்டால் கம்யூனிஸ்ட்டுகள் சோறு என்று தான் சொல்வார்கள் என்று ஏகடியம் பேசியவர்கள் உண்டு. ஆனால், பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுப்பதிலும் கம்யூனிஸ்ட்டுகள் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சீத்தாராம் யெச்சூரி நினைவுநாளில்... சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே சாதி ஒழிப்பு, சாதி மறுப்பு. சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் சிந்தனைகளை பரப்புவது என எத்தனையோ சொல்ல முடியும். அந்த வரிசையில், தற்போது ‘உடல்தானம்’ என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுப்பது என்று முடிவு செய்து அதன் துவக்கமாக, மறைந்த மகத்தான மார்க்சிய அறிஞர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளான “செப்டம்பர் 12ஆம் தேதி” மாநிலம் முழுவதும் உடல்தானம் வழங்கும் உறுதிமொழி படிவத்தை ஆயிரக்கணக்கான தோழர்கள் வழங்க இருக்கிறார்கள். விருப்பமும், ஆர்வமும் உள்ள பொதுமக்களும் இப்பேரியக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுகிறது. மருத்துவ உலகிற்கு இறந்த பின்னும் நமது பங்களிப்பை இதன் மூலம் செய்ய முடியும். உடல்தானம் - உன்னத செயல் இந்தியாவில் உடற்கூறியல் சட்டம் 1949இல் இயற்றப்பட்டது. இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உடற்கூறியல், பிரித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மருத்துவ மற்றும் கற்பித்தல் நிறுவனங்களுக்கு உரிமை கோரப்படாத உடல்களை வழங்க, இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக உரிமை கோரப்படாத உடல்களையும், தானமாக வழங்கப்படும் உடலையும் பயன்படுத்துகின்றனர். உடல் மற்றும் உறுப்பு தானம் என்பது ஒரு தனிப்பட்ட முடிவு என்றும் அது ஒரு உன்னதமான செயல் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்து மதத்தில், “கர்மாவின் சட்டம்” மறுபிறவியை அடிப்படையாகக் கொண்டது; ஆன்மா என்றென்றும் வாழ்கிறது; அது அழியாதது; ஒரு புதிய உடல் வடிவத்தில் மறுபிறவி எடுக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எரிப்பது, புதைப்பது என இரண்டு வகையில் சடங்குகள் அடிப்படையில் காரியங்கள் செய்யப்படுகின்றன. மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கை, புதிய கருத்துக்களுக்கு விரோதம், இறந்தவர்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற தவறான தகவல் போன்ற சிந்தனையிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும். தங்கள் உடலை தானம் செய்பவர்கள் மருத்துவ மற்றும் பிற சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதை சமூகம் கணக்கில் கொள்ள வேண்டும். உடற்கூறியல் கல்வியின் முக்கியத்துவம் மருத்துவக் கல்விக்கு மனித உடலை தானம் செய்வது முக்கியத் தேவையாகும். சுகாதார அறிவியல் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு போதுமான மனித உடல்கள் கிடைப்பது இல்லை. ஆனால், மருத்துவ வல்லுநர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் துறை ரீதியாக கற்றுக்கொள்ளவும் உடற்கூறியல் பயிற்சி என்பது முக்கியமாகும். அதுபோல மருத்துவக் கல்வியின் தொடக்கத்திற்கு உடற்கூறியல் பற்றிய நல்ல அறிவு அவசியம். ஆனால், இந்தியாவில், கடாவெரிக் லேப்/ஆபரேஷன் தியேட்டர் வசதியை வழங்கும் மருத்துவ நிறுவனங்கள் மிகக் குறைவாகும். மருத்துவ மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிவியல் மாணவர்கள் மனித உடலின் சிக்கலான உடற்கூறியலில் தேர்ச்சி பெற உதவவும், நோயாளிகளுக்கு உதவவும் அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மற்றும் பிற சிறப்புத் துறைகளை கற்பிப்பதற்கும் புதிய அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய மருத்துவ கருவிகள் கண்டுபிடிப்பதற்கும் கடாவர் கல்வி (உடற்கூறியல் கல்வி) பயன்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன, மேலும் உடற்கூறியல் ஆய்வுகள் காரணமாக எண்ணற்ற நபர்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கின்றனர். பதற்றம், தொடு உணர்வால் ஏற்படும் பயம், தயக்கம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் மருத்துவத்திற்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அறிவுசார் அணுகுமுறையை இக்கல்வி