articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்.... அண்ணல் காந்தி குடும்பத்தில் ஒரு கம்யூனிஸ்ட் போராளி....

மகாத்மா காந்தியின் பேரனும் (தேவதாஸ் காந்தி மகன்) மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி சென்னையில் வசிக்கிறார். அண்மையில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்தபோது, அவரது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். வரலாறும் வாழ்க்கையும் கலந்த பல விவரங்களைச் சொன்ன அவர், தனது பெரியப்பா மணிலால் காந்தி, அவரது மகள் இலா காந்தி ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டார். அவரது உதவியுடன், தென் ஆப்பிரிக்காவில் வாழும் இலா காந்தியோடு ஜி.ராமகிருஷ்ணன் தொடர்புகொண்டு மின்னஞ்சல் வழியாகப் பேட்டி கண்டதன் அடிப்படையில் ‘தீக்கதிர்’ வாசகர்களுக்கு இக்கட்டுரையை அளிக்கிறார்.

கம்யூனிச சித்தாந்தமும் சோசலிச லட்சியமும்உலகத்திற்கே பொதுவானவை. ஆகவேதான்புவிக்கோளின் எந்தப் பகுதியிலும் அந்தஅடிப்படை மாற்றங்களை நெஞ்சிலேந்திச் செயல்படுகிறவர்கள் களப்பணி ஆற்றுகிறவர்களாகிறார்கள். ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காகப் பாடுபட்டு வந்திருப்போரையும், இந்தியாவின் வேறு சில மாநிலங்களில் பணியாற்றியிருப்போரையும் சந்தித்திருக்கிறோம். இப்போது, தென் ஆப்பிரிக்காவில் களப்பணியாற்றிய ஒருபோராளித் தோழரைச் சந்திக்கவுள்ளோம். அவர் தோழர்இலா காந்தி. அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பங்களித்தவர்; இவற்றோடு, தென் ஆப்பிரிக்காவில் எதிர்கொண்ட அனுபவங்களால் உந்தப்பெற்று இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு தலையாய அத்தியாயமாகிவிட்ட மகாத்மாகாந்தியின் பேத்தி இவர். காந்தியைப் போலவே ஆன்மீக ஈடுபாடும் கொண்டவரான இலா, தனது சமத்துவ லட்சியமோ இறையியல் நம்பிக்கையோ ஒன்றுக்கொன்று தடையாக இல்லை என்கிறார்.

இருபெரும் இயக்கங்கள்
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களையும் பிற பிரிவினரையும் ஒடுக்கியாண்ட வெள்ளை நிறவெறி ஆட்சி உலகின் அவமானங்களில் ஒன்று. அதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நடத்திய நெடிய போராட்ட வரலாறு உலகின் பெருமிதங்களில் ஒன்று. அந்த வரலாற்றை நிகழ்த்திய இயக்கங்களில் ஒன்றான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) 1912ஆம் ஆண்டு உருவானது. மற்றொரு இயக்கமான தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி(எஸ்ஏசிபி) 1921ல் உதயமானது. இந்த இரண்டு அமைப்புகளின் தலைமையில், அடக்குமுறை அரசின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டம் உள்ளிட்ட பல வடிவங்களில் வீரஞ்செறிந்த மக்கள் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றது. அந்த இயக்கத்தின் வெற்றிப் பயணத்தில் ஒரு கட்டமாக, 1934ல் தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ்பேரரசுக்கு உள்ளேயே ஒரு தன்னாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 1961ல் ஒரு குடியரசாகஅறிவிக்கப்பட்டது.  1994ஆம் ஆண்டில்தான் அந்த நாடுநிறவெறி ஆட்சிக்கும் அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சுதந்திரமான ஜனநாயக நாடாக உருவெடுத்தது. 27 ஆண்டுக்காலம் நிறவெறி ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டு, 1990ல் விடுவிக்கப்பட்ட விடுதலை வீரர்  நெல்சன் மண்டேலா ஜனநாயகத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் 1994ல் அந்த நாட்டின் முதல் குடியரசுத்தலைவரானார். நிறவெறிக்கு எதிரான அந்தப் போராட்டம் படிக்கப்பட வேண்டிய தனியொரு மகத்தான வரலாறு. 

தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் மகன்
1893ல் ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் ஒப்பந்தத்தின் கீழ் தென் ஆப்பிரிக்காவுக்குத் தனது24வது வயதில் சென்றார் காந்தி. 1896ல் மறுபடியும் அவர்அங்கே சென்றபோது அவரது வாழ்க்கைத் துணை கஸ்தூரிபா உடன் சென்றார். 22 ஆண்டுகள் அங்கே வாழ்ந்த காந்தியை வெள்ளை நிறவெறியர்கள் அவமானப்படுத்தியதும், அங்கு வாழ்ந்த இந்திய மக்கள் அத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாகியிருந்ததும், அந்த நிறவெறிக்கு எதிராக இந்தியர்களைத் திரட்டிப் போராடியதும் வரலாற்றில் நாம் அறிந்த பக்கங்கள். காந்திஜியின் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட வாழ்க்கைக்கு முன்னுரை எழுதியதுதென் ஆப்பிரிக்க வாழ்க்கைதான். கோகலே விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய விடுதலை இயக்கத்தில் இணைவதற்காக 1915ல் நாடு திரும்பினார் காந்தி. ஆயினும் அவரது இரண்டாவது மகன் மணிலால், அவரது இணையர் சுசீலா இருவரும் அங்கேயே தங்கிவிட்டனர்.தென் ஆப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டதோடு, மணிலால், சுசீலா, அவர்களின்  மகள் இலா காந்தி,  மருமகன் ராம் கோபின் ஆகிய நால்வரும்,  காந்தி விரும்பியது போலநிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தனர். இலாவின் தாயார் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கப் பள்ளிகளைப் புறக்கணிப்போம் என்ற போராட்ட அறைகூவலை ஏற்றுப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தபின் கணவரோடு இணைந்துஅச்சகம், காந்தி தொடங்கியிருந்த ‘இந்தியன் ஒப்பினியன்’ என்ற பத்திரிகை, பீனிக்ஸ் ஆசிரமம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு அனுபவக் கல்வி பெற்றார்.

இலா காந்தி
1940ல் தென் ஆப்பிரிக்காவிலேயே பிறந்தவரான இலா காந்தியின் தொடக்கக் கல்வி வீட்டிலேயேதான் அமைந்தது. அது தனது ஆன்மீகப் புரிதல்களோடும் இணைந்திருந்ததாகத் தெரிவிக்கிறார். 9 வயதில், அரசாங்க நிதியுதவியுடன் இயங்கிய ஒரு பள்ளியில் முறைசார் படிப்பில் சேர்ந்தார். பின்னர் பெண் குழந்தைகளுக்கான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளையர்களாக இருந்த அந்தப் பள்ளிச் சூழலிலேயே நிறவெறிப் பாகுபாட்டை நேருக்கு நேர் கண்டார் இலா. 1963ல் நேட்டால் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார். பட்டமளிப்பு விழா வெள்ளையர்களுக்கு தனியாகவும், இந்தியர்கள் உள்ளிட்ட கறுப்பின மாணவர்களுக்கு தனியாகவும் நடந்தது. வகுப்புகள் கூட வெள்ளையர்களுக்கு வசதியான வகுப்பறைகளிலும், இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாணவர்களுக்கு வகுப்பறைகளாக மாற்றப்பட்ட பல்கலைக்கழகக் கிட்டங்கிகளிலும் நடத்தப்பட்டன.  இந்தப் பாகுபாட்டை எதிர்த்து அப்போதே இலா காந்தி சக மாணவர்களைத் திரட்டிப் போராடினார்.

தனது பெற்றோர் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தது தனக்குப் பெரிதும் ஊக்கமளித்தது என்கிறார் இலா காந்தி.  நேட்டால் இந்தியர் காங்கிரஸ் என்ற அமைப்பில் துணைத் தலைவராக செயல்பட்டார். சமுதாய சமத்துவ எண்ணங்களோடு செயல்பட்ட இவருக்குஇயல்பாகவே சோசலிச லட்சியங்களில் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. சோசலிச அமைப்பில்தான் சமத்துவத்தைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடு வளர்ந்தது. 

