articles

ஜனவரி மாதத்திற்குள்  மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஜனவரி மாதத்திற்குள்  மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை, செப். 21- சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு என்ன கோரிக்கை வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். அங்கு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் கோவிலுக்கான வழிபாதை செய்து தரும்படியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மார்கழி மாதத்தில் தமிழகத்தில் இருந்துதான் அதிக பக்தர்கள் செல்கிறார்கள். எனவே அங்கு ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெறும் எனக் கூறி உள்ளனர். அதேபோல பழனியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கோவில் பணிகள் மேற்கொள்ள அவர்கள் இடம் கேட்டுள்ளனர். அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கேரள ஐயப்பன் கோவில்களில் மண்டல மற்றும் மகர பூஜைகாலங்களில் வரும் தமிழக பக்தர்களின் மருத்துவ வசதிக்காக, கன்னியாகுமரி தேவஸ்தானத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு அறை, உணவு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன்” என்று தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஜனவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நிச்சயம் நடக்கும். திமுக ஆட்சியில்தான் பிரசித்தி பெற்ற திருக் கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்குள் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடத்தப்படும்” என்றார்.