articles

img

கம்யூனிஸ்ட் எப்படியிருப்பார்? எப்படியிருக்க வேண்டும்? - ஆர்.ஹரிஹரன், கோவை

கம்யூனிஸ்ட் எப்படியிருக்க வேண்டும்? சிவப்பாக இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை!. கம்யூனிஸ்டுகளுக்கு நிறமில்லை, சாதியில்லை, இனமில்லை, மதமில்லை. வேறென்ன? மனிதநேயம் மட்டுமே! உலக மக்கள் அனைவரும் பிறந்தது நல்ல வாழ்க்கைக்காக! அது இந்த பூமியில் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். மனித சமுதாயம் மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து அவை அனைத்தையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவனே கம்யூனிஸ்ட்! இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஊனமில்லாத பிறப்பு, நோயில்லாத உடம்பு. நிறைவான வாழ்க்கை, வயோதிகத்தில் மட்டுமே சாவு, சமாதானமான உலகம் இப்படியமையவுள்ள சமுதாயத்தை படைப்பவனே கம்யூனிஸ்ட்! மேலும் தெளிவு வேண்டுமா? ஒரு மனிதன் வாழ்வதற்கு உணவு - உடை - உறைவிடம் அவசியம். இவைகள் பல வண்ணங்களில் கிடைக்காவிட்டாலும், அவன் நடமாட, அன்றாடத் தேவைகளை மேற்கொள்ள இம் மூன்றும் அவனுக்கு தேவையான அளவு பூர்த்தி செய்யும் சமுதாயமே கம்யூனிச சமுதாயம்! இவ்வுன்னதமான சமுதாயத்திற்கு மக்களை அழைத்துச் செல்பவனே உண்மையான கம்யூனிஸ்ட்!!

அவர்கள் என்ன செய்தார்கள்?

சமுதாய மாற்றத்தின் சிற்பிகளான இந்த கம்யூனிஸ்டுகள், எப்படியிருக்க வேண்டும்? கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், ஹோசிமின், காஸ்ட்ரோ, சே-குவேரா போன்ற பிதாமகன்கள் போல உருவத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் பின்பற்றிய, உருவாக்கிய தத்துவங்களை நடைமுறையில் கையாளும் மதிநுட்பம் கொண்டவர்களாக இருந்தாலே போதும்! அப்படியென்ன இத்தலைவர்கள் செய்தார்கள்? மார்க்சும், ஏங்கல்சும் 1848ஆம் ஆண்டு “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்ற நூலை வெளியிட்டு ‘கம்யூனிசம்’ என்ற மக்களுக்குரிய புதிய தத்துவத்தை இந்த முதலாளித்துவ உலகில் உலவச் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தை ரத்தினச்சுருக்கமாக கூறுவதென்றால், “தனிச் சொத்துடைமையை ஒழித்தல்” என்பதாகும். அதாவது, நாட்டிலுள்ள அனைத்துச் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டு, அரசே முன் நின்று மக்களின் நலனுக்காக அச்சொத்துக்களை முறை யாகப் பயன்படுத்தும் என்று பொருள். தனிச் சொத்து டைமை என்ற  முதலாளித் துவத்தை எப்படி வீழ்த்துவது? பாட்டாளிகள் ஒரே வர்க்கமாக ஓர் அணியில் பிணைய வேண்டும். பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! அரசியல் அதிகாரத்தை, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் கைப்பற்றினால் தான் நாட்டின் சொத்துக்கள் பொதுவுடைமையாகும். பொருட்களை பதுக்குகிற வேலை இச்சமுதாயத்தில் இருக்காது! உழைக்கிற நோக்கம் உறுதியாக்கப்படும்! ஒருவரையொருவர் கெடுக்கிற கேடு எண்ணம் தவிர்க்கப்படும்! மக்கள் ஜனநாயகப் புரட்சி, சோசலிசம் படிக்கட்டுகளை தாண்டி கம்யூனிசம் என்னும் உன்னதமான சமூகத்திற்குச் சென்றால் தான் மனிதர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆகவே அச்சமுதாயத்தை படைக்க வழிவிடுங்கள் என்று தற்போதைய ஆளும் வர்க்கத்திடம் கம்யூனிஸ்ட் விண்ணப்பிக்க மாட்டான்!

