articles

img

திருப்பூரில் ‘யுத்தங்களின் அரசியல்’ குறித்த 10 நாள் தொடர் வகுப்பு நிறைவு - வே.தூயவன்

திருப்பூரில் ‘யுத்தங்களின் அரசியல்’ குறித்த 10 நாள் தொடர் வகுப்பு நிறைவு

“ஏகாதிபத்திய லாப வேட்கையின் விளைவே முடிவற்ற யுத்தங்கள்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘யுத் தங்களின் அரசியல்’ என்ற மையத் தலைப்பில் செப்டம்பர் 19 முதல் 28 வரை நடைபெற்ற பத்து நாள் காலை வகுப்பு ஞாயிறன்று நிறைவடைந்தது. தியாகி பழனிசாமி நிலையத்தில் நடந்த இந்த 13வது ஆண்டு வகுப்பில் தினமும் காலை 6.30 முதல் 7.30 மணி வரை அமர்வுகள் நடை பெற்றன. சராசரியாக 100 பேர் கலந்து கொண்டனர். போர்களின் வரலாற்று பரிமாணம் முதல் நாள் திருச்சி அன்வர் உசேன் போர்களின் வரலாறு குறித்து உரையாற்றி னார். சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட 64 மனித எலும்புக்கூடுகளின் புதை படிவங்கள் குறித்த தொல்லியல் சான்றுகளை முன் வைத்தார். இனக்குழு சமுதாயம், அடிமை சமு தாயம், நில உடமை சமுதாயம், நவீன முதலா ளித்துவ சமுதாயம் வரை காலந்தோறும் நடைபெற்ற போர்களின் விபரங்களை விரிவாக விளக்கினார். இரண்டாம் நாள் தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், 20ஆம் நூற்றாண்டின் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் குறித்து விரிவுரையாற்றினார். “ஏகாதிபத்திய நாடுகள் சந்தையைக் கைப்பற்றுவதற்காக நடத்துவதே போர்” என மாமேதை லெனின் விளக்கியதை எடுத்துரைத்தார். முதல் உலகப் போரின்போது அந்த முரண்பாட்டைப் பயன் படுத்தி ரஷ்யாவில் தொழிலாளர், விவசாயி களை அணி திரட்டி முதலாவது சோசலிச புரட்சியை வெற்றிகரமாக நடத்தியது குறித்தும் விளக்கினார். முதலாளித்துவ உலகில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அதி தீவிர வலதுசாரி பாசிச சக்திகள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தலைதூக்கி இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியது, சோசலிச ரஷ்யாவை அழிக்க முயன்ற போது, ஜோசப் ஸ்டாலின் தலைமையில் பாசிசத்திற்கு எதிராக உலகைப் பாதுகாத்த மக்கள் யுத்தம் குறித்தும் விவரித்தார். இந்திய போர் வரலாறு மூன்றாம் நாள் எழுத்தாளர் நர்மதாதேவி, இந்தியா சந்தித்த போர்கள் குறித்துப் பேசி னார். ஆரியர்களின் வருகை, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு எதிரான போர், புத்த மதப் பேரரசுகளுக்கு எதிராக ஆரியர்கள் போர் தொடுத்து வர்ணாசிரம கட்டமைப்பையும் சாதி அமைப்பையும் உருவாக்கியது குறித்து விளக்கினார். கஜினி முகமது படையெடுப்பு, தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய பேரர சுகள் நடத்திய போர்கள், வெள்ளையர் ஆதிக் கத்திற்கு எதிரான விடுதலைப் போர், இந்திய-சீன போர், வங்கதேச போர் உள்ளிட்ட நீண்ட வரலாற்றின் உண்மை விபரங்களை தெரி வித்தார். இந்நாளில் அஞ்சாநெஞ்சன் ஆஷர்  மில் பழனிச்சாமியின் வரலாறு பற்றிய டி.எம்.ராஜாமணியின் புத்தகம், மாசேதுங் எழுதிய தாராளவாதத்திற்கு எதிராக,எஸ்.ஏ.பெருமாள் எழுதிய தலைமைப்பண்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. நவீன போர்களின் பரிமாணங்கள் நான்காம் நாள் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துகண்ணன் போலி தேசபக்தி குறித்துப் பேசினார். பல்வேறு போர்களில் ஆளும் முதலாளித்துவ சக்திகள் போர் களை நியாயப்படுத்துவதற்காக போலி தேச பக்தியைக் கிளப்பிவிடுவதை விரிவாக எடுத்து ரைத்தார். ஐந்தாம் நாள் மாநில செயற்குழு உறுப்பி னர் க.