articles

img

சிலிர்த்து நின்ற செஞ்சேனை - எஸ்.கார்த்திக்

சிலிர்த்து நின்ற செஞ்சேனை - எஸ்.கார்த்திக்

வரலாற்றின் அசைவுகளுக்கு இயக்கவியல் என்று பெயர்
இயக்கவியலின் கோட்பாட்டிற்கு பொருள்முதல்வாதம் என்று பெயர்

அற்றுப் போன கதைகளுக்கு இதிகாசம் என்று பெயர்
வற்றாத எம் சிந்தனை மரபிற்கு மார்க்சியம் என்று பெயர்

நிலம் அதிரும் நிகழ்வுகளுக்கு அரசியல் எனது பெயர்
நிலைத்து நிற்கும் அரசியலுக்கு கம்யூனிசம் என்று பெயர்

அழுத்துக் களைத்த ஆசைகளுக்கு கனவு என்று பெயர்
வாழ்க்கை பற்றி கனவுகளுக்கு கம்யூனிசம் என்று பெயர்

வாழ்வு குறித்த வரையறைக்கு வள்ளுவம் என்று பெயர்
அதை தருவித்த எம் பாட்டனுக்கு வள்ளுவர் என்று பெயர்

தமிழன் அறம் தந்திட்ட வள்ளலுக்கு பாரி என்று பெயர்
தமிழில் புரட்சி இசைத்தவனுக்கு பாரதி என்று பெயர்

பூத்து நிற்கும் வசந்தத்திற்கு புரட்சி என்று பெயர்
எழுந்த நின்ற புரட்சிக்கு சோவியத் என்று பெயர்

கியூபக் கடலின் படகுக்கு கிரான்மா என்று பெயர்
படகைச் செலுத்திய தளபதிக்கு காஸ்ட்ரோ என்று பெயர்

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விடுதலை என்று பெயர்
விடுதலையின் இலட்சினைக்கு சே என்று பெயர்

ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதிக்கு போராட்டம் என்று பெயர்
போராட்டத்தின் உயிர்நாடிக்கு தொழிலாளி என்று பெயர்

ரத்தம் கொட்டிய சாலைக்கு பெட்ரோகிராட் என்று பெயர்
அந்தச் சாலையை வென்றவனுக்கு லெனின் என்று பெயர்

குளிரின் நடுவே எழுந்த நெருப்புக்கு அக்டோபர் என்று பெயர்
அந்த நெருப்பின் நினைவுகளுக்கு போல்ஷ்விக் என்று பெயர்

தொழிலாளியின் வியர்வைக்கு உழைப்பு என்று பெயர்
உழைப்பின் விலைக்கு சுரண்டல் என்று பெயர்

பனிப்போர் காலத்து துப்பாக்கிகளுக்கு ஆயுதம் என்று பெயர்
அந்த ஆயுதங்களை எதிர்த்தவர்களுக்கு பாட்டாளிகள் என்று பெயர்

மார்க்சியத்தின் மகத்துவத்திற்கு உண்மை என்று பெயர்
அந்த உண்மையின் குரலுக்கு யெச்சூரி என்று பெயர்

தமிழகத்தின் தொழிலாளிக்கு சிவப்பு என்று பெயர்
அந்த சிவப்பின் கீழ் போராடியவர்களுக்கு ஜீவா என்று பெயர்

கேரளத்தின் அரிவாளுக்கு புனர்ஜன்மம் என்று பெயர்
அந்த அரிவாளை ஏந்தியவருக்கு இ.எம்.எஸ் என்று பெயர்

வியட்நாமின் காடுகளுக்கு போர்க்களம் என்று பெயர்
அந்தப் போர்க்களத்தின் நாயகனுக்கு ஹோ சி மின் என்று பெயர்

கம்போடியத் தலைநகருக்கு பினோம்பென் என்று பெயர்
அந்நகரின் விடுதலைக்கு பொல் பொட் என்று பெயர்

ஆப்பிரிக்க நிலத்திற்கு கறுப்பு வெள்ளி என்று பெயர்
அங்கே எழுந்த புயலுக்கு பட்ரிஸ் லுமும்பா என்று பெயர்

வேர்களை மறந்த மரங்களுக்கு துரோகி என்று பெயர்
மண்ணோடு உறவாடும் வேர்களுக்கு தோழர் என்று பெயர்

மூலதனத்தின் தளைகளுக்கு விலங்கு என்று பெயர்
விலங்குகளை உடைத்தெறிந்த கொள்கைக்கு சமத்துவம் என்று பெயர்

உலகை அழிக்க நினைத்தவனுக்கு நாஜி என்று பெயர் 
அதன் கொட்டம் அடக்கியவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் 

வடக்கே எழுந்த சிகப்பு நட்சத்திரத்திற்கு கிம் இல் சுங் என்று பெயர்
தென்கிழக்காசியாவில் வீசிய காற்றுக்கு சுகார்னோ என்று பெயர்

