அடுத்த வாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி யாக டொனால்டு டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அமெரிக்க ஜனநாயகத்தின் வரலாற்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு “குற்றவாளி” தண்டனையைத் தலையில் சுமந்து கொண்டு ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல்முறை.
ஆணவமும் அதிகாரமும்
ஜனநாயக விழுமியங்கள், நாடாளுமன்ற மரபுகள், காலம்காலமாக பின்பற்றி வருகின்ற நடைமுறைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் என்ற ஆணவத்தோடு, தன்னை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் டிரம்ப், தனது நடவடிக்கைகள், செயல்முறைகள், அணுகுமுறை என எதையும் மாற்றிக்கொள்ளாமல் அமெரிக்க நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய இருக்கிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய ராணுவம், உலகின் மிகப்பெரிய சந்தை, அறிவியல்-தொழில் நுட்ப ஆற்றலின் சிகரம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றெல் லாம் அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்றி ருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்பது அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை. “தான்” என்ற ஆங்காரத்தையும், தங்களிடம் இல்லா தது எதுவும் இல்லை என்ற தற்பெருமையும், உலக நாடுகள் அனைத்தையும் மேலாண்மை செய்து உலகை ஒழுங்குபடுத்தும் தகுதி தங்களிடம் மட்டுமே இருக்கிறது என்ற அகம்பாவமும் சராசரி அமெரிக்கரின் மரபணுக் குணங்கள். மேனாள் அமெரிக்க உள்துறை செயலர் சொன்னது போல அவர்க ளைப் பொறுத்தவரை “அமெரிக்கா உலகின் எந்த நாட்டாலும், யாராலும் தவிர்க்கமுடியாத ஒரே நாடு” (world’s only indispensable nation). தங்களது நாட்டைப் பற்றிய பெருமிதமும், தங்க ளது தகுதிகளின் மீது தன்னம்பிக்கையும், தாய்நாட்டுப் பற்றும் அனைவருக்கும் இயற்கையானதே! தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்! இந்த ஆணவமே ஒரு நாட்டின் தலைவரை வழிநடத்தும் கொள்கையாக இருந்தால் அந்த நாட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பதவியேற்பதற்கு முன்னரே டிரம்ப் வெளிப்படுத்த துவங்கிவிட்டார்.
இறுமாப்புடையவனின் முதல் நோக்கம்
அமெரிக்க குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவல கத்தில் அமர இருக்கும் டிரம்ப்பின் கைகளில் இருக்கும் அதிகாரங்கள் சாதாரணமானவையல்ல. கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன் றத்தில் அவரது கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இருக்கவில்லை. இந்த முறை அவருக்கு நாடாளு மன்றத்திலும் பெரும்பான்மை உள்ளது. நமது நாட்டைப்போல நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமும் அங்கே இல்லை. அவருக்குப் பிடித்த மான யாரையும் அவர் அமைச்சராக வைத்துக் கொள்ள லாம். நமது வீட்டு குழந்தைகளுக்கு பீசா ஆர்டர் செய்து அனுப்புவதைவிட வேகமாக அவரால் உலகம் முழுமையும் கண்ணிமைக்கும் நேரத்தில் இருபது முறை எரித்துச் சாம்பலாகும் சக்திவாய்ந்த அணு ஆயு தங்களை தாங்கிய 5044 அதிவேக ஏவுகணைகளை எந்த நாட்டை நோக்கியும் ஏவமுடியும். இறுமாப்பு உடையவன் கைகளில் அதிகாரமும் ஆயுதமும் கிடைத்தால் எப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதை உலக வரலாற்றின் பல பக்கங்களில் பார்த்துள்ளோம். தங்கள் கரங்களில் இருக்கும் அதிகாரத்தை வைத்து அடுத்த நாட்ட வர்களது நிலங்களையும், வளங்களையும் கைப்பற்று வதுதான் அவர்களது முதல் நோக்கமாக இருக்கும்.