யாசகம் கேட்கமாட்டார்கள்...

புரட்சியை நடத்த ஆளும் வர்க்கத்திடம் யாசகம் கேட்க முடியாது!. முதலாளித்துவம், நிலப் பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் என்றுமே சோசலிச சமூகம் அமைய புரட்சியை அனுமதிக்காது. இருப்பவன் - இல்லாதவன், ஏழை - பணக்காரன், உழைப்பவன் உழைப்பைத் திருடுபவன் என்ற இழிவான சமுதாயக் கட்டமைப்பு தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் இம்மூன்று சக்திகளும் சிரத்தையோடு எப்போதும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். ஏனெனில், சோசலிசம் மலர்ந்து விட்டால் தகுதிக் கேற்ப வேலை, வேலைக்கேற்ற ஊதியம் அமலாகும். எனவே ஒவ்வொரு மனிதனும் அவரவர் தகுதிக்கு பணியாற்றியே ஆக வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமர்ந்தே உணவருந்திய, ஆதிக்கம் செலுத்தியே பழக்கப்பட்ட முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவவாதிகள் எப்பாடுபட்டேனும் புரட்சியை நடத்த விட மாட்டார்கள்! ஆனால் பாட்டாளி வர்க்கம் விவசாயிகளை நேசப்படையாக இணைத்துக் கொண்டு மக்கள் ஜனநாயகப் புரட்சியை கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடத்தியே தீரும்! சகலவிதமான அதிகாரம், படை பலங்களைக் கொண்ட முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை வீழ்த்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தும் கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட மனவலிமையுடன், வர்க்க உணர்வுடன் மக்கள் தலைவனாக இருக்க வேண்டும் தெரியுமா?

தொழிலாளி வர்க்க குணம்...

ஏற்கனவே கூறிய மாதிரி சிவப்பாகவோ அல்லது ஹெர்குலஸ் போல கட்டுடல் கொண்ட பலசாலியாகவோ ஒரு கம்யூனிஸ்ட் இருக்க வேண்டியதில்லை. எதார்த்தவாதியாக, தொழிலாளி வர்க்க குணத்தோடு இருந்தாலே போதும். எதார்த்தம் என்றால் வெகுளி என்று அர்த்தம் அல்ல! உண்மை பேசுபவர்களாக, மக்களிடம் சகஜமாகப் பழகுகின்ற தன்மைதான் எதார்த்தம். தொழிலாளி வர்க்க குணம் என்றால், ஏதாவது ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அநியாயம் எங்கு நடந்தாலும், அப்போதே அதற்கு நியாயம் கேட்கும் பாங்கு வேண்டும்! அநீதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி, போராட்டக்களத்தில் இறங்கி வெற்றி காணும் தளபதிகளாக விளங்க வேண்டும்! அதுதான் தொழிலாளி வர்க்க குணம். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவங்களை மனதிற்குள் நிலை நிறுத்த வேண்டும். ஸ்தாபன கோட்பாடுகளை கட்சித்தலைமை வழிகாட்டுதலோடு கடைப்பிடிக்க வேண்டும். தத்துவம், நடைமுறை இவ்விரு வீரியமான விசயங்களை இரட்டை மாட்டு வண்டி போல சீராக இயக்க வேண்டும். தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனம் போன்றது, நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம் போன்றது என்று புரட்சியாளர் ஸ்டாலின் கூறியுள்ளதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் நினைவு கூர்ந்து செயலாற்ற வேண்டும். காற்றும், நீரும் மனிதனுக்கு உயிர் வாழ எப்படி அவசியமோ, அதுபோல கம்யூனிஸ்டுகளுக்கு தத்துவமும், நடைமுறையும் சமுதாய மாற்றத்திற்கான ஜீவனான கண்கள் என்று உணர வேண்டும்.

எளிமையே வலிமை!