கம்யூனிஸ்ட்டுகளுடன் நெருக்கம்
“என்னுடைய பெற்றோருக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பலரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். அவர்களோடு கருத்து வேறுபாடுகளை மனந்திறந்து விவாதிப்பார்கள். அந்த விவாதங்களைக் கேட்கிற வாய்ப்பும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களோடு பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன” என்றார் இலா.நிறவெறி ஆட்சிக்கு எதிராக ஏஎன்சி, எஸ்ஏசிபி இரண்டுஇயக்கங்களும் மேற்கொண்ட போராட்டத்தின் அடிப்படையாக இருந்தது “சுதந்திர சாசனம்” என்ற திட்டம். அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம்பெருமளவுக்கு இருந்தது” என்கிறார்.

விடுதலை என்பது அதிகார மாற்றம் மட்டுமல்ல; நாட்டின்வளங்களும் வாழ்வாதாரங்களும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தால் இலா காந்தி வெகுவாக ஈர்க்கப்பட்டார். அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், குடியிருக்க வீடும் பசிக்கு உணவும் உத்தரவாதப்படுத்துதல் ஆகியவைகளை முதலாளித்துவத்தில் நிறைவேற்ற முடியாது; சோசலிச தத்துவத்தால்தான் அந்த லட்சியங்கள் சாத்தியமாகும் என்ற முடிவுக்கு வந்தார். இந்தப் பின்னணியில் அவர் 1996ஆம் ஆண்டு முறைப்படி தென்ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். சில ஆண்டுகளில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். மாணவப் பருவத்திலேயே அரசியலிலும் சமூக சேவையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவருக்கு, முதலாளித்துவத்தால் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியாது,சோசலிசமே தீர்வு என்ற தெளிவு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு மேலும் உறுதிப்பட்டது.  