கிரீன்லாந்தை கைப்பற்ற சதித்திட்டம்
ஆட்சியில் அமர்ந்தவுடன் அண்டைநாடான கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளி யிட்டதோடு மட்டுமில்லாமல் அப்படி இணைத்துக் கொள்ள கனடா உடன்படவில்லையென்றால் அந்நாட்டின்மீது பல பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாகவும் மிரட்டுகிறார். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிரீன்லாந்து தீவினை தங்களுக்கு விற்றுவிடவேண்டும் என்று கேட்கிறார். ஆர்க்டிக் துருவப்பிரதேசமான இந்த தீவு அமெரிக்காவுக்கு அருகில் உள்ளது. அமெரிக்கா வுக்கு இங்கே ஒரு விமானத்தளம் இருக்கிறது. 57000 மக்கள் மட்டுமே வாழும் இந்த தீவில் சமீபத்தில் நடத்தப்பட்ட புவியியல் ஆய்வு, மின்சார வாகனங் கள் மற்றும் அதற்கான பேட்டரிகள் செய்ய அவசிய மான 34 மூலப்பொருட்களில் 25 பொருட்கள் ஏராள மாக இந்த தீவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தீவைச் சுற்றி 28,000 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன. அதற்கு கீழே ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெய்யும் எரிவாயுவும் மண்டிக்கிடப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. “அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், உலக நாடுகளின் நன்மைக்கா கவும் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமான தாகவும் அதன் ஆட்சியிலும் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது” என டிரம்ப் அறிவித்த சில நாட்களில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர், கிரீன்லாந்துக்கு சென்று சில ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரீன்லாந்தை அமெ ரிக்கா கையகப்படுத்தும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்க ஒரு சட்ட முன்வடிவை தயார் செய்து, சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி யுள்ளனர். தற்போது டிரம்ப் பனாமா கால்வாயின் நிர்வாகத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கத் தவறினால் ராணுவ நட வடிக்கை மூலம் கைப்பற்ற நேரிடும் என எச்ச ரித்துள்ளார்.
மெக்சிகோ வளைகுடாவை வளைக்க...
“மெக்சிகோ வளைகுடாவை” இனிமேல் “அமெ ரிக்க வளைகுடா” என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸ், கலிபோர்னியா, நேவடா, ஊட்டா, கொலராடோவின் பெரும்பகுதி, நியூ மெக்சி கோ, அரிசோனா ஆகிய நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் மெக்சிகோ நாடாகவே இருந்தன. அந்நாட்டின்மீது யுத்தம் நடத்தி அந்நாட்டின் பரப்பள வில் 55% பகுதிகளை சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் அமெரிக்கா தன்னோடு இணைத்துக் கொண்டது. அதற்காக அமெரிக்கா மெக்சிகோவுக்கு 15 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஒரு ஏக்க ருக்கு 5 சென்ட் என்ற ஈனக்கிரையத்தில் லட்சக்கணக் கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றிக் கொண்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளை யெல்லாம் சேர்த்து “அகண்ட பாரதம்” அமைக்க வேண்டும் என்று சில சங்கிகள் நம் நாட்டில் பேசி வருவது போல, கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து போன்ற பகுதிகளைச் சேர்த்து “அகண்ட அமெ ரிக்கா” அமைத்திடவேண்டும் என்பது டிரம்பின் பேராசை.