வழங்குகிறது. மனித சடலத்தை அறுத்துப் பிரித்தல் மூலம் பெறப்பட்ட அனுபவமும் கல்வியும், பாடப்புத்தகங்கள் வழங்கும் கற்றலை விட மிக உயர்ந்ததாகவும், மிகவும் வேறுபட்டதாகவும் உள்ளது. புதிய அறுவை சிகிச்சை நுட்பங்களும், புதிய மருத்துவக் கருவிகளும் மனித எலும்புகள், மூட்டுகள் மற்றும் திசுக்களில் சோதிக்கப்படுகின்றன. இது மருத்துவத் தொழிலின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும், பகுப்பாய்வு செய்து கற்றுக் கொள்ள உதவுகிறது; இதனால் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும். இறந்த பிறகும் சமூகத்திற்கு சேவை! மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக மரணத்திற்குப் பிறகு முழு உடலையும் விட்டுக்கொடுப்பது உடல் தானம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஒருவர் இறந்த பிறகும் இச்சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உதவ முடியும், மேலும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, மருத்துவ ஆராய்ச்சிக்கு வருங்கால சந்ததியினரைப் பாதிக்கக்கூடிய ஒன்றைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்க முடியும். விருப்பம் உள்ள அனைவரும் தங்களது உடலை தானம் செய்ய முடியும் என்றாலும், விபத்தால் ஏற்படும் மரணம், எச்.ஐ.வி/எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி & சி, செயலில் உள்ள காசநோய், சிபிலிஸ், சி, டெட்டானி போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலால் மருத்துவ ஆய்வாளர்கள், பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக உறுப்பு தானம் செய்ய மறுக்கப்படுகிறது. எந்த வயது நபரும் உடல்தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்து பதிவு செய்யலாம். உடல் தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்று மூன்று புகைப்படங்கள், தங்களுடைய அடையாள அட்டை நகல் மற்றும் இரண்டு சாட்சிகளின் அடையாள அட்டை நகலை வழங்கி உடல் தானம் செய்ய வேண்டும். இயற்கை மரணம் மட்டுமே உடல் தானத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். மருத்துவமுறையின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய, கண்தானம் மற்றும் உறுப்பு தானத்தோடு “விருப்பத்துடன் கூடிய உடல் தானம்” செய்யும் திட்டமே சிறந்த தீர்வாகும். இதற்காக, உடல் தானம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் வானொலி, விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், தானம் பற்றிய பிரச்சாரம், சுகாதாரத்துறை மூலம் செய்யப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தோழர் சீத்தாராம் யெச்சூரி விருப்பப்படி கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக குடும்பத்தினர் அவரது உடலை தானம் செய்தனர். அதேபோல கடந்த 2024 ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல், கொல்கத்தாவில் உள்ள நீல் ரத்தன் சிர்கார் (என்ஆர்எஸ்) மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு முன்னோடியாக இருந்த தோழர் ஜோதி பாசு, மேற்குவங்காள முதல்வராக 24 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் கடந்த 2010இல் காலமான பிறகு கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு அவரது உடல் தானம் செய்யப்பட்டது. அந்த வழியில் வந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி தனது மரணத்திற்கு பிறகும் இந்த சமூகத்திற்கு பயன்படும் வகையில் உடல் தானம் செய்ததை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை கொளத்தூர் பகுதிக் குழு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட உடல் தான படிவங்கள், ஏற்கெனவே மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. சாதிகள், சமயங்கள், சடங்குகளை கடந்தது தான் கம்யூனிஸ்ட்களின் வாழ்க்கை. இது மரணத்திலும் தொடர வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் சனாதனத்தை பின்பற்றமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தவே தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள கட்சித் தோழர்களுக்கு உடல் தானம் செய்ய அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய பண்பாட்டை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு துணை நிற்க வேண்டும்.