போராட்டப் பள்ளியில்…
தந்தை மணி லால் நிறவெறி ஆட்சிக்கு எதிரான சட்டமறுப்பு இயக்கத்தை 1952ஆம் ஆண்டு நடத்தியபோது அவர்அளித்த ஊக்கத்தால் தனது 12 வயதிலேயே அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர் இலா. மாணவப் பருவத்திலும், அதற்குப் பிறகும் தொடர்ச்சியாகநடைபெற்ற நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாதங்கள்மக்கள் இயக்கங்களிலேயே மேல் தட்டினரின் அணுகுமுறைக்கும் வெகுமக்கள் சார்ந்த அணுகுமுறைக்குமான வேறுபாடுகளைப் புரிய வைத்தது என்கிறார். வளாகத்திற்குள் நிலவிய நிறவெறிப்போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணிப்பது, அத்தகைய விழாக்கள் நடைபெறும்போது மறியல் செய்வது போன்ற ராட்டங்களில் சக மாணவர்களைத் திரட்டி நடத்தியிருக்கிறார். ஏழை மக்களுக்கான வீட்டுவாடகை உயர்த்தப்பட்டபோது, வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டபோது டர்பன் குடியிருப்பு நடவடிக்கைக் குழு, கூட்டு வாடகை நடவடிக்கைக் குழு போன்ற குழுக்களை ஏற்படுத்திப் போராடியிருக்கிறார்.இத்தகைய போராட்டங்கள் சிறையில் தள்ள வைத்திருக்குமே? அது பற்றிக் கேட்டபோது, தன்னை நிறவெறி ஆட்சி சிறைக் கொட்டடியில் அடைக்கவில்லை, ஒரே ஒரு முறை காலையில் கைது செய்து முகாமில் வைத்திருந்து மாலையில் விடுவித்துவிட்டார்கள் என்றார். ஆனால்,நிறவெறிக்கு எதிராக போராடியதற்காக 1973ஆம் ஆண்டிலிருந்து 9 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக கூறினார். கணவர் கட்சியில் இணையவில்லை என்றாலும் போராட்டங்களில் பங்கெடுத்தார், 6 மாத சிறைவாசமும் அவருக்குக் கிடைத்தது. இருவரின் இந்தச் சிறை அனுபவங்கள் தங்களுடைய மூன்று குழந்தைகளையும் வெகுவாக பாதித்திருக்கிறது. ஆயினும் அவர்கள் போராட்டங்களை ஆதரிப்பவர்களாகவே வளர்ந்தார்கள். “1993ல் எங்கள் மகன் சந்தேகத்திற்கான முறையில் கொலை செய்யப்பட்டான். நிறவெறி சார்ந்த குற்றச் செயல் என்று அந்தவழக்கு முடிக்கப்பட்டது,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மண்டேலா மற்றும் சிஸ்லூவுடன் சந்திப்பு 
தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் மகத்தானதலைமை நாயகர் நெல்சன் மண்டேலா, ராபென் தீவுச் சிறையிலிருந்து விடுதலையாவதற்கு ஒரு நாள் முன்பாகவும், விடுதலைக்குப் பிறகும் அவரைச் சந்தித்துப் பேசியதை இப்போதும் பெருமிதமாக உணர்வதாகக் கூறுகிறார் இலாகாந்தி. அவருடைய எளிமையும், வெளிப்படையான நேர்மையான வாதங்கள் தன்னை மிகவும் ஈர்த்தன என்கிறார். தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் வால்டர் சிஸ்லூ, அதே ராபென் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவரையும் சந்தித்துப் பேசினார் இலா. “தோழர் சிஸ்லூ, அவரது இணையர் அல்பெர்டினா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களுமானார்கள். இருவருமே அற்புதமான மனிதர்கள்,” என்கிறார்.
நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இவரை 1994ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது. சமூகவெளியில் அதிகப் பணிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் கருதி, பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாகவே 2003ல் விலகிவிட்டார்.“என்னுடைய ஆன்மீக நம்பிக்கைகளுக்குக் கம்யூனிஸ்ட்கட்சியோ, கட்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆன்மீகமோ தடையாக இருந்ததில்லை” என்றும் குறிப்பிடுகிறார் இலாகாந்தி.இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள். ஒரு மகன் கொல்லப்பட்டார். மற்றவர்களும் தானும், தென் ஆப்பிரிக்காவிலேயே வசித்து வருவதாக கூறினார். தற்போது 80 வயதாகும் இலா காந்தி உடல் நிலை சார்ந்த காரணங்களால் கட்சியின்அங்கமாக இருந்து இயக்கப்பணி செய்ய இயலவில்லை என்று தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததால் பல உன்னதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது என்றும், அதனால் உலகத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தனது உறவினர்களோடு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். கடந்த காலங்களைப்போல் தீவிரமாக இயக்கப்பணி ஆற்றமுடியவில்லை என்றாலும், காந்திஅறக்கட்டளை, பீனிக்ஸ் அறக்கட்டளை ஆகிய இரண்டுஅமைப்புகளை வழி நடத்துவதில் பிரதான பாத்திரம் வகித்துவருகிறார். ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளைகள், அண்ணல் காந்தி ஆர்.எஸ்.எஸ். கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாகவும் மதநல்லிணக்கம் உள்ளிட்ட சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசெல்வதாகவும் தெரிவிக்கிறார். இக்கட்டுரை வெளியாகும் இன்றைய நாளில் (2021 ஜனவரி 30) அறக்கட்டளை சார்பில் நல்லிணக்க நிகழ்ச்சிகளை நடத்துகிறார் இலா காந்தி. அவர் அனுப்பியுள்ள அழைப்பிதழை பார்க்கிறபோது நமக்குப் பெருமிதம், உலகளாவிய உறவுகள் மீதான நம்பிக்கை இரண்டும் மேலோங்குகின்றன.

உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டுவதற்காக, சமூக மாற்றத்திற்காக, சோசலிச லட்சியத்திற்காக கம்யூனிஸ்ட் இயக்கம் போராடி வருகிறது. அத்தகைய இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார் இலா காந்தி. அண்ணல் காந்திஜியின் குடும்பத்தில் ஒரு கம்யூனிஸ்ட் போராளி இருப்பது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது.

ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்