சுவாமிநாதன், போரின் பொருளாதார இழப்புகள் குறித்து விளக்கினார். போருக்குச் செலவிடப்படும் மிகப்பெரும் தொகை, மக்கள் தலையில் சுமத்தப்படும் சுமை, வேலை வாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் போன்ற  அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படு வது, ஆயுத வியாபாரம் மூலம் முதலாளித்துவ சக்திகள் லாபம் ஈட்டுவது, மக்கள் வறுமையில் தள்ளப்படுவது குறித்து விவரித்தார். ஆறாம் நாள் அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி வி.ராமமூர்த்தி, போரினால் சூழ லியலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினார். நிலம், நீர், காற்று என இயற்கை யில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து பல்வேறு தரவுகளுடன் விளக்கினார். இதற்கு மாற்றாக சோசலிச சூழலியல் கொள்கைகளை அமலாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி னார். ஏழாம் நாள் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு டிஜிட்டல் யுத்தம் குறித்துப் பேசினார். போர் தொழில்நுட்பத்திலும் ஆயு தங்களிலும் வரலாற்றுரீதியாக ஏற்பட்டி ருக்கும் மாற்றங்கள், டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் மனித மனங்களை முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகள் தகவ மைப்பது, உண்மையான பிரச்சனைகளி லிருந்து திசைதிருப்புவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எட்டாம் நாள் தீக்கதிர் டிஜிட்டல் பதிப்பாசிரி யர் எம்.கண்ணன், மதங்களின் நிறுவனமய மாதல் குறித்துப் பேசினார். உலகிலுள்ள பிரதான மதங்கள் அனைத்தும் போர்களின் மூலம் நிறுவனமாக மாறி அதிகாரத்தை நிலை நிறுத்தியதை வரலாற்று தரவுகளுடன் தெரிவித்தார். ஒன்பதாம் நாள் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.செல்வா, தலைமுறை அழிப்பு குறித்துப் பேசினார். ஏகாதிபத்தியம் நிகழ்த்திய போர்க ளால் பெண்கள், குழந்தைகள், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டார். போர்கள் வியாபாரமாகவும் லாபம் ஈட்டும் தொழிலாகவும் இருக்கும் நிலையில், முதலா ளித்துவத்தை ஒழிப்பதுதான் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என விளக்கினார். நிறைவு அமர்வு பத்தாம் நாள் முன்னாள் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர் அ.நிசார்அகமது, போரும் அமைதியும் குறித்துப் பேசினார். “சுரண்டலும், ஏற்றத்தாழ்வும், சமூக ஒடுக்குமுறையும் நில வும் வரை முதலாளித்துவ சமூகம் முரண்பட்டு தொடர்ந்து போர்களை நடத்தும். இந்த சமூகத்தை சோசலிசமாக மாற்றுவதன் மூலமாகத்தான் போர்களை ஒழித்து உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்காக கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்” என வலியுறுத்தினார். நிறைவு நாளில் பங்கேற்ற அனைவ ருக்கும் மார்க்ஸ் பார்வையில் இந்தியா, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆழமும் அகலமும் ஆகிய இரு சிறு நூல்களை  இடுவாய் பழனிச்சாமி, அன்பளிப்பாக வழங்கினார்.  சமகால உலக அரசியல் யுத்த நிகழ்வு களை நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் கிடைக்கும் அறிவு செல் வத்தையும் புதிய பார்வையையும் இந்த பத்து நாள் தொடர் வகுப்பு வழங்கியது. ரஷ்ய-உக்ரைன் போர், இஸ்ரேல் காசா மக்கள் மீது தொடுத்திருக்கும் இனஅழிப்புப் போர் ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்களாக வகுப்பில் பங்கேற்றோர் புறப்பட்டுச் சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கல்விக்குழு கன்வீனர் ஆர்.மைதிலி நன்றி தெரிவித்தார். தொடர் வகுப்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் சி. மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். -வே.தூயவன்