articles

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு தமிழகத்தின் 2 கோடி இளைஞர்களை எழுச்சியுறச் செய்யும்

சிபிஎம் அகில இந்திய மாநாடு தமிழகத்தின்  2 கோடி இளைஞர்களை எழுச்சியுறச் செய்யும்

மதுரை மாநாட்டு வளாகத்தில் கே. பாலகிருஷ்ணன் பேட்டி

தாராம் யெச்சூரி நகர், மார்ச் 31 - “தமிழகத்தின் இரண்டு கோடி இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு அமையும்” என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். சீதாராம் யெச்சூரி நகரில் (மதுரை தமுக்கம் மைதானம்) திங்களன்று (மார்ச் 31) மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அளப்பரிய தியாகம் புரிந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அப்போது, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலம் முதல் ஏராளமான தாக்குதல்களையும் அடக்குமுறையையும் சந்தித்த இயக்கமாகும். சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை தாங்கி நடத்திய போதிலும், அதற்காக அளப்பரிய தியாகத்தை செய்த இயக்கம் மட்டுமல்லாது, அடக்குமுறையை எதிர்த்த இயக்கம். எனவே தான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்டுகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. பத்திரிகைகளைப் பறிமுதல் செய்தது. தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மீது கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. ஏராளமான  சதி வழக்குகளை தொடுத்தது. ஆனால், அத்தனையையும் தகர்த்தெறிந்து தான், கம்யூனிஸ்டு இயக்கம் வலுவாக வளர்ந்துள்ளது” என்று கே. பாலகிருஷ்ணன் கூறினார். அடக்குமுறைகளைத் தாண்டிஇன்று வலுவாக நிற்கிறது “நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை செய்தன கம்யூனிஸ்டுகள், சுதந்திரத்திற்குப் பின்னரும் மக்களின் அடிப்படை உரிமைகள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், விவசாயிகள் விவசாய தொழிலாளர்களுக்கான உரிமைகள், சமூகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகிறோம். அதற்காக கடும் அடக்குமுறையை சந்தித்தோம். காவல்துறை மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அவற்றையெல்லாம் முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கம்பீரமாக வளர்ந்து வருகிறது” என்றார். சதி வழக்குகள் எதற்கும் அஞ்சாத இயக்கம் “விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராடும் போது கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பண்ணையடிமைத் தனத்தை எதிர்த்தும், கூலி உயர்வு கேட்டும் போராடிய விவசாயத் தொழிலாளர்கள் வெண்மணியில் 44 பேர் தீயில் பொசுக்கப்பட்டனர். நெல்லை சதி வழக்கு, மதுரை சதிவழக்கு சென்னை சதிவழக்கு. தஞ்சை சதி வழக்கு என பல சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைக்கு உள்ளேயும் காவல்துறையை கொண்டும் ரவுடிகளை கொண்டும் கம்யூனிஸ்டுகள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்படி எல்லாம் செய்தால் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்து விடலாம் என்று அன்றைய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அதை எல்லாம் களம் கண்டுதான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பலம் பொருந்திய அமைப்பாக உருவெடுத்துள்ளது” என்று பெருமிதம் தெரிவித்த கே. பாலகிருஷ்ணன், “இதற்கு காரணமான தியாகிகளை நினைவு கூரும் வகையில் மாநிலத்தின் முக்கியமான பகுதிகளில் இருந்து தியாகச் சுடர்கள் மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறது; சென்னையில் இருந்து சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறைத் தியாகிகள், சின்னியம்பாளையம் தியாகிகள், வெண்மணித் தியாகிகள், மாணவ தியாகிகள் சோமசுந்தரம் - செம்புலிங்கம், மதுரை தியாகிகளின் நினைவாக தமிழக முழுவதும் இருந்து தியாகச் சுடர்கள் எடுத்து வரப்படுகின்றன” என்று கூறினார். குறுகிய பாதையிலிருந்து இளைஞர்களை மீட்போம் “இன்று பாஜகவை எதிர்த்து நாட்டில் பல அரசியல் கடமைகள் நிறைவேற்ற வேண்டியது இருந்த போதிலும் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான இளைஞர்களை சமூக அக்கறை உள்ளவர்களாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்று கூறிய கே. பாலகிருஷ்ணன், “இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர். தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளனர். பல விதமான சாதனைகளை படைக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட் இளைஞர்களை சாதிய அடிப்படையில், மத அடிப்படையில் வேறு வேறு குறுகிய நோக்கத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களையும் பாழ்படுத்தி, திறமையையும் சிந்தனையையும் பாழ்படுத்தும் நிலைக்கு ஆட்படுகின்றனர். அத்தகைய இளைஞர்களின் சக்தியை முழுமையாக வெளிக்கொணரும் வகையில்  சாதி, மத, மொழி வேறுபாடுகளை கடந்து எல்லாருக்கும் எல்லாம் இருக்கிற சமூகத்தின் பால் அக்கறை செலுத்தக்கூடிய இளைஞர்களாக மாற்றும் வகையில் அவர்களை எழுச்சியுறச்செய்வது மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.