தாஷ்கண்ட்டில் எம்.என்.ராய் முதல் கிளையை உருவாக்கி வந்த நேரத்திலேயே இந்தியாவில் மூன்று கம்யூனிஸ்ட்டுகள் மூன்று நகரங்களில் தோன்றினர். இவர்கள் தாம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்கக்கால முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்கள் ம.சிங்காரவேலர், எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது ஆகிய மூவர் ஆவர். இவர்களில் மூத்தவர் ம.சிங்காரவேலர்.
அவர் 1860 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு வசதி படைத்த மீனவக் குடும்பத்தில் பிறந்தார். அவர் லெனின் மற்றும் காந்தியை விட வயதில் மூத்தவர். 1894ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டத்தை முடித்து பின்னர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1907ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர் தீவிர மான காங்கிரஸ் ஊழியரானார்.
சென்னை தொழிலாளர் சங்கம்
1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சி அவர் மீது பெரும் தாக்கம் செலுத்தியது. லெனின் தலைமை குறித்தும் ரஷ்யப் புரட்சியின் சாதனைகள் குறித்தும் கிடைத்த விவரங்கள் அனைத்தையும் படித்தார். அவற்றை சேகரித்தும் வைத்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் நூல்களைப் படித்து மார்க்சியவாதியானார். 1918ஆம் ஆண்டில் அவ ரது நெருங்கிய தோழரும், தமிழறிஞரும் தேச பக்தரு மான திரு.வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க) சென்னை பின்னி மற்றும் கர்னாட்டிக் மில் தொழி லாளருக்காக ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ துவக்கினார். அவர் தன் நெருங்கிய நண்பர் சிங்கார வேலரும், அந்த சங்கக் கூட்டங்களுக்கு வந்து தனக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்கார வேலர் அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்ட லானார். படிப்படியாக அந்த தொழிலாளர்களின் கூட்டங்களில் மார்க்சிய தத்துவம் குறித்து எளிமை யாக விளக்கவும் ஆரம்பித்தார். உழைப்பு என்றால் என்ன? முதலாளி என்பவர் யார்? அவர் எவ்வாறு தொழிலாளிகளின் உழைப்புச் சக்தியை கூலிக்கு வாங்கி அதிகம் லாபம் பெறுகிறார் என்பதையும் தொழிலாளிகள் எவ்வாறு ஒன்றுபட்டு அந்த முதலாளிக்கெதிராகப் போராட வேண்டும் என்பதைப் பற்றியும் மிக எளிய முறையில் அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அச்சமயத்தில் இந்த இரண்டு மில்களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழி லாளிகளின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெ டுத்தார்.
பின்னி மில் துப்பாக்கிச்சூடு
1920 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி மில் தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு தொழிலாளி களைக் கொன்றது. அவர்களின் அடக்க நிகழ்ச்சி யின் போது அவர்கள் உடல்களைத் தூக்கிச் சென்ற வர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார். அதன் பின் 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று காவல்துறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஏழு பின்னி மில் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர் களில் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கார வேலர் அதைக்குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். சென்னையில் சிங்காரவேலர் இவ்வாறு மார்க்சியப் பிரச்சாரம் செய்து வரும் காலத்தில் பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே என்ற இளைஞரும், கல்கத்தாவில் முசாபர் அகமது என்ற இளைஞரும், மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு அந்தக் கருத்தை விளக்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவர்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் ஆவர். ஏற்கெனவே சொன்னபடி இந்தியாவில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பு அகி லத்தால் கொடுக்கப்பட்ட எம்.என்.ராய் இப்பொழுது இவர்கள் மூவரையும் தொடர்புகொண்டு ஒன்றி ணைக்கத் தொடங்கினார். சென்னையில் சிங்காரவேலர் மார்க்சியத் தத்துவத்தை தொழிலாளிகளிடையே பரப்பு வதற்காக ‘தொழிலாளன்’ என்ற பத்திரிகையை யும், ‘லேபர் கிஸான் கெஜட்’ என்ற பத்திரிகையை யும் தொடங்கினார்.
கயா மாநாட்டில்...
1922ஆம் ஆண்டில் இன்றைய பீகார் மாநி லத்தில் உள்ள கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அவர் தொழி லாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். அந்த மாநாட்டில் தொழிலாளர் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வழிமொழிந்து அவர் எழுச்சிமிக்க உரையாற்றினார். “உலகக் கம்யூனிஸ்ட்டுகளின் சிறப்பிற்குரிய வரிசை முறை யில் உலக நலனில் அக்கறையுள்ள மாபெரும் இயக்கத்தின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன்” என்ற அறிவிப்புடன் தன் உரையை தொடங்கிய சிங்காரவேலர் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின ருக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். “ஆகையால் பூர்ஷ்வாக்களே! கவனித்துக் கேளுங்கள். நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள். இந்தியத் தொழி லாளர்கள் விழிப்புற்றுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டிலுள்ள அவர்களின் தோழர்களைப் போலவே. குன்றுகளுக்கப்பால், கடல்களுக்கப்பால், பெருங்கடல்களுக்கப்பால் அவர்கள் காண்கின்றனர். உலகத் தொழிலாளர் எல்லோருடனும் உண்மையான தோழமையு ணர்வு கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்க. நீங்கள் இன்று அவர்களைப் புறக்கணிக்க முடி யாது. இவர்கள் தங்கள் வலிமையை இப்போது உணர்ந்துள்ளனர்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
முதல் மே தினம்
1923ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக மே தினத்தை சென்னையில் இரண்டு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடினார். அதே நாளில் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி என்ற தொழிலாளி வர்க்கக் கட்சியை உருவாக்கி னார். அரசியல் கட்சி இருந்தால்தான் தொழிலாளி களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அவர்களுக்கு மார்க்சிய அரசியல் வழிகாட்டல் கொடுக்க முடியும் என்று அவர் கருதினார். கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு 1925ஆம் ஆண்டில் சத்யபக்தா என்பவரின் முன்முயற்சியால் கான்பூர் நகரில் ஒரு கம்யூ னிஸ்ட் மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்கு தலைமை வகித்து சிங்காரவேலர் ஓர் அற்புதமான உரையாற்றினார். அந்த உரையின் நிறைவாக அவர் கூறினார்: “தோழர்களே! இந்தியாவில் கம்யூனிஸ்டு களாகிய நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டி யது எது? எல்லோருக்கும் எளிய வாழ்க்கை, அன்றாட உணவு பற்றிய கவலையற்ற வாழ்வு, அகால மரணத்திலிருந்தும், உடல்நலக் கேட்டி லிருந்தும், விடுதலை பெற்ற வாழ்வு, அறியாமை நீங்கிய வாழ்வு ஆகியவைகளே. கம்யூனிசக் கொள்கைகளைப் படிப்படியாகவும் அமைதியாக வும் கடைப்பிடிப்பதால், இந்தியாவில் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையைக் கொண்டு வர முடியும் என கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் எதிர்காலம் நம் கைகளிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண நாம் கனவு காண்கிறோம். ஆகையால் எளியோரை வலி யோர் சுரண்டல், நம் வாழ்க்கையில் கடும் உழைப்பினால் ஏற்படும் கலையின்மை, பட்டினி, நோய், சாவு ஆகியவைகளிலிருந்து விடுதலை பெற்ற நம் எண்ணங்கள் எத்தடையும் இடையூறு மின்றி வெளிப்படுத்த கலையுருவாக்கும் மிக உயர்ந்த பொருட்கள், விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவைகளை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியா பற்றிய கனவை நிறைவேற்ற முயல்வோம்....”
ரயில்வே எழுச்சி
1928ஆம் ஆண்டில் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் சிங்கார வேலர் தலைமையில் நடைபெற்றது. அது நாகப் பட்டினத்திலிருந்த ரயில்வே தொழிற்சாலையை பொன்மலைக்கு மாற்றக் கூடாது என்ற கோரிக்கை யிலிருந்து உருவானது. பலநாட்கள் ரயில் ஓட வில்லை. கடுமையான தடியடி, சித்ரவதைகள் தொழிலாளிகள் மீது நடத்தப்பட்டன. ஆங்கிலேய அரசாங்கம் சிங்காரவேலரை கைது செய்து பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கச் செய்தது. அது மேல்முறையீட்டில் இரண்டு ஆண்டுகளாக குறைந்தது. 1930ஆம் ஆண்டில் அவர் விடுதலை யானபோது அவருக்கு 70 வயது. அத்துடன் பக்க வாத நோய் ஏற்பட்டது. எனவே வெளியே சென்று செயல்பட முடியவில்லை. வீட்டிலிருந்தவாறே மார்க்சியத் தத்துவம், பொருளாதாரம், அரசியல், சமூக சீர்திருத்தம் போன்றவை குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதி வழிகாட்டினார்.
குடியரசு ஏட்டில்...
1931ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது பத்திரிகை ‘குடியரசு’ ஏட்டிற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர் ‘கடவுளும் பிரபஞ்சமும்’, ‘கடவுள் என்ற பதமும், அதன் பயனும்’, ‘மனிதனும் பிரபஞ்சமும்’, ‘பிரபஞ்சப் பிரச்சனைகள்’, ‘மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்’, ‘மூட நம்பிக்கைகளின் கொடுமை’, ‘பகுத்தறிவு என்றால் என்ன?’ போன்ற அற்புதமான கட்டுரை கள் எழுதி உதவினார். இந்திய நாட்டில் உள்ள பெரும் சமூகப் பிரச்சனைகளான சாதி, மதம், தீண்டாமை மற்றும் பெண் உரிமை இல்லாதி ருத்தல் போன்ற பிரச்சனைகளை அவர் மார்க்சியப் பார்வையிலிருந்து விளக்கினார். தீண்டாமை பற்றி குறிப்பிடும் போது சிங்காரவேலர் அதை மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து இந்தியாவில் அடிப்படையான சமூக மாற்றமின்றி, அதாவது பொருளாதார மாற்றமின்றி, தீண்டாமை ஒழியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
84 வயதில்
அவர் கடைசியாக 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசினார்: “எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை” என்று அவர் முழங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் பெரும் தலைவரும், மார்க்சிய அறிஞருமான சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரண மடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூ னிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார். இன்று (பிப்.11) சிங்காரவேலர் நினைவு நாள்