வரிவசூல் நெருக்கடி ஆயுதம்
அந்நிய நாடுகளின் நிலங்களின் மீதும் வளங்க ளின் மீதும் கண் வைத்துவிட்ட டிரம்ப் அவைகளை வளைத்துப்போட தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரி வசூலுக்காக ஐஆர்எஸ் -IRS (Internal revenue service) என்ற அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரவேண்டிய வரிகள், கட்டணங்கள், ஈவுத் தொகை கள் ஆகியவற்றை வசூலிக்க தனியார் நிறுவனங்க ளால் நிர்வகிக்கப்படும் இஆர்எஸ் - ERS (External revenue service) என்ற அமைப்பை உடனடியாக துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளோடு கடந்த காலங்களில் போடப்பட்ட வணிக ஒப்பந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சாதக மாகவும் அமெரிக்க நலனுக்கு பாதகமாகவும் இருக்கி றதாம். இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிகமான வரிகளை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்ப தாகவும் அதனை குறைப்பதற்காக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களிடம் இருந்து அதிக கட்டணங்களையும், வரிகளையும் வசூலிப்பதே டிரம்பின் திட்டம். இதனால் கனடாவும், மெக்சிகோவும் மிக அதிகமாகப் பாதிக்கப்படும். கனடாவின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்று விடும். ஏற்கனவே பல பொருளாதாரச் சிக்கல்களில் மூழ்கித் தவிக்கும் மெக்சிகோ திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை.
டிரம்ப் தாக்குதலை இந்தியா சமாளிக்குமா
சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான் மற்றும் இந்தியாவும் இந்த நடவடிக்கையால் வெகு வாகப் பாதிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்த வரை ஏற்கனவே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் டிரம்பின் இந்த தாக்குதலை சமாளிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்க ஏற்றுமதியை அதிகரித்தும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு மிக அதிகமாக வரி விதித்தும் தங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் “வணிக உபரி தொகையினை” (trade surplus) குறைக்க டிரம்ப் திட்டமிடுகிறார். இத்தகைய நடவடிக்கைகள் உலக பொருளாதார விநியோகச் சங்கிலியில் (world economic supply chain) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனால் உலகம் தழுவிய பொருளா தார மந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அநேகம். “மீண்டும் அமெரிக்காவை பிரம்மாண்டமாக கட்டமைப்போம் (Make America great again) என்ற டிரம்பின் திட்டத்தை செயல்படுத்த அவர் எடுக்க இருக்கும் பல முன்னெடுப்புகளால் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வெகுவாக மாறும். அமெரிக்க உற் பத்திகளை பாதுகாக்க அதனைச் சுற்றி அவர் அமைக்க உத்தேசித்துள்ள “பாதுகாப்பு வளையம்” உலக ளாவிய வணிக சுதந்திரத்துக்கு பெரும் நெருக்கடி தரும். புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் நிரந்தரமற்றதாக மாறிவிடும். புவி வெப்பமயமாக்கு தலை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. டிரம்பைப் பொறுத்தவரை “புவிவெப்பமயமாதல் என்பது ஒரு அறிவியல் மோசடி. அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து பணம் கறக்க விஞ்ஞானிகள் சிலர் தயாரித்துள்ள கட்டுக்கதை”. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசச் சட்டம் போன்ற அனைத்து நாடுகளின் உறவுகளைப் பேணி வளர்க்கின்ற எந்த அமைப்புகளிலும் அவருக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்க நலன் மட்டுமே முக்கி யம். உலக நன்மைகளைப் பற்றி சிந்திக்கவும், அதற் காக பணம் செலவழிக்கவும் அமெரிக்கா இனிமேல் முன்வராது என்பதே அவரது நிலைப்பாடு.
நட்பால் நன்மையில்லை
இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் தனிப்பட்ட நட்பு இருப்ப தால் டிரம்பின் பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் இருக்கும் சங்கிகள் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அவரது நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவழி அமெரிக்கர்களைக் காண்பித்து இந்தியர்களை டிரம்ப் மிகவும் நம்பி நேசிப்பவர் என்று சொல்கிறார்கள். ஆனால் இது வரை பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு பெரும் நன்மைகள் நடப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரிய வில்லை. கடந்த முறைகூட அமெரிக்க ஆப்பிள் பழம் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியப் பொருட்க ளுக்கு உதவும் வகையில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டபோது இந்திய அரசை மிரட்டி அந்த வரி விதிப்பை நமது அரசு திரும்பப் பெற்றதை நினை வில் கொள்ள வேண்டும்.
டாலருக்கு சளி பிடித்தால் ரூபாய்க்கு ஜன்னி
டிரம்ப் அரசு பின்பற்ற இருக்கும் பி-1 விசா நடை முறைகளை காரணம் காட்டி பல இந்தியத் தொழில் விற்பனர்களை, பல நிறுவனங்கள் வேலைகளிலி ருந்து நீக்கத்துவங்கிவிட்டன. பல பெரிய அமெ ரிக்கக் கம்பெனிகள் இந்தியத் தொழில் நுட்பவியலா ளர்களை வேலைகளில் அமர்த்தி அதற்கான உத்தர வாதக் கடிதங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்ததால் அவர்களும் அமெரிக்க வேலை வாய்ப்பினை நம்பி ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைகளில் இருந்து விலகிவிட்டனர். இப்போது அவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருந்த வேலை வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகம் எடுக்க இருக்கின்ற கொள்கை முடிவுகளை சுட்டிக்காட்டி திரும்பப் பெறுவதாக தெரிவித்து விட்டனர். “அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும் என்பார்கள்! இப்போது ஜன்னியே வந்துவிடும்” என்று பயமாக இருக்கிறது என இந்திய ஏற்றுமதியாளர் ஒருவர் அச்சப்பட்டார்.
இடதுசாரி, ஜனநாயக அரசுகளுக்கு குறி...
ஒன்று மட்டும் நிச்சயம்! ஜனவரி இருபதுக்குப் பின்னர் உலகம் நிச்சயமாக வழக்கமான உலகமாக இருக்காது. மதம் பிடித்த யானை வெண்கலப் பாத்தி ரக் கடைக்குள் புகுந்த கதைதான் நினைவுக்கு வரு கிறது, எலான் மஸ்க், விவேக் ராமசாமி போன்ற இதய மற்ற “உலக கோடீஸ்வரர்களின் கூட்டு முயற்சியே” டிரம்பின் வெற்றி. நவீனத் தொழில் நுட்பங்களும், பெரும் பணமும், கலப்படமற்ற சுயநலமும் ஒன்று சேர்ந்து பொய்யான தகவல்களையும் தவறான பிரச்சா ரங்களையும் பயன்படுத்தி பொது மக்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் தங்களுடைய விருப்பத்திற்கிணங்க வளைக்க முடியும் என்பதற்கு நடந்து முடிந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. உலகப் பணக்காரர்களின் பெரும் செல்வத்தை யும், வரைமுறையில்லாத பொருளாதாரச் சுரண்டல்க ளையும் பாதுகாப்பது மட்டுமே டிரம்ப் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். தங்களது இந்த முயற்சி யில் வெற்றியை ருசித்துவிட்ட இவர்கள், தற்போது உலகம் முழுவதும் இருக்கின்ற இடதுசாரி, ஜனநாயக அரசுகளைக் குறிவைக்க துவங்கிவிட்டனர். இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் அடுத்த ஆட்சி மாற்றம் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்கிறார் எலான் மஸ்க். ஜெர்மனியில் மீண்டும் நாஜிக்களின் ஆட்சி வந்தால் மட்டுமே அந்த நாடு வளம் பெறும் என்ற பிரச்சாரத்தை தனது “டிவிட்டர்” நிறுவனம் மூலம் துவங்கிவிட்டார். உலகெங்கிலும் வலதுசாரி, பாசிச அரசுகளை ஜனநாயகத்தின் முகமூடியில் அமைப் பதே டிரம்ப் & எலான் மஸ்க் பாவக்கூட்டங்களின் நோக்கம். ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் ஆகிய வற்றில் நம்பிக்கை கொடை அரசியல் சக்திகள், உலகம் முழுவதும் கவனமாக இருக்கவேண்டும்.