articles

img

பிரிவினையைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ ஆரத்தி எடுத்து வரவேற்கும் ஒன்றிய அரசு! - பி.ஆர்.அரவிந்தாக்சன்

பிரிவினையைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’  ஆரத்தி எடுத்து வரவேற்கும் ஒன்றிய அரசு!

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு  - என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.  மழை இல்லாது போனால் இவ்வுலகம் எத்தகைய துயரத்தை அடையுமோ, அத்தகைய துயரத்தை நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் வாழும் உயிர்கள் அடையும் என்பதே இதன் பொருள்.

140 கோடி மக்கள் வாழும்  இந்தியத் திருநாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், 30 கோடி மக்கள் மீது வெறுப்பை உண்டாக்க அப்பட்டமாக உதவி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆதாரமற்ற அவதூறுகளும்  டீசர் அரசியலும் சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி-2’ திரைப்படத்தின் டீசரை (2026 பிப்.17) சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“இறைவன் நாடினால்.. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும்; ஷரியா சட்டங்கள் அமல்படுத்தப்படும்” என்ற ஆண் பின்னணிக் குரலோடு தொடங்கும் இந்த டீசர், அபத்தத்தின் உச்சம். ஏற்கெனவே முதல் பாகத்தின் டீசர் வெளியானபோது, “10 ஆண்டுகளில் 32,000 பெண்கள் கேரளாவில் இருந்து மட்டும் மதமாற்றம் செய்யப்பட்டுத் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்” என்று அப்பட்டமான பொய்யைப் பரப்பினர். 10 வருடத்தில் 32,000 பெண்கள் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்றால், நாளொன்றுக்கு 9 பெண்கள் இந்தியாவில் தீவிரவாதி களாக மாறுகிறார்கள் என்று அர்த்தம்.

உண்மைச் சம்பவம் என்று கூறி இத்திரைப்படம் சித்தரிக்கும் இத் தகவல்கள் குறித்து, 2022-லேயே ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு நான் விரிவான புகார் மனுக்க ளை அனுப்பினேன். ஆனால், ஒன்றிய அரசு ஒரு இம்மி அளவு கூட அந்தப் புகார்களைப் பொருட் படுத்தவில்லை.

தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களும் ஒன்றிய அரசின் அலட்சியமும் 2022 செப்டம்பர் 12 அன்று உள்துறை அமைச்ச ருக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2023 ஏப்ரல் 24 அன்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. உடனடியாக, ஏப்ரல் 28 அன்று மீண்டும் உள்துறைச் செயலாளர் மற்றும் தகவல் அமைச்சகத்திற்கு மனு அனுப்பப்பட்டது. லவ் ஜிகாத் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் தொடர்பாக ஒன்றிய அரசு வழங்கிய ஆர்.டி.ஐ (RTI) பதில்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கிய பதில்கள் என அனைத்து ஆதாரங்களையும் இணைத்தே அந்தப் புகாரை அளித்தேன்.

அதாவது திரைப்படத்தில் சொல்லப்படும் தகவல்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் தரவுகளோடு அனுப்பிய மனுவை ஒன்றிய அரசு துளியும் மதிக்கவில்லை. இதற்கிடையில், உச்சநீதிமன்றம், கேரளா மற்றும் மேற்கு வங்க உயர்நீதிமன்றங்களில் தடைகோரி வழக்குகள் தொடரப்பட்டன.

தயாரிப்பு நிறுவனம் “திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் காட்சிகள் கற்பனை யானவை” என்று ஒரு ‘டிஸ்க்ளைமர்’ (Disclaimer) கூடப் போட முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கை, கடைசி நேரத்தில் வந்ததாகக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதி மன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் 32,000  என்ற எண்ணிக்கை குறித்து எந்தவிதமான அதிகா ரப்பூர்வத் தரவுகளும் இல்லை என்பதை நீதிமன்றத் திலேயே ஒப்புக்கொண்டது.