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுதான் உண்மையான அழகு! மக்களுக்கு ஒத்துவராத அந்நிய வர்க்கப் பண்புகளான டாம்பீகம், லஞ்சம், ஊழல், மது அருந்துதல், வரதட்சணை வாங்குதல், மனைவிகளை அடித்தல், ஒழுக்கக்கேடு போன்றவற்றிற்கு வெகு தொலைவாக இருப்பவர்களே கம்யூனிஸ்ட்! எளிமையான வாழ்க்கையை கடைப் பிடிப்பவன் கம்யூனிஸ்ட்! எளிமை என்றால், எலும்பும் தோலுமாக, அழுக்குச் சட்டையோடு சொன்ன வேலைகளை செய்யும் அப்பாவி என்று அர்த்தமல்ல!  பல நவீன வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அரசு அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும், அவைகளை தவிர்த்து குடும்ப நிகழ்ச்சிகளை பழமை யான சடங்குகளை சங்கட மில்லாமல் கடந்து ஆடம்பர மில்லாமல் நடத்துவது, மக்க ளோடு, தொழிலாளர்களோடு சகஜமாகப் பழகி அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளை போக்கி நன்மதிப்பை பெறுவது தான் எளிமை! பதவிகளுக்காக நாடி ஓடிச் செல்லாமல், பதவி வரும் போது மட்டுமே அதை ஏற்று, பணிவோடு நடந்து துணிவோடு செயல்படுவதும் எளிமையான வாழ்க்கையே! அது மட்டுமல்ல, நாட்டு ஒற்றுமை, மக்கள் நலனுக்கான போராட்டங்களின் போது மரணத்தை புன்னகையோடு வரவேற்பவன் கம்யூனிஸ்ட்! கம்யூனிஸ்ட் என்றுமே புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறான்.!

மக்கள் ஊழியர்கள்!

தன்னலம் பெரிதா, கட்சிநலன் பெரிதா என்றால் கட்சி நலன்தான் பெரிது என்பவன் கம்யூனிஸ்ட் ! கட்சிநலன் பெரிதா நாட்டுநலன் பெரிதா என்றால் நாட்டுநலனே என்று உடன் சொல்பவனும் கம்யூனிஸ்ட்! உலகிலேயே உயர்ந்த சிறந்த பதவி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பதவி மட்டுமே என்று உரத்த குரலில் சொல்பவனும் கம்யூனிஸ்டே!! மேற்குவங்கத்தில் ஜோதிபாசு, புத்ததேவ் மாநில முதல்வராக இருந்த போதும் சரி! திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தி, தசரத்தேவ், மாணிக்சர்க்கார் முதல்வராக இருந்த போதும் சரி! கேரளாவில் இஎம்எஸ், இ.கே.நாயனார், அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோதும் சரி! தற்போது பினராயி விஜயன் தலைமையில் மாநில அரசு இயங்குகிற போதும்சரி, முதல்வர் உள்பட அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், அவைகளை கட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, கட்சி தரும் மாத அலவன்ஸான ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை மட்டும் பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே உள்ளனர்! மேலும் கம்யூனிஸ்டுகளின் வீடுகளிலிருந்தது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்கள், தங்க ஆபரணங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற செய்தி இதுவரை எந்த நாளிதழிலும் வரவில்லை என்ற செய்திக்கு சொந்தக்காரர்கள் கம்யூனிஸ்டுகளே! ஏனென்றால் அவர்கள் என்றும் மக்கள் ஊழியர்களே! இத்தகைய உன்னதமான உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஏப்ரல் 2-6 வரை நடைபெற உள்ளது. பொதுமக்களே, பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் ஏனைய முதலாளித்துவ, சாதியக் கட்சிகளுக்கும் மாற்று சக்தி கம்யூனிச இயக்கமே! திரும்பிப் பாருங்கள் - யோசியுங்கள்! வாழுகிற போதே சொர்க்கத்தை உணர்வோம்! அனுபவிப்போம்! கம்யூனிச சமுதாயத்தை படைப்போம்!