articles

img

இடது ஜனநாயக முன்னணியை இலக்காக்கிய 21 ஆவது மாநாடு - எஸ்.பி.ராஜேந்திரன்

இடது ஜனநாயக முன்னணியை இலக்காக்கிய 21 ஆவது மாநாடு -  எஸ்.பி.ராஜேந்திரன்

விசாகப்பட்டினத்தில் 2015 ஏப்ரல் 14-19 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 21ஆவது அகில இந்திய மாநாடு நாட்டில் வலதுசாரி சக்திகளின் எழுச்சி மற்றும் கட்சி யின் தேர்தல் பின்னடைவுகள் என்ற சிக்கலான சூழலில் நடைபெற்றது. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின், பெரும் முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் ஆதரவுடன் புதிய தாராளமய கொள்கைகள் தீவிரமாக்கப் பட்டுள்ளன. இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்  மற்றும் இந்துத்துவ சக்திகள் தங்கள் வகுப்பு வாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க சாதக மான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

அரசியல் நடைமுறை உத்தியின் மறு ஆய்வு

21ஆவது மாநாடு கடந்த 25 ஆண்டுகளில் கட்சி அமலாக்கிய அரசியல் நடைமுறை உத்தியை விரிவாக மறு ஆய்வு செய்தது. 1992 முதல் பின்பற்றப்பட்ட அரசியல் நடை முறை உத்திகள் உடனடி நிலவரத்தை எதிர்கொள்ளவும், சூழலுக்கேற்ப காங்கிரஸ் அல்லது பாஜக எதிர்ப்புக்கும் வழிகாட்டின. இது வகுப்புவாத மற்றும் பிரிவினைவாத சக்தி களுக்கு எதிரான போராட்டங்களுக்கும்; கேரளா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசாங்கங்களை உருவாக்கவும் உதவியது. ஆனால் கட்சியின் வளர்ச்சி இந்த  மூன்று மாநிலங்கள் அளவிலேயே பெரும் பாலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

குறைபாடுகளும் திருத்தங்களும்

முந்தைய உத்தியின் முக்கியக் குறைபாடு, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியை - நடைமுறைப்படுத்தக்கூடிய முழக்கத்திலிருந்து தொலைதூர முழக்கமாக மாற்றியதாகும். அதற்கு பதிலாக, பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடன் ‘இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி’ என்ற ஒரு புதிய இடைநிலை கூட்டணி முன்மொழியப்பட்டது. ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால், பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும் புதிய தாராளவாதக் கொள்கைகளை ஏற்று, தேவைக்கேற்ப காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் இந்த உத்தி நடைமுறைக்கு வரவில்லை.

மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் 11 மாத ஆட்சிக்  காலமே (2015இல்) அது பெரும் முத லாளிகளின் நலனுக்காக செயல்படுவதை காட்டுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை அதி கரித்தல், நிலக்கரி துறை தனியார்மயமாக்கல், நிலக் கையகப்படுத்தல் சட்டத் திருத்தம் போன்ற புதிய தாராளவாத கொள்கைகள் தீவிர மாக்கப்பட்டுள்ளன. பொது செலவினங்கள், குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் நிதி குறைக்கப்பட்டு நூறு நாள்  வேலைத்திட்டம் ஐசிடிஎஸ் போன்ற திட்டங் களும் சிதைக்கப்பட்டுள்ளன. இது தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

இந்துத்துவ திட்டத்தின் அபாயம்

ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி  நிரலை கல்வி அமைப்பு, ஆராய்ச்சி நிறு வனங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகளில் புகுத்துகிறது. மக்களிடையே பசுப் பாதுகாப்பு, ‘லவ் ஜிகாத்’, வங்கதேச ஊடுருவல் போன்ற பிரச்சினைகளை எழுப்பி வகுப்புவாத பிளவுகளை ஏற்படுத்தி, சமூகத்தை மதவெறி அடிப்படையில் அணி திரட்டுகிறது.

வெளியுறவுக் கொள்கை: வலதுசாரி திருப்பம்

மோடி அரசாங்கம் அமெரிக்காவுடனான நீண்டகால ராணுவ சூழ்ச்சி சார் உறவுகளை தீவிரப்படுத்தி, அணிசேரா இயக்கத்திலிருந்து விலகி வருகிறது. இந்திய-அமெரிக்க பாது காப்பு ஒப்பந்தம் மேலும் பத்து ஆண்டு களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இராணுவ ஒத்து ழைப்பும் வலுப்படுத்தப்படுகிறது. இது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்தி ரேலியா இணைந்த நான்கு தரப்பு கூட்ட ணிக்கான (குவாட்) அமெரிக்க திட்டத்துடன் பொருந்துகிறது.

அரசியல் நடைமுறை உத்தியின் புதிய திசை

21ஆவது மாநாட்டின் புதிய அரசியல் உத்தி, வலதுசாரி தாக்குதலை எதிர்கொள்வதற்காக மக்கள் பிரச்சினைகளில் போராட்டங்களை வளர்ப்பதை மையமாகக் கொண்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை முக்கிய திசையாக வைத்திருந்தாலும், காங்கிரசும் அதே புதிய தாராளவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவதால் அதையும் எதிர்க்கிறது. காங்கிரசின் மக்கள் விரோத கொள்கைகளும் ஊழலும் தான் பாஜக ஆட்சிக்கு வர உதவிய தால், காங்கிரசுடன் எந்த புரிதலையும் கூட்டணி யையும் புதிய உத்தி விலக்கி வைக்கிறது.

சுயேச்சையான வலிமை மற்றும் இடதுசாரி ஒற்றுமை

புதிய உத்தி, கட்சியின் சுயேச்சையான வலிமையை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்து வம் அளிக்கிறது. வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்ப்பதன் மூலமும், உள்ளூர் பிரச்சினைகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், அனைத்து இடது சாரிக் கட்சிகள், குழுக்கள் மற்றும் தனிநபர் களை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதன் மூலம் இடதுசாரி ஒற்றுமையை விரி வுபடுத்த வேண்டும். தற்போது ஆறு இடதுசாரிக் கட்சிகள் கூட்டு நடவடிக்கைகளுக்காக ஒன்றி ணைந்துள்ளன, இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இடது ஜனநாயக முன்னணியின் எதிர்கால வடிவம்

இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்ன ணிக்குள் ஈர்க்கப்படக்கூடிய சக்திகளில் இடதுசாரிக் கட்சிகள், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள், காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் உள்ள ஜனநாயக பிரிவுகள், பழங்குடியினர், தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை ஏற்கும் சமூக இயக்கங்கள் அடங்கும். முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக தனித்துவமான ஒரு திட்டத்தின் அடிப்படையில் இந்த சக்திகளை ஒன்றிணைப்பதே இலக்கு.

எட்டு முக்கிய பணிகள்

21வது காங்கிரஸ் வலதுசாரி தாக்குதலை எதிர்கொள்ள எட்டு முக்கியப் பணிகளை வகுத்துள்ளது: 1.    புதிய தாராளவாதக் கொள்கைகளை உறுதியாக எதிர்த்து, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவுகளை அணிதிரட்டுதல் 2.பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அரசியல், சமூக, கலாச்சார, கருத்தியல் மற்றும் கல்வித் துறைகளில் எதிர்த்துப் போராடுதல் 3.ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து, அமெரிக்காவுடன் வளரும் ராணுவம் சார் சூழ்ச்சிகர உறவுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுதல் 4.தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை யினர் மற்றும் பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிகளை அதிகரித்தல் 5.ஜனநாயக உரிமைகள், கலை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்து, எதேச்சதிகார ஆபத்தை எதிர்த்துப் போராடுதல் 6.மேற்கு வங்கத்தில் கட்சி மற்றும் இடதுசாரி களுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல், திரிபுரா இடது முன்னணி அரசாங்கத்தை பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல் 7.கட்சியின் சுயேச்சையான வலிமை மற்றும் வெகுஜன தளத்தை மேம்படுத்தி, வர்க்க மற்றும் வெகுஜன பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல் 8.இடதுசாரி ஒற்றுமையை கட்டமைத்து விரிவுபடுத்தி, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்குதல்

வலிமையை மேம்படுத்த வாய்ப்பு

வலதுசாரி - வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு, புதிய தாராளவாதக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பது, சி.பி.ஐ(எம்) தனது வலிமையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு ஆகும். விசாகப்பட்டினம் மாநாட்டின் முக்கிய அழைப்பு, வலுவான கட்சி கட்டமைப்பு, இடதுசாரி ஒற்றுமையை விரிவுபடுத்துதல் மற்றும் இடதுசாரி-ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம் படிப்படியாக இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கு முன்னேற வேண்டும் என்பதாகும்.