ஏகாதிபத்தியத்தின் கையாளுக்கு அடிமை என்று பெயர்
அடிமைத்தனத்தை எதிர்த்தவனுக்கு இடதுசாரி என்று பெயர்

அரபு நாடுகளின் மணலுக்கு பாலஸ்தீனம் என்று பெயர்
அங்கு அலையடித்த உணர்வுக்கு விடுதலை என்று பெயர் 

தென் அமெரிக்க சூறாவளிக்கு பொலிவியா என்று பெயர்
அந்த சூறாவளியின் நாயகனுக்கு சைமன் பொலிவர் என்று பெயர்

கவித்துவமான எழுத்துக்கு நெருடா என்று பெயர்
எழுத்தாளனின் இயக்கத்திற்கு கார்க்கி என்று பெயர்

பேச்சின் வன்மைக்கு சாவேஸ் என்று பெயர்
செயலின் நேர்மைக்கு மண்டேலா என்று பெயர்

கலகத்தின் குரலுக்கு தாமஸ் சங்கரா என்று பெயர்
நீதியின் முயற்சிக்கு ரோசா லக்சம்பர்க் என்று பெயர்

வறுமையின் காரணத்திற்கு முதலாளித்துவம் என்று பெயர்
வறுமையின் நிவாரணத்திற்கு புரட்சி என்று பெயர்

உலகின் உழைப்பாளிகளுக்கு தொழிலாளி வர்க்கம் என்று பெயர்
தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிக்கு சர்வதேசியம் என்று பெயர்

உழைப்பாளி மக்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை என்று பெயர்
நம்பிக்கை தரும் அரசியலுக்கு கம்யூனிசம் என்று பெயர்

ஏழைகளின் உயிரைப் பறித்த கொள்ளைக்கு காலனியாதிக்கம் என்று பெயர்
காலனியாதிக்கத்தின் சாவுமணிக்கு பகத் சிங் என்று பெயர்

கடலில் இறங்கும் கதிரவனுக்கு ஏகாதிபத்தியம் என்று பெயர்
புதிதாய் உதிக்கும் சூரியனுக்கு மக்கள் ஜனநாயகம் என்று பெயர்

பெண் விடுதலையின் முன்னோடிக்கு கிளரா ஜெட்கின் என்று பெயர்
அவரின் பேரெழுச்சிக்கு பெண்கள் தினம் என்று பெயர்

சீனப் பெருஞ்சுவருக்கு நீண்ட பயணம் என்று பெயர்
அந்தப் பயணத்தின் தலைவனுக்கு மாவோ என்று பெயர்

வடக்கு அயர்லாந்தின் கிளர்ச்சிக்கு ஐரா என்று பெயர்
அந்தக் கிளர்ச்சியின் தூதுவனுக்கு பாபி சாண்ட்ஸ் என்று பெயர்

நீதிக்காக எரிந்த ஜெனினுக்கு துணிச்சல் என்று பெயர்
அந்தத் துணிச்சலின் நினைவுக்கு இன்திபாதா என்று பெயர்

ஒடுக்கப்பட்ட மண்ணுக்கு சிலி என்று பெயர்
அந்த மண்ணின் கவிஞனுக்கு அலெண்டே என்று பெயர்

மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமைக்கு பாண்டுங் என்று பெயர்
அந்த ஒற்றுமையின் குரலுக்கு நேதாஜி என்று பெயர்

சோவியத் கூட்டுப் பண்ணைக்கு கோல்கோஸ் என்று பெயர்
அந்தப் பண்ணையின் விளைச்சலுக்கு லைசென்கோ என்று பெயர்

வெறுப்பின் உச்சத்திற்கு பாசிசம் என்று பெயர்
பாசிசத்தை எதிர்த்த வீரனுக்கு கிராம்சி என்று பெயர்

புரட்சியின் வசந்தத்திற்கு பாரிஸ் கம்யூன் என்று பெயர்
வசந்தத்தின் வாழ்க்கைப் பாடத்திற்கு  மார்க்ஸ் என்று பெயர்

நீண்ட நெடிய வரலாற்றின் தொடக்கத்திற்கு கீழடி என்று பெயர்
அந்த வரலாற்றை நோக்கிய  பயணத்திற்கு சிவப்பு என்று பெயர்

சிலிர்த்து நின்ற தலைமைக்கு செம்மை என்று பெயர் 
சீறி நின்ற தலைவனுக்கு சங்கரய்யா என்று பெயர் 

ஓங்கி ஒலித்த வன்மைக்கு உறுதி என்று பெயர் 
உரத்து முழங்கிய குரலுக்கு தமிழ் என்று பெயர் 

ஒப்பற்ற உணர்வுக்கு காதல் என்று பெயர்
காதல் செய்யும் மனிதர்களுக்கு கம்யூனிஸ்டுகள் என்று பெயர்