articles

img

சிவப்பாக மாறிய வெள்ளைச் சட்டை தோழர் டி. லட்சுமணன்

சிவப்பாக மாறிய வெள்ளைச் சட்டை தோழர் டி. லட்சுமணன்

அரசுப் பணியில் கால்நடை ஆய்வாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, பணி உயர்வு, ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியம் என அரசுப் பணியின் எல்லா பலன்களையும் துறந்து, விருப்ப ஓய்வு பெற்று மார்க்சிஸ்ட் கட்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் தோழர் டி. லட்சுமணன். “இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று கார்ல் மார்க்ஸின் கருத்தை முரணாக்கி, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்து பொது இயக்கத்திற்காக வாழ்ந்த பண்பாளர்.  வளர்ச்சிப் பாதையும் வழிகாட்டிகளும்  மறைந்த தோழர் பி.ஆர். பரமேஸ்வரனின் வழிகாட்டுதலில் பொதுவுடமை இயக்கத்தில் பயணத்தைத் துவக்கிய டி.எல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். தோழர் ஏ. நல்லசிவனுடன் இணைந்து அரசுப் பணியாளர் உரிமைப் போரில் புதிய அத்தியாயம் படைத்தவர்.  அரசுப் பணியாளர் இயக்கத்தின் முன்னோடி  பணியில் சேர்ந்த நாள் முதலே தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட தோழர் டி.எல், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராக உயர்ந்தார்.

அரசுப் பணியாளர் சங்கத்தை தோற்றுவிப்பதற்கு முன்னரே அரசுப் பணியாளர் மாத இதழை வெளியிட்டு ஆசிரியராக பணியாற்றிய முன்னோடி. தோழர் எம்.ஆர். அப்பனுடன் இணைந்து அரசுப் பணியாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரானார்.  போராட்டக் களத்தில் துணிச்சலான தலைவர்  1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்-ஆசிரியர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்திய துணிச்சலான தலைவர். 2003ஆம் ஆண்டு போராட்டத்தை தோழர் என். வரதராஜனுடன் இணைந்து முன்னெடுத்தவர். “அரசுப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவதைப் போல, சாதாரண மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்” என்ற கொள்கையை வலியுறுத்தியவர்.  அறிவின் வேட்கை - அரசியல் கல்வியின் ஆசான்  செங்கல்பட்டிலிருந்து தினசரி மின் தொடர் வண்டியில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய அர்ப்பணிப்பு. கட்சி இலக்கியங்களை படிப்பதிலும், பிறருடன் விவாதிப்பதிலும் அசாத்திய ஆர்வம் கொண்டிருந்தவர். புதிய புத்தகம் வெளியானதும் அதைப் படித்துவிட்டாயா என வினவும் அவரிடம், “படித்துவிட்டேன்” என்று சும்மா சொல்லிவிட முடியாது. “என்ன படித்தாய், அதில் என்ன புரிந்தது” என விவாதத்திற்கு அழைத்துவிடுவார்.  “நேரமில்லை” என்பதை ஏற்காத உழைப்பாளி.

காலையில் எத்தனை மணிக்கு எழுகிறாய் என கேட்டு, “ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து புத்தகத்தைப் படி” என்று அறிவுரை வழங்கும் ஆசான். இரவு எந்த நேரம் உறங்கச் சென்றிருந்தாலும், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புத்தகத்துடன் காணப்படும் அசாத்திய உழைப்பாளர்.  எழுத்தின் வல்லமை  படிப்பதோடு மட்டுமின்றி, எழுதுவதிலும் திறமை மிக்கவர் தோழர் டி.எல். தீக்கதிரில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1980ஆம் ஆண்டில் இந்திய அரசு முதன்முதலில் உலக வங்கியிடம் கடன் வாங்கியபோது, “அதோ ஒரு ஆபத்து” என்ற தலைப்பில், கடன் வாங்குவதால் மக்களின் உரிமைகள் எவ்வாறு அடகு வைக்கப்படுகின்றன என்பதை முன்னுணர்ந்து எழுதினார். 45 ஆண்டுகள் கழித்து இன்று அந்தப் புத்தகத்தைப் படித்தால் அவரது நுண்ணிய அறிவாற்றலை புரிந்துகொள்ள முடியும்.  மக்களுக்கான அரும்பணிகள்  அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ச்சியாக அரசுப் பணியாளர் இயக்கங்களுக்கு வழிகாட்டி வந்தவர்.

கிராம உதவியாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என். சங்கரய்யாவுடன் அன்றைய முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து பழிவாங்கும் நடவடிக்கையிலிருந்து மீட்டுவந்தவர். சத்துணவு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தபோது அவர்களைப் பாதுகாக்க அரணாக நின்றவர்.  அரசுப் பணியாளர்களின் வேலைக் கலாச்சாரத்தை வடிவமைத்தவர்  வருவாய்த்துறை அலுவலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தீர்க்கமாக முடிவெடுத்து, “வேலைக் கலாச்சாரம்” என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் கருத்தரங்குகள் நடத்திய முன்னோடி. “நடப்பில் உள்ள சட்டங்கள் மூலம் நம்மை நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு நம்மால் உதவ முடியும்” என்ற நம்பிக்கையை அரசுப் பணியாளர்களிடையே விதைத்தவர். அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் “ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு காரணமாக இருந்தவர்.  

முதுமையிலும் ஓயாத உழைப்பு  முதுமையடைந்தும் கட்சி தனக்களித்த பணிகளை தட்டாமல் நிறைவேற்றிய உழைப்பாளி. மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை தமிழ்நாட்டில் உருவாக்க மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அச்சங்கத்தை வளர்த்தெடுத்தவர். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர்.  மரணம் தன்னை நெருங்கியபோதும் ஓய்வறியாமல், தனது இறுதி மூச்சுவரை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பொறுப்பேற்று பம்பரமாகச் சுழன்று அவ்வியக்கத்தை உருவாக்கிய தளராத மனம். சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திய மக்களின் தலைவர். “அவர் வருகிறார்” என்றாலே, அவரைக் கண்டு, செல்ல, குறைகளைச் சொல்ல சிறுபான்மை மக்கள் திரண்டு வந்த அளவுக்கு மக்களுடன் உறவு கொண்டிருந்தவர்.  

அமரத்துவம் பெற்ற அற்புத மனிதர்   “எல்லோருக்கும் நிரந்தரமாக தூங்கும் காலம் ஒன்று வரும், அப்போது போதுமான ஓய்வு கிடைக்கும்” என்று கூறி மற்றவர்களை ஊக்குவித்த தளராத மனம் கொண்டவர். எளிமையின் சிகரமாக, அறிவின் பெட்டகமாக, ஓய்வறியா உழைப்பாளியாக திகழ்ந்த தோழர் டி.எல். அரசுப் பணியாளர் சங்க வரலாற்றில் மட்டுமல்ல, பொதுவுடமை இயக்க வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்ற தோழர்.  தொழிற்சங்க இலக்கணம் வகுத்து, மக்களுக்காக பணியாற்ற பொதுவுடமைக் கொள்கையை ஏற்று உழைத்து, தன் வெள்ளைச் சட்டையை சிவப்பாக மாற்றிய தோழர் டி. லட்சுமணன் அவர்களுக்கு செவ்வணக்கம்.