ஆனாலும், நீதிபதிகள் படத்தைப் பார்த்துவிட்டுத் தடைகோரும் மனுக்கள் மீது விசாரணை நடத்துவதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால் நடந்தது என்ன? 34 மாதங்கள் ஓடிவிட்டன, நீதிபதிகள் படத்தைப் பார்க்க வும் இல்லை, வழக்கு விசாரணைக்கு வரவும் இல்லை. அதற்குள் இரண்டாம் பாகம் வந்துவிட்டது.

தூர்தர்ஷன் முதல் ஓடிடி வரை:  அரசின் பாரபட்சமான ஆதரவு வெறுப்பைத் தூண்டி 200 கோடி ரூபாய் லாபம் பார்த்த பிறகு, சன்ஷைன் நிறுவனம் தனது டீசர் வீடியோவை யூடியூப் தளத்தில் ‘பிரைவேட்’ (Private) செய்து முடக்கிவிட்டது. அத்தோடு நின்றதா என்றால் இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை  அமைச்சகம், பிரச்சார் பாரதி சார்பில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய திரைப்படத்தை வாங்கி, நாடு முழுக்க ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சியில் வெளி யிட்டது.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு ஊடகமே பிரிவினையைத் தூண்டும் இப்படத் திற்குப் பூரண ஆதரவை வழங்கியது. வலதுசாரி அமைப்புகள் கொடுக்கும் மனுக்கள் மீது ஒன்றிய அமைச்சகம் எப்படி மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் தெரியுமா? ‘ஜீ தமிழ்’ தொலைக் காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கடவுள் வேடமிட்டு ஆடியது தொடர்பாக, ஒரு வலதுசாரி அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட 33 நிமிடங்களில், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று கூடப் பார்க்காமல் அமைச்ச கம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.

ஆனால், கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக மாநில முதல மைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அத்தனை கடிதங்களையும் ஒன்றிய அரசு குப்பைத் தொட்டியில் வீசியது. அதிகாரப்பூர்வத் தரவுகளும்  ‘லவ் ஜிகாத்’ கட்டுக்கதைகளும் உண்மையில் ‘லவ் ஜிகாத்’ குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் என்ன கூறியுள்ளது? 20-12-2017 அன்று மாநிலங்களவையில் உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு, ஐஎஸ்ஐஎஸ் (ISIS) ஆதரவு மனநிலை கொண்ட 103 நபர்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கூறியது.

அதேபோல் 04-02-2020 அன்று மக்களவையில் லவ் ஜிகாத் தொடர்பாக உறுப்பினர் பென்னி பெஹான் கேட்ட கேள்விக்கு, “லவ் ஜிகாத் தொடர்பாக மத்திய  ஏஜென்சிகளால் ஒரே ஒரு வழக்கு கூட பதிவு செய்யப் படவில்லை” என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார். இன்றைய தேதி வரை இதுதான் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணம்.

ஆனால், ஒன்றிய அரசோ ஆதாரமற்ற இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமோ மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சில பெண்களை மேடையேற்றித் தனது பித்த லாட்டத்தை நியாயப்படுத்தியது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுப் பெண்களை மயக்கித் தீவிரவாதிகளாக மாற்றுகிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்க ஒன்றிய அரசு எல்லா வகையிலும் அனுமதிக்கிறது. வள்ளுவர் காட்டும் நீதி கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணினால், அதுவே தான் கெடப் போவதற்குரிய அறிகுறி என்கிறார் வள்ளுவர். ஆனால், இந்தியாவில் ஆளும் அரசே நீதியைத் துறந்துவிட்டு, சொந்தக் குடிமக்களுக்கு எதிராகத் தெரிந்தே அநீதியை இழைக்கிறது. இப்படி ஒரு பாரபட்சமான ஆட்சி உலகில் எங்கும் நடக்காது. கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்