இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டணி ஆட்சியின் கொடிய பொருளாதார தாக்குதலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டங்களின் புதிய வடிவங்களை - வியூகங்களை மதுரையில் நடைபெற உள்ள 24வது அகில இந்திய மாநாட்டில் வகுக்க உள்ளது. உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞரும் மார்க்சிய பொருளாதார வல்லுநருமான பேரா. பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள இக்கட்டுரை(The Economy and the New NDA Government, The Marxist XXXX, 1–2 January-June 2024)நவீன தாராளமயமும், இந்துத்துவாவும் எப்படி ஒன்றுக்கொன்று உதவி செய்து வருகின்றன என்பதை விளக்குகிறார்.
2008ல் அமெரிக்க வீட்டுவசதித் துறையில் ஏற்பட்ட சரிவு முதலாளித்துவ உலகின் நெருக்கடியை ஆழப்படுத்தியது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களுக்கும் ஜனநாயக அரசியல் முறைக்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படையாயின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (யுபிஏ-2) அரசு நிதிப் பற்றாக்குறையை அதிகரித்தது. இது சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பையும், உள்நாட்டு பெருநிறுவன-நிதி மேல்தட்டின் கோபத்தையும் சம்பாதித்தது.
இந்துத்துவா-பெரு முதலாளித்துவ கூட்டணியின் தோற்றம்
இந்த சூழலில்தான் பெருமுதலாளித்துவ சக்திகள் இந்துத்துவா சக்திகளுடன் கைகோர்த்தன. நரேந்திர மோடி இந்த கூட்டணிக்கு ஏற்ற நபராக செயல்பட்டார். குஜராத் முதல்வராக இருந்தபோது நடத்திய முதலீட்டாளர் மாநாடுகளில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல், ஜாம்ஷெட் கோத்ரேஜ் போன்ற தொழிலதிபர்கள் மோடியை ‘நாட்டின் தலைமை நிர்வாகி’ ஆக்க வேண்டும் என ஆதரவு அளித்தனர்.
பெருமுதலாளிகளுக்கான சலுகைகள்
இவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பெருமுதலாளிகளுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் வரி 30%லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டது. 2014 முதல் 2023 வரை ரூ.17.46 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பொதுத்துறை நிறு வனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் விற்கப்பட்டன.
தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகள்
29 தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களாக கொண்டுவரப்பட்டன. குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்வது கடினமாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தொழிற்சங்கங்களை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஒப்பந்த முறை தொழிலாளர் நியமனம் எளிதாக்கப்பட்டது.
விவசாயிகள் மீதான தாக்குதல்
விவசாயிகளுக்கான நிறுவன கடன்கள் குறைக்கப்பட்டன. உள்ளீட்டு மானியங்கள் வெட்டப்பட்டன. பணப்பயிர்களுக்கான விலை ஆதரவு நீக்கப்பட்டது. மூன்று விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஓராண்டு போராட்டத்துக்குப் பிறகே அவை திரும்பப் பெறப்பட்டன.
சிறு வணிகர்கள் மீதான நெருக்கடி
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவை இரண்டுமே பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களின் பரிந்துரைகள். சிறு வணிகர்களின் கடன் சுமை அதிகரித்தது. வரி விதிப்பு கூடியது. கணக்கு வைப்பதற்கான செலவுகள் அதிகரித்தன.
வேலையின்மை நெருக்கடி
நான்கு காரணங்களால் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது:
1. நவீனதாராளமய கொள்கைகளால் வேலை உருவாக்கம் குறைந்தது.
2. அதிகரித்த ஏற்றத்தாழ்வுகளால் உற்பத்தி நெருக்கடி.
3.பணக்காரர்களின் நுகர்வு முறை வேலைவாய்ப்புகளை குறைக்கிறது.
4.சிறு தொழில்கள் மீதான தாக்குதல்கள் வேலை இழப்புக்கு காரணமாகின்றன.
தீர்வுக்கான வழி
பொருளாதார மாற்றங்கள் அவசியம்: uமூலதன வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் uவர்த்தகக் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் uஅரசின் பங்கை அதிகரிக்க வேண்டும் u சிறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும் u விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் u உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும் u உரிமை அடிப்படையிலான நல அரசை உருவாக்க வேண்டும்
“வளர்ச்சியின் பலன்கள் சொட்டுச் சொட்டாக கீழே கசியும் (Trickle down) என்ற நவீன தாராளமயத்தின் வாக்குறுதி முற்றிலும் பொய்யானது என்பது நெருக்கடியால் அம்பலமானது.”
“நவீன தாராளமய கொள்கைகளைத் தொடர் வதற்கு ஒரு புதிய கதையாடலும், புதிய ஒற்றை அணிதிரட்டலும் தேவைப்பட்டது. அதற்காகவே பெருமுதலாளித்துவ-நிதி மூலதன முதலாளித்துவம் பாசிச இந்துத்துவா சக்திகளை நோக்கித் திரும்பியது. ஜனநாயகத்தின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு, உள்ளே நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர இது உதவியது.”
“தலைவரை தெய்வமாக்குவதே இத்தகைய கார்ப்பரேட் - மதவெறி கூட்டணி ஆட்சியின் முக்கிய குணாம்சம். உண்மைகளை ஏற்றுக்கொள்வது இதற்கு அந்நியமானது. தலைவர் சொல்வதே உண்மையாக இருக்க வேண்டும்.தலைவரின் கொள்கைகளே சரியான கொள்கைகளாக இருக்க வேண்டும்.”
“பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேலையின்மையை அதிகரிக்கும் நவீன தாராளமயக் கொள்கையின் முட்டாள்தனத்தை ஒரு உதாரணத்தின்மூலம் விளக்கலாம். சில பொருட்களின் விலையேற்றத்தை அரசு தலையீட்டால்கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பதிலாக வேலையின்மையை அதிகரிப்பது கொடூரமானது.1930களில் தேசிய மூலதனம் இருந்தது. அதனால் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை
அதிகரிக்க முடிந்தது. இன்றோ சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே தேசிய அரசுகள் அதன் விருப்பத்துக்கு எதிராக செயல்பட முடிவதில்லை.
“கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களின் போராட்டங்களால் நான்கு தொழிலாளர் சட்ட திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளின் ஒரு ஆண்டு போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவைத்தது. இது மக்கள் ஒற்றுமையின் வெற்றி.”
“வெங்காயம், உருளை, தக்காளி போன்ற காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்கிறது. இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி
வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இது வேலையின்மையை அதிகரிக்கிறதே தவிர விலைவாசியைக் குறைப்பதில்லை.”
“பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் சிறு உற்பத்தியாளர்களை அழிக்கும் கருவிகளாக மாறின. இவை இரண்டுமே பன்னாட்டு நிதி நிறுவனங்களின் பரிந்துரைகள். இவற்றால் சிறு வணிகர்கள் கடன் சுமையில் மூழ்கினர்.”
“இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதே நிலையில் உள்ளது. ஆனால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.இது வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரிப்பதைக் காட்டுகிறது.”
“நல அரசு என்பது வெறும் வார்த்தையாக இருக்கக்கூடாது. அது உரிமை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அதற்கான நிதி பணக்காரர்கள் மீதான வரி மூலமும், சொத்து வரி மூலமும் திரட்டப்பட வேண்டும்.”
“பணக்காரர்களின் நலனுக்காக இயங்கும் இந்த பொருளாதார முறையை மாற்றாமல் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. நமக்குத் தேவை பொருளாதார மாற்றமும் சமூக மாற்றமும்தான்.”