articles

img

வரிவிலக்கு எனும் போர்வைக்குள் மறைக்கப்பட்டவை! - அ.அன்வர் உசேன்

 இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யப் போவது இல்லை. வரிவிலக்கு எனும் போர்வைக்குள் பாஜகவின் பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதார அனுபவம் மூலம் உணரும் பொழுது அவர்களின் கோபத்தை பாஜக எதிர்கொள்ளும் என்பது நிச்சயம்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த ரூ.12 லட்சம் வருமானம் வரை வரி இல்லை எனும் சலுகை மட்டுமே முற்றிலும் பேசு பொருளாக இருக்கும்படி பாஜக அரசாங்கமும் பெரும்பாலான ஊடகங்களும் பார்த்துக் கொண்டன. வளர்ச்சிப் பாதை யில் திணறிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளா தாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் என்ன என்பதையும் மக்களின் வாழ்வாதாரத் துன்பங்களும் வருமான வரி விலக்கு எனும் ஒரு போர்வைக்குள் மறைக்கப்பட்டன. வேலையின்மை/ கிடைக்கும் வேலையும் சொற்ப ஊதியம் கொண்டவை/ விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் வாங்கும் சக்தி மிகக் குறைவாக உள்ளது எனும் அடிப்படை நிலையை மாற்ற பட்ஜெட் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அதே சமயம் வருமான வரி விலக்கு மூலம் மக்களில் ஒரு பெரிய பிரிவினரின் வாங்கும் சக்தி அதிகரித்துவிடும் என்பது போல பட்ஜெட்டின் சிற்பிகள் கனவு கண்டனர் போலும்! வருமான வரி அறிக்கை தாக்கல் செய்பவர்கள் எத்தனை பேர்? வருமான வரி கட்டுபவர்கள் எத்தனை பேர்? எனும் விவரங்களை ஆய்வு செய்தால் இந்த சலுகை எவ்வ ளவு குறைவான தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை அறியலாம்! 

மிகச்சிறிய பிரிவுக்கே சலுகை

இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடி.  இதில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்பவர்கள் சுமார் 9 கோடி. அதாவது மக்கள் தொகையில் 6.4% பேர். வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் இந்த 9 கோடி பேரில் சுமார் 5.2 கோடி பேர் கட்டும் வருமான வரி 0. அதாவது கட்ட வேண்டிய வருமான வரி பூஜ்ய மாக இருந்தாலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சட்டம் இருப்பதால் அதனை தாக்கல் செய்பவர் கள் இந்த 5.2 கோடி பேர். எனவே வருமான வரி கட்டு பவர்களின் எண்ணிக்கை 3.8 கோடி பேர்தான்! அதாவது மக்கள் தொகையில் வெறும் 2.3% மட்டுமே! இந்த 2.3% பேருக்கு சலுகை என்பதும் வரவேற்க வேண்டிய ஒன்றே! இதனால் பொருளாதார வளர்ச்சி க்கு எத்தகைய நன்மை என்பதே கேள்வி. வருமான வரி கட்டும் இந்த 3.8 கோடி பேருக்கும் வரி விலக்கு ஒரே மாதிரியான நன்மைகள் தரப்போ வது இல்லை. ஏனெனில் இந்த 3.8 கோடி பேரில்,  ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 47%.  (1.8 கோடி). இவர்களுக்கு மிச்சமாகும் வரி ஆண்டு க்கு ரூ.5,000 மட்டுமே! (4 லட்சம் வரை வரி இல்லை. மீதமுள்ள 1 லட்சத்துக்கு 5% வரி). ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 37% (1.4 கோடி). இந்த பிரிவினருக்கு மிச்சமாகும் வருமான வரி 5,000 முதல் 55,000 வரை. (5 லட்சத்துக்கும் மேல் உள்ள வருமானத்துக்கு வரி 10%). மீதமுள்ள 16% பேர் 10 லட்சத்துக்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவதாக அறிக்கை தாக்கல் செய்கின்ற னர். 60 லட்சமாக உள்ள (மக்கள் தொகையில் 0.42%)  இந்த உயர் பிரிவினருக்குதான் இந்த வருமான வரி சலுகை கூடுதலாக பயன்படும்.

அரசுத் திட்டங்களுக்கு பாதிப்பு

ரூ.5 லட்சம் மற்றும் 5 முதல் 10 லட்சம் வரை வருமா னம் ஈட்டுபவர்கள் தமது வருமான வரியை குறைக்க  எல்.ஐ.சி அல்லது தபால் அலுவலக பத்திரங்களில் முதலீடு செய்வது வழக்கம். இந்த நடைமுறை கொண்டு  வரப்பட்டது என்பது மூன்று நோக்கங்களை நிறை வேற்ற. 1. சேமிப்புகளை ஊக்கப்படுத்துதல். 2. வரு மான வரிச் சலுகை. 3. அரசு மற்றும் நலத் திட்டங்களுக்கு வருவாய்.  இந்த முதலீடுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறந்த சேமிப்பு மட்டுமல்ல; இந்த முதலீடுகள் அரசின் கட்டமைப்பு திட்டங்களுக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இப்பொழுது அரசின் வரிச் சலுகை மூலம் இந்த முதலீடுகள் செய்யப்பட வேண்டிய தேவை அகன்றுவிட்டது. எனவே  எல்.ஐ.சி அல்லது தபால் அலுவலகங்கள் ஆகிய பொதுத்துறை பாதிக்கப்படுவது மட்டுமின்றி அரசுத் திட்டங்களுக்கான நிதியும் பாதிக்கப்படும். எனவே இந்த வருமான வரிச் சலுகை என்பது பெரிய அளவுக்கு நன்மை பயப்பது மக்கள் தொகையில் 1%க்கும் குறைவானவர்களுக்கே! இதன் மூலம் எப்படி பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி அதி கரிக்கும்? பொருளாதாரம் எப்படி நன்மை பெறும்?

யாருக்கு வரிச் சலுகை செய்திருக்க வேண்டும்?

அரசின் நுகர்வு ஆய்வறிக்கையின் அடிப்படை யிலேயே கிராமப்புறத்தில் உள்ளவர்கள் செய்யும் சராசரி செலவு மாதத்துக்கு ரூ.4,226 மட்டுமே! நகர்ப் புறத்தில் மக்கள் செய்யும் செலவு ரூ.6,996 மட்டுமே! இதுதான் இந்திய மக்களில் சுமார் 60% பேரின் நிலை! மேலும் இந்திய மக்களில் 80%க்கும் அதிகமானவர்களின் மாத வருமானம் ரூ.20,000க்கும் குறைவு. அதாவது ஆண்டுக்கு ரூ.2,40,000க்கும் குறைவு. இந்த பெரிய பகுதி மக்களுக்கு வருமான வரி விலக்கு எந்த பயனும் தராது! இந்தியப் பொருளா தாரம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் இந்த 80%க்கும் அதிகமாக உள்ள இந்தப் பிரிவின ரின் வாங்கும் சக்தியை அதிகரிக்க பட்ஜெட் முனைப்பு களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் உயர்  வருமானம் உள்ள ஒரு சிறு பிரிவினருக்கு சலுகை அறிவித்துவிட்டு அது அனைத்து மத்திய தர மக்க ளுக்கும் நன்மை என பாஜக அரசாங்கம் கருத்தாக் கத்தை உருவாக்கியது. அதற்கு பெரும்பாலான ஊடகங்கள் பக்க வாத்தியம் வாசிக்கின்றன.  இந்த வருமான வரிச் சலுகைகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி மத்தியதர வர்க்கத்தினரின் கைகளில் தரப்பட் டுள்ளது எனவும் இந்த தொகையை அவர்கள் செலவு செய்தால் பொருளாதாரம் வளரும் எனவும் கூறப்படு கிறது. இந்தியாவின் மொத்த ஜி.டி.பி. தொகை சுமார் ரூ.320 லட்சம் கோடி. இதில் 1 லட்சம் கோடி என்பது வெறும் 0.3%. இந்த 0.3% சலுகை எப்படி ஜி.டி.பி. வளர்ச்சிக்கு வேகத்தை தர முடியும்? மேலும் பொதுவாக மத்திய தர வர்க்கத்தினரில் உயர்மட்ட பிரிவினர் தமது சேமிப்புகளை வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்துகின்றனர் என்பதே பொதுவான அனுபவம். எனவே இந்த 1 லட்சம் கோடியில் எவ்வளவு, உள்நாட்டுப் பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியே! 1%க்கும் குறைவானவர்களுக்கு வருமான வரியில் தரப்பட்ட சலுகை ரூ.1 லட்சம் கோடியை ஈடுகட்ட பல மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டப் பட்டுள்ளது.

40 கோடி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க...

இதே 1 லட்சம் கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு பயன்படுத்தப்படு மானால் அதில் பணியாற்றும் 40 கோடி பேரின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அல்லது இதே தொகையை சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டால் அல்லது பெட்ரோல்/ டீசல் விலை குறைக்கப்பட்டால் கோடிக்கணக்கா னவர்கள் பலன் அடைவர். இந்தப் பிரிவு மக்கள் மீதமாகும் தொகையை உள்நாட்டில் அதுவும் அத்தி யாவசியப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்துவர். அது பொருளாதாரத்துக்குப் பயன்படும். எனினும் பாஜகவின் நோக்கம் அதுவல்ல. இந்த வரிச் சலுகை மூலம் அனைத்து மத்தியதர மக்களுக்கும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பெரும் சலுகை செய்யப்பட்டது எனும் பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்.  மேலும் தில்லி சட்டமன்ற தேர்தல்களில் கணிசமாக உள்ள அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறுவதும் இந்த அறிவிப்பின் நோக்கம் ஆகும். அது நிறை வேறியுள்ளது போலத் தெரிகிறது. எனினும் இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யப் போவது இல்லை. வரிவிலக்கு எனும் போர் வைக்குள் பாஜகவின் பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதார அனுப வம் மூலம் உணரும் பொழுது அவர்களின் கோபத்தை பாஜக எதிர்கொள்ளும் என்பது நிச்